எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை

எனது சிறுகதைத் தொகுப்பு 'இனி நான் டைகர் இல்லை'
உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அதில் உள்ள எனது முன்னுரை:




தொலைந்த கதைகள்



1970களில் வாழ்க்கையோடு சேர்த்து கதைகளையும் தொலைத்துக் கொண்டிருந்த இளைஞனாக நான் இருந்தேன். எனது முதல் சிறுகதை தாமரையில் இளமதி என்ற புனைபெயருடன் வெளிவந்தது. அந்தத் தாமரை இதழைக்கூட நான் பார்த்ததில்லை. ஆண்டும் மறந்துவிட்டது. பள்ளிக்குச் செல்லும் வழியில் பறக்கும் தட்டானைப் பிடிக்கச் செல்லும் சிறுமியின் சட்டை முள்ளில்பட்டுக் கிழிந்துவிட, அவள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கிறாள். அவளது பாவாடை நூலில் கட்டப்பட்ட தட்டான் பட பட என்று றெக்கைகளை அடித்தபடி தவிக்கிறது. அப்பாவுக்குத் தெரிந்தால் அவளுக்கும் அடி விழும் அவளது அம்மாவுக்கும் அடி விழும். அந்தச் சிறுமி நூலை அவிழ்த்து தட்டானை விடுவிக்கிறாள். இப்படித்தான் அந்தக் கதையை எழுதியிருந்ததாக ஞாபகம். அந்தக் கதையைத் தேடியும் கிடைக்கவில்லை. பாளையங்கோட்டையில் படித்துக் கொண்டிருந்த போது நண்பரும் ஆசிரியருமான சிவசு நடத்திய ஒரு பத்திரிகையில் ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு நண்பனைத் தேடி பசியோடு திசை தெரியாமல் நடந்து கொண்டே இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை அது. ஒரு இடத்தில் மீன்பிணங்கள் என்று எழுதியிருந்ததை நண்பன் ந.முருகேசபாண்டியன் ஆட்சேபம் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதையும் தொலைந்துவிட்டது. அந்தக் கதையைப் பாராட்டி உற்சாகம் அளித்த நண்பர் ஜோதிவிநாயகமும் தொலைந்துவிட்டார்.


சென்னை வாழ்க்கையின் போது நம்பி அண்ணாச்சி தந்த உற்சாகத்தில் ஒரே மாதத்தில் நான்கு கதைகள் எழுதினேன். ஒரு கதையின் தலைப்பை ஆங்கிலத்தில் என்கவுண்டர் என்று யோசித்து தமிழில் 'சந்திப்பு' என்று வைத்தேன். 'கபிலா' என்ற புனைபெயருடன் அந்தக் கதை வலம்புரிஜான் நடத்திய 'தாய்' இதழில் வெளியாகியது. வலம்புரிஜான் என்னை நேரில் வரவழைத்து பாராட்டி ஒரு புதிய 100 ரூபாய்த்தாளைக் கொடுத்தார். அது ஒரு மறக்கவே முடியாத நாள். ஏனெனில் அந்த நாளுக்கு முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். நம்பி என்னை சத்தம் போட்டு சும்மா வாடா என்று நெல்சன்மாணிக்கம் சாலையில் இருந்த தாய் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். நாயர்கடை டீயிலும் பன்னிலும் கழிந்த நாட்கள் அவை. 33, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலத்தில் இருந்தபோது ஒரு நேரம் காலையில் குழாய்ப்புட்டை சைனா டீயில் பிசைந்து சாப்பிட்டு (அதுவும் அக்கவுண்டில்) ஒரு முழு மாதத்தையும் கழித்திருக்கிறேன். இந்த 'சந்திப்பு' கதையை இயக்குனர் சேரன் தனது ஆட்டோகிராப் படத்தில் முதல் அத்தியாயமாக வரிக்குவரி மாற்றாமல் அப்படியே அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார். அந்த சமயத்தில் எழுதிய மூன்று கதைகளை இளவேனில் நடத்திய கார்க்கி இதழுக்குக் கொடுத்திருந்தேன். கார்க்கி இதழும் வரவில்லை. அந்தக் கதைகளும் தொலைந்து போயின. ஒரு கதை இந்துமதி நடத்திய 'அஸ்வினி' என்ற இதழில் வந்தது. முன்றிலில் வெளியாகிய கதை கிடைத்துவிட்டது. எனது அன்புக்குரிய நன்பர் மா.அரங்கநாதன் கேட்ட மறுநாளே அனுப்பிக் கொடுத்தார். 'மன ஓசை'யில் வெளியாகிய கதை அண்மையில் வெளியாகியிருக்கும் 'மன ஓசை' கதைத் தொகுப்பில் இருக்கிறது. பல கதைகள் எழுதப்பட்டும், கிழிக்கப்பட்டும் தொலைக்கப்பட்டும் போயே போயின.


2007ல் எனக்கு ஒரு இதயத்தாக்கு ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் எல்லாம் செய்து ஒரு நான்கு மாத விடுப்பில் வீட்டில் இருந்தேன். கல்லூரிப்படிப்பை முடித்ததும் ஆறு மாதங்கள் எந்த வேலையும் செய்யாமல் கிராமத்தில் இருந்த அந்த அற்புத நாட்களை இந்த நான்கு மாதங்களில் மீண்டும் அடைந்தேன். இதயத்தாக்கின் போது மூளையிலும் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகங்கள் பல அழிந்த நிலையில் ஒரு குழந்தையின் குதூகலம் எனக்குக் கிட்டியது. நிறைய இசை கேட்டேன். நிறையப் படித்தேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். என் வாழ்வில் நடந்த எல்லாக் கசப்புகளும் மறந்துபோயின அந்த அற்புத நாட்களில் நான் கண்ட ஒரு கனவை அப்படியே ஒரு கதையாக எழுதினேன். 'மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்' என்ற அந்தக் கதை 'உயிர் எழுத்து' இதழில் பிரசுரமாகியது. நண்பர் தேவதச்சன் அந்தக் கதையை வெகுவாகப் பாராட்டினார். சிதறடிக்கப்பட்ட ஞாபகங்களின் கோர்க்கப்படாத இசையொன்று அந்தக் கதைக்குள் நுழைந்திருப்பதை இப்பொழுது அவதானிக்க முடிகிறது. டோரிஸ் லெஸ்ஸிங்கின் 'புல் பாடிக் கொண்டிருக்கிறது' புதினத்தைப் படித்ததும் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். புல் பாடும் ரொடீசியாவின் நிலக்காட்சி மூலம் எனது கிராமத்தின் நிலக்காட்சிகளை நான் மீட்டுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கதைகள் எழுதத் தொடங்கினேன். ஓரன் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' நாவலை ஆங்கிலத்தில் படித்ததும் அதன் கட்டமைப்பில் மயங்கி 'பச்சை மரகதக் கல்கிளி' கதையை எழுதினேன். 'உயிர்மை'யில் வெளியாகியது. ஒரு புதினத்தின் கட்டமைப்பை, ஒரு சிறுகதைக்குள் சுருட்ட எத்தனிப்பது பேராசை எனினும் அந்தக் கதை எனக்குப் பிடித்தமான கதையாகவே இருக்கிறது.


குழந்தை மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே மனிதர்களாகிய நாம் கதை கேட்கும் ஆசையைத் தொடர்ந்து அணையாமல் காப்பாற்றி வருகிறோம். மேலும் நாம் நமக்கு விதிக்கப்பட்ட தனிமையை எதிர்கொள்ள முடியாமல் பொய்யும் மெய்யும் கலந்த கதையுலகிற்குள் ஒளிந்து கொள்கிறோம். கனவாற்றின் கரைகளில் உள்ள சில கதகதப்பான குடிசைகளில், துயரத்தின் மடியிலும் நம்மால் கொஞ்சம் சொகுசாகப் படுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் கதை சொல்வது என்பது அந்தக் கதையை அப்படியே வாழ்வதற்கு ஒப்பானது. படைப்பாளி மொழியின் கையைப் பிடித்துக் கொண்டு மேகங்களில் மிதக்கத் தொடங்குகிறான். தேவதைகளோடும் பூதங்களோடும் ஒரு ஆடலை நிகழ்த்தும் வாய்ப்பை அவன் பெறுகிறான். ஒரு போதையூட்டும் இனிய சுழலில் சிக்கிக் கொள்ளும் அவனது பயணம் சில சமயங்களில் நிம்மதியிலும் பல சமயங்களில் பெரும் வாதையிலும் முடிகிறது. ஆனால் தன் கதையை யாரெல்லாம் வாசிக்கிறார்கள் என்று கவனிக்கத் தொடங்கும் அங்கீகாரக் கவலைகளில் கதைக்காரன், தான் ஒரு படைப்பாளி என்கிற உண்மையைத் தொலைக்க ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு நொடியும் தன்னை ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் அந்தரங்கசுத்தி உள்ள கதைக்காரனே பெரும் படைப்பாளியாகவும் மாற முடியும். சமூக அக்கறை, அரசியல் பொறுப்பு, கலாச்சாரப் பொறுப்பு, மொழி அக்கறை, வடிவ நேர்த்தி என்னும் எல்லா அலகுகளையும் உள்ளடக்கிவிடும் ஆற்றலை கலைஞன் இப்படித்தான் பெறுகிறான்.


நானும் இப்படி ஒரு சுழலில் சமீபத்தில்தான் சிக்கி இருக்கிறேன். தொடர்ந்து கதை எழுதும் ஆசையில் விதம் விதமாக எழுத ஆசைப்படுகிறேன். தனது முதல் கதைத் தொகுப்பை வெளியிடும் இளைஞனின் குதூகலம் எனக்கும் கிடைத்திருக்கிறது. இன்னும் எழுதுவேன்.



சமயவேல் 27-10-2011 samayavelk@gmail.com மதுரை

Comments

  1. //ஒரு நண்பனைத் தேடி பசியோடு திசை தெரியாமல் நடந்து கொண்டே இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை அது.//

    அந்தக் கதையின் தலைப்பு, "விட்டேத்தி".

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அந்தக் கதை கிடைக்கவே இல்லை.

      Delete
  2. இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை .படித்து விட்டு எழுதுகிறேன் சார் .

    ReplyDelete

Post a Comment

Popular Posts