சமயவேல் கவிதைகள்
இந்த இரவு
நான் அருந்திக் கொண்டிருப்பது
எனக்குப் பிடித்த ரம் இல்லை
வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள்
நம்மைக் கடந்தன
எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம்
நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை
நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த
நம் மெளனங்களின் இடைவெளிகளில்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி
சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில்
பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்
எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம்
ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம்
கோமியம் போன்றதோர் அதன் வாசம்
எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை
ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில்
எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்
நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில்
இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது.
(நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு)
ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று
நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம்
ஓங்கிய அரிவாளின் கீழே
தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட
மரணம் பற்றிய பிரக்ஞையற்று
குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை;
உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள்
பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள்
எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள்
விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள்
என்று வதைபடும் மனிதர்களை விட
எத்தகு மேன்மையான வாழ்வுடன்
நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம்
என்பதை நினைத்துப் பாருங்கள்
எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள்
கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது
ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று
ஒருவரை யொருவர் கொல்வது பற்றி
உங்களால் மே என்று கூட கத்த முடியாது
எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட
உங்களால் வரைய முடியாது.
2
இருமைகள் என்பது எதார்த்தம் எனில்
அதில் ஒரு கை அள்ளி
என் கண்களைக் கழுவுவேன்
இரவு பகலோ, இறப்போ பிறப்போ
இருமைகள் றெக்கைகளாக
ஒரு பறவைக் கூட்டமாய்
பழுப்பு வானில் பறந்து திரிவேன்
மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி
அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்
இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்
இடமோ பொழுதோ வெளியோ
சிந்தும் இன்மையின் இனிமையை
பருகி மகிழ்வேன்
ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்
எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற
ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது
அதன் வெண்மணற் பரப்பில்
கோபுரங்களும் மலைகளும் கடல்களும்
நகரங்களும் ஆகாயமும் கூட
சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்
புதைந்து கிடக்கின்றன
என் புல் வெளியில் மரணம்
ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்
நான் ஒரு நாகலிங்க மரமாவேன்
என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்
பூக்களாய் தொங்கும்
எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.
OOOOOOOO
புராதனத் தோழிக்கு
ஓவியப் பெண்ணின் இமைகளின் அடியில்
பழந் தூரிகையின் மந்திர வரைவில்
சிக்குண்டு தள்ளாடும் நாரையின் கால்களில்
தொங்குகிறது என் சிற்றிதயம்
இரகசியமாக அடிக்கடி
திறந்து திறந்து மூடுகிறது ஓவியம்
பிறிதொரு நாள் திடீரெனக் கண்டுபிடிக்கிறேன்
புதைந்திருப்பது தோழியே உனது கண்களென
புராதனத்திலும் நீ யென் தோழியா
தெரியாது என மூடுகிறது ஓவியம்
கொடிய தூக்க மாத்திரைகளும் அழிக்க முடியாத
ஒரு கனவில் நாம் புணர்ந்து கிடந்ததை
ஒப்புக் கொள்ள முடியாமல்
அறைக்குள் இரவு கருகத் தொடங்கியது
உன் உடல்மொழிகளின் மேல் ஒருபோதும்
மோகம் கொள்ளாத என் பண்பாடு
அக ஆழங்களில் நீந்தும் ஊதா மீன்களைக்
கொல்ல முடியாமல்
புராதன ஓவியனின் தூரிகையில்
உன் அடர்ந்த இமைகளுக்கடியில்
பழுப்பு வர்ணமாய் வழிகிறது.
இந்த இரவு
நான் அருந்திக் கொண்டிருப்பது
எனக்குப் பிடித்த ரம் இல்லை
வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள்
நம்மைக் கடந்தன
எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம்
நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை
நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த
நம் மெளனங்களின் இடைவெளிகளில்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி
சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில்
பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்
எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம்
ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம்
கோமியம் போன்றதோர் அதன் வாசம்
எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை
ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில்
எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்
நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில்
இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது.
(நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு)
ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று
நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம்
ஓங்கிய அரிவாளின் கீழே
தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட
மரணம் பற்றிய பிரக்ஞையற்று
குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை;
உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள்
பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள்
எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள்
விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள்
என்று வதைபடும் மனிதர்களை விட
எத்தகு மேன்மையான வாழ்வுடன்
நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம்
என்பதை நினைத்துப் பாருங்கள்
எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள்
கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது
ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று
ஒருவரை யொருவர் கொல்வது பற்றி
உங்களால் மே என்று கூட கத்த முடியாது
எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட
உங்களால் வரைய முடியாது.
2
இருமைகள் என்பது எதார்த்தம் எனில்
அதில் ஒரு கை அள்ளி
என் கண்களைக் கழுவுவேன்
இரவு பகலோ, இறப்போ பிறப்போ
இருமைகள் றெக்கைகளாக
ஒரு பறவைக் கூட்டமாய்
பழுப்பு வானில் பறந்து திரிவேன்
மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி
அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்
இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்
இடமோ பொழுதோ வெளியோ
சிந்தும் இன்மையின் இனிமையை
பருகி மகிழ்வேன்
ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்
எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற
ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது
அதன் வெண்மணற் பரப்பில்
கோபுரங்களும் மலைகளும் கடல்களும்
நகரங்களும் ஆகாயமும் கூட
சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்
புதைந்து கிடக்கின்றன
என் புல் வெளியில் மரணம்
ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்
நான் ஒரு நாகலிங்க மரமாவேன்
என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்
பூக்களாய் தொங்கும்
எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.
OOOOOOOO
புராதனத் தோழிக்கு
ஓவியப் பெண்ணின் இமைகளின் அடியில்
பழந் தூரிகையின் மந்திர வரைவில்
சிக்குண்டு தள்ளாடும் நாரையின் கால்களில்
தொங்குகிறது என் சிற்றிதயம்
இரகசியமாக அடிக்கடி
திறந்து திறந்து மூடுகிறது ஓவியம்
பிறிதொரு நாள் திடீரெனக் கண்டுபிடிக்கிறேன்
புதைந்திருப்பது தோழியே உனது கண்களென
புராதனத்திலும் நீ யென் தோழியா
தெரியாது என மூடுகிறது ஓவியம்
கொடிய தூக்க மாத்திரைகளும் அழிக்க முடியாத
ஒரு கனவில் நாம் புணர்ந்து கிடந்ததை
ஒப்புக் கொள்ள முடியாமல்
அறைக்குள் இரவு கருகத் தொடங்கியது
உன் உடல்மொழிகளின் மேல் ஒருபோதும்
மோகம் கொள்ளாத என் பண்பாடு
அக ஆழங்களில் நீந்தும் ஊதா மீன்களைக்
கொல்ல முடியாமல்
புராதன ஓவியனின் தூரிகையில்
உன் அடர்ந்த இமைகளுக்கடியில்
பழுப்பு வர்ணமாய் வழிகிறது.
Comments
Post a Comment