ஹெய்டி: ஆல்ப்ஸ் மலையின் அதிசய மலர்


கட்டுரை:சமயவேல்


ஹெய்டி: ஆல்ப்ஸ் மலையின் அதிசய மலர்
நல்லுணர்வு என்னும் சுவாசம், மனித மனத்தின் பல அடுக்குகளையும் கோர்த்தபடி, சகல நிகழ்வுகளையும் உறிஞ்சியபடி, சதா தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. நல்மனம் என்பது புத்தம் புதியதாக எல்லாக் குழந்தைகளுக்குள்ளும் பூத்து நிற்பதை அறியவும் அவர்களோடு சிரித்து விளையாடவும் முடியாத பெரியவர்களாக நாம் எப்பொழுது வளர்ந்தோம்? வாழ்வின் கொடுமையான பற்ச்சக்கரத்தில் சிக்காமலும்,எந்தத் துயரமான அனுபவத்தாலும் தீண்டப்பட முடியாமலும், நமது பால்யம் மட்டும் நமக்குள் என்றும் இனித்துக் கொண்டே இருக்கிறதே, எப்படி? உயிர்த்திருப்பதற்கான எல்லாவகைப் போராட்டங்களிலும், ஒரு விதை நெல் அளவுக்காவது நம் நல்மனத்தைத் தக்க வைத்துக் கொண்டே வருகிறோம். ஏனென்றால் இந்த நல்மனம் வேறு யாருக்காகவும் இல்லை நமக்கே நமக்குத் தேவைப்படுகிறது. தற்கொலையைத் தேர்வு செய்ய முடியாத ஒவ்வொரு மனிதனும், தன்னை அங்கீகரித்தபடி, தனது ஜீவிதத்தைத் தொடர இந்த நல்மனத்தையே நம்பியிருக்கிறான்.

ஹெய்டி என்ற புதினத்தில், ஐந்து வயதில் அனாதையாகிவிட்ட ஹெய்டி எனும் சிறுமி, தனது நல்மனத்தை அவள் சந்திக்கிற எல்லாருக்கும் , எல்லாவற்றிற்கும் பகிர்ந்தளித்தபடி அவளுக்கு நேர்கிற எல்லாத் துயரங்களையும் நீந்திக் கடந்துவிடுகிறாள். டெடி என்னும் அவளது சித்தி ஆல்ப்ஸ் மலையுச்சியில் 'கடவுளுடனும் மனிதனுடனும் ஏற்பட்ட சச்சரவினால்' தனித்து வாழும் ஆல்ப்ஸ் தாத்தாவிடம் கொண்டுவிடச் செல்கிற காட்சியோடு புதினம் தொடங்குகிறது. இந்தச் சிறுமி எப்படி அங்கு மலையுச்சியில் தனித்து வாழ்ந்திடுவாளோ என்று எல்லோரும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் ஹெய்டியோ வழியிலேயே ஆடு மேய்க்கும் பீட்டர் பையனோடு சிநேகிதமாகி தாத்தாவை நோக்கி ஓட ஆரம்பிக்கிறாள். அடர்ந்த புருவமும் நீண்ட தாடியுமாக விசித்திரத்துடன் தெரிந்த தாத்தாவை ஹெய்டிக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவள் பார்க்கிற சந்திக்கிற எல்லோருடனும், எல்லாவற்றினுடனும் உடனே சிநேகிதமாகிவிடுகிறாள்.

ஹெய்டி தனது புது வசிப்பிடத்தை மகிழ்ச்சியுடன் சுற்றிப் பார்க்கத் தொடங்குகிறாள். ஃபிர் மரத்தின் கிளைகள் காற்றில் அசையும்போது ஏற்படும் இனிய ஓசையைக் கேட்டபடி நிற்கிறாள். தாத்தாவின் மரவீடு, ரம்மியமான வாசனையுடைய புதிய வைக்கோல் பரப்பிய பரணில் அமைந்த படுக்கை, தேவதாரு மரங்களுள் நுழைந்து காற்று எழுப்பும் சங்கீதம், ஆடுகளின் தொழுவம், டெய்ஸி என்னும் வெள்ளை ஆடு, டஸ்கி என்னும் பழுப்பு நிற ஆடு, அவைகளின் பாடல், பாலடைக்கட்டி என எல்லாமே அவளுக்குப் பிடித்துப் போகின்றன. அந்த மரவீட்டில், உலகிலேயே மிகச் சிறந்த படுக்கையில் இனிமையான கனவுகளில் மூழ்கியபடி தூங்கிப்போகிறாள்.

ஹெய்டியின் இதயத்தில் ஊற்றெடுக்கும் நல்லுணர்வு, ஆல்ப்ஸ் மலையின், அந்தப் பள்ளத்தாக்கின் சரிவுகள், பலவகைப் பூக்கள் மணக்கும் மேய்ச்சல் நிலங்கள், மஞ்சள் ரோஜாக்கள் மண்டிய பாறைகள் என்று, இயற்கையின் பேருணர்வோடு வெகு இயல்பாகக் கலந்து அப்பழுக்கற்ற தூய ஆனந்தம் கொண்ட பெண்ணாக இருக்கிறாள் ஹெய்டி. இந்தப் புதினத்தில் ஆல்ப்ஸ் மலையும் ஒரு கதாபாத்திரமாகக் கரைந்து நிற்பதால்தான் இது ஒரு நூற்றாண்டையும் தாண்டிய புதினமாக இருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் பலகாலமாகப் படிக்கப்பட்டு வருகிறது. ஹெய்டி, ஆடுகளுடன் மேய்ச்சல் நிலத்திற்குச் செல்லும் "ஆடுகளுடன் ஒருநாள்" என்ற அத்தியாயத்தை பலமுறை படித்துவிட்டேன். ஸ்நோஃபிளேக் என்னும் ஆட்டுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஹெய்டி கொஞ்சுவதும் அது அவளது தலையைத் தேய்ப்பதும் என்று ஒரு வினோத அன்பு மிதக்கும் இந்தப் பக்கங்களில் தான் பீட்டரும், ஹெய்டியை விரும்பத் தொடங்குகிறான். ஹெய்டி பழுப்பு நிற பெர்ரிப் பழம்போல் வளர்ந்து தன் புதுவாழ்வில் ஒரு பறவையைப் போல மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறாள், 'அனாதை' என்ற சொல்லை ஆல்ப்ஸ் மலை அழித்துவிடுகிறது.

குளிர்காலம் வருகிறது. எங்கும் பனிப்பொழிவு. மின்னும் வெள்ளை உலகத்தில் பனி அடர்ந்த தேவதாரு மரங்கள் சூரிய ஒளியில மின்னிப் பிரகாசிக்கின்றன. இந்த தேவதாரு மரங்கள் புதினத்தின் பல இடங்களில் தலை நீட்டி புதினத்தின் அழகியல் கட்டமைப்பையும், ஹெய்டியின் துள்ளும் மனவுலகையும் நீட்டித்தபடியே இருக்கின்றன. சுவிட்சர்லாந்து சென்று ஆல்ப்ஸ் மலைகளில் ஏறி இந்தத் தேவதாரு மரங்களை இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று நம்மைப் பித்தம் கொள்ளச் செய்கிறார் ஜோஹானா ஸ்பைரி; இந்த நாவலை எழுதிய பெண்மணி. சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் உள்ள ஹிர்சல் என்னும் கிராமத்தில் பிறந்த இவர், ஒரு சிறுமியாக ஜுரிச் ஏரிக்கு அருகில் உள்ள, மலர்கள் நிரம்பிய பள்ளத்தாக்கைப் பார்த்தபடி வளர்ந்த அனுபவத்தை புதினம் முழுவதும் எழுதிச் செல்கிறார். 1880ல் அச்சாகிய இந்தப் புதினத்தின் ஒரு சிறு பகுதியை சமீபத்தில் தொலைக்காட்சியில் தற்செயலாக ஒரு உயிரோட்டப் படமாகப் (ANIMATION) பார்த்தேன். துள்ளிக் குதித்து ஆடுகளோடு ஓடும் ஹெய்டியின் சிரிப்பு எங்கள் வீடு முழுவதும் பல நாட்கள் மிதந்து கொண்டிருந்தது. இந்தப் பனிப்பொழிவுக் காலத்தில்தான் ஹெய்டி பீட்டர் வீட்டிற்கு அவனது பாட்டியைப் பார்க்கச் செல்கிறாள். ஏழ்மையான, குறுகிய பீட்டரின் வீட்டில் ஒரு மூலையில் ஒரு கூனல் பாட்டி நுல் நுற்றுக் கொண்டிருக்கிறாள். பீட்டரின் பாட்டிக்குப் பார்வை கிடையாது. பாட்டியால் எப்போதுமே எதையுமே பார்க்க முடியாது என்பதை ஹெய்டியால் தாங்கவே முடியவில்லை. 'யாராலும் உங்களுக்குப் பார்வை தரமுடியாதா?' என விம்மி அழுகிறாள் ஹெய்டி.பீட்டரின் பாட்டியிடமும் அவனது அம்மா பிரிட்கட்டிடமும் ஹெய்டி காட்டும் நேசம் அளவிட முடியாதது. அவளது முரட்டுத் தாத்தாவைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பீட்டரின் முழு வீட்டையும் பழுது நீக்கித் தருகிறாள். ஒரு சிறிய பெண்ணால் எவ்வளவு பெரிய உதவி?

தாத்தாவின் வீட்டிற்கு ஒருநாள் இரண்டு விருந்தினர்கள் வருகிறார்கள். ஒருவர் மலையடிவார கிராமம் டர்ஃபிளியின் பாதிரியார். தாத்தாவை டர்ஃபிளிக்கு திரும்பிக் குடிவருமாறும் ஹெய்டியை பள்ளிக்கு அனுப்புமாறும் கோருகிறார். "அங்கு இருக்கும் மக்கள் என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களை வெறுக்கிறேன். எனவே விளகியிருப்பதுதான் எல்லோருக்குமே நல்லது" எனத் தெளிவாகக் கூறி அவரைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். இன்னொரு விருந்தாளி டெடி. ஹெய்டியின் சித்தி. பிராங்க்ஃபர்ட்டில் ஒரு செல்வச்சீமான் மகளான கிளாரா என்னும், நடக்க முடியாத, சக்கர நாற்காலிச் சிறுமிக்குத் துணையாகவும் தோழியாகவும் இருக்க ஹெய்டியை டெடி அழைத்துப் போவதிலிருந்து புதினம் தன கதைப்பாதையை வெகு எளிதாகத் திருப்பிக் கொள்கிறது.

பிராங்க்பர்ட்டில் ஹெய்டியின் வாழ்க்கை துயரங்கள் நிரம்பியதாக மட்டுமல்ல பல விசித்திர விநோதங்களுடனும் கழிகிறது. ஆல்ப்ஸ் மலை ஆட்டுக்குட்டி பிராங்க்ஃபர்ட்டின் உயர் சமூக வாழ்வோடு பொருந்திப் போக முடியாமல் தத்தளிக்கிறது. "நான் இங்கே இருந்தால் ஸ்நோஃபிளேக் அழும். என்னைப் பார்க்காமல் பாட்டியும் வருத்தப்படுவாள். மலைகளுக்கு சூரியன் இரவு வணக்கம் சொல்வதை என்னால் இங்கே பார்க்க முடியவில்லை." என்று அழுகிறாள் ஹெய்டி. "பிராங்க்ஃபர்ட்டின் அருகே பறக்கும் பருந்து கூட மூர்க்கமாக சப்தமிடுகிறது. ஏனென்றால் இங்குள்ள மக்கள் கோபக்காரர்களாகவும் வெறுப்பூட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்." என்று வெளிப்படையாகப் பேசுகிறாள். ‘இந்தக் குழந்தை சிந்தை தவறியிருக்கிறாள்’ என்று ரொட்டன்மேயர் கருதுகிறார். உண்மையில் சிந்தை தவறியிருப்பது ஹெய்டி இல்லை. பிராங்க்பர்ட் நகரம்தான் சிந்தை தவறியிருக்கிறது. 1880ல் பிராங்க்பர்ட் நகரம் மட்டும்தான். ஆனால் இன்று
முழு உலகமே சிந்தை தவறி நிற்கிறது. ஆல்ப்ஸ்மலைப் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி, பரண் வீட்டில் வைக்கோல் மணக்கும் படுக்கையில் படுத்தபடி வாழ்வின் ஆதி எளிமையை தேவதாரு மரங்களுக்குள் புகுந்து காற்று எழுப்பும் இசையின் மூலம் வாழ்வின் இசையையே கேட்டுவிடுகிறாள் ஹெய்டி. அவளது அனைத்தின் மேலான நல்லுணர்வும் பரிசுத்தமான அந்த மலையழகும் சேர்ந்து கிளாராவை நடக்க வைக்கும் அற்புதத்தைச் சாதித்து விடுகின்றன. ஆனால்.

ஆனால் இந்தப் புதினத்தில் அதன் இயல்பான ஓட்டத்திற்குள் வெகு இயல்பாக கடவுள் நுழைந்து கொள்கிறார். பிராங்க்பர்ட்டை விட்டு ஊருக்குப் போக வேண்டும் என்று ஹெய்டி அழுதபடி பெருந்துயரில் இருக்கும்பொழுது, கிளாராவின் பாட்டி (இவரும் ஒரு உன்னதமான பாட்டியாக சித்தரிக்கப்படுகிறார்) ‘உனது துயரங்களைக் கடவுளிடம் கூறு’ என்று ஹெய்டியைப் பிரார்த்தனை செய்யுமாறு தூண்டுகிறாள். மறைமுகமான கிறிஸ்துவப் பிரச்சார நாவல் போல ஒரு தோற்றம் எழத்தான் செய்கிறது. எல்லா அதிசயங்களுக்கும் பிறகு முரட்டு ஆல்ப்ஸ் தாத்தா திருந்தி தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்குகிறார். இறுதி அத்தியாயத்தில், இரவில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி படுத்திருக்கும் ஹெய்டியும் கிளாராவும் பேசிக் கொள்கிற உரையாடல்களில் ஹெய்டி வெளிப்படையாகவே கடவுளைப் பற்றிப் பேசுகிறாள். போயும் போயும் ஒரு வெளிப்படையான கிறிஸ்துவப் பிரச்சார நாவலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

1880ல் எல்லா மனித சமூகங்களிலும், மேன்மையான வாழ்வையும் பண்பாட்டையும் கட்டமைப்பதில் ஒரு மையமாக இருந்த கடவுள், இன்று இந்த 2010ல் என்ன ஆனார், அவருக்கு நவீன சமூகத்திலும் இலக்கியத்திலும் என்ன வகையான இடம் இருக்கிறது என்பதை ஆய்வதாக அல்லது கட்டுடைப்பதாகத்தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.
தமிழில் செவ்வியற் படைப்புகளைக் கட்டுடைத்த பல ஆய்வாளர்களும் செய்த பெருந்தவறுகளை நானும் செய்வதற்கில்லை. படைப்புகளின் ஆத்மாவை, மொழியின் சொற்களின் மேலே பற்றிப் பரவுகிற அதன் சூட்சும இயக்கத்தைக் கண்டடைய முடியாத எந்தக் கட்டுரையாலும் அந்த மொழியின் படைப்புத் தளத்திற்கோ வாசகத் தளத்திற்கோ எந்தப் பயனும் இல்லை. இன்று உலகம் முழுவதிலும் படைப்புகளிலிருந்து கடவுள் நீக்கப்பட்டுவிட்டார். ஆனால், மதம் சாராத கடவுளைச் சாராத ஆன்மீகம் ஒன்று பல படைப்புகளில் பொதிந்திருப்பதை நாம் காண முடிகிறது. தத்துவ உலகத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் பெரிய வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பப் போகிறோம் என்று தெரியவில்லை. கவிதையும் கலைகளும், தத்துவத்தை அழித்து மேலெழும்பிவிடும் என்னும் அதீத எதிர்பார்ப்பு இன்றளவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. மரணத்தின், கொலையின், அழிப்பின் பெருமுகத்தை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம், அரசியல் பொய்த்துப் போன இந்தப் பேருலகில் என்ன செய்யப் போகிறோம்?

ஹெய்டி, ஒரு புதினம் என்ற அளவிலேயே இயற்கையோடு இணைந்த ஒரு பேருணர்வை நமக்குத் தந்துவிடுகிறது. நல்லுணர்வில் லயிக்கும் நம் மனம் மதம் சாராத, கடவுள் சாராத ஆன்மீகம் பற்றிய ஒரு புரிதலையும் நமக்குத் தந்துவிட்டது. இப்போதைக்கு இது போதும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வாசித்த இந்தப்
புதினத்தை தமிழில் இப்பொழுது படிக்கும்பொழுது, மொழிபெயர்ப்பில் அதன்
கவித்துவம் காணாமல் போயிருந்ததைக் கவனிக்க முடிந்தது. எனினும் மொழிபெயர்ப்பாளர்கள் ஸ்ரீமதி, கயல்விழி மற்றும் புதினத்தை வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்திற்கும் எனது நன்றிகள்.

00000 0000 0000 நன்றி: உயிர் எழுத்து

Comments

  1. மிக்க சந்தோஷம் தருகிறது, தொடரட்டும்
    உங்கள் பதிவுகள்.

    (Remove word verification)

    ReplyDelete
  2. //இன்று உலகம் முழுவதிலும் படைப்புகளிலிருந்து கடவுள் நீக்கப்பட்டுவிட்டார். ஆனால், மதம் சாராத கடவுளைச் சாராத ஆன்மீகம் ஒன்று பல படைப்புகளில் பொதிந்திருப்பதை நாம் காண முடிகிறது.// மிக நல்ல கட்டுரை

    ReplyDelete
  3. ஹெய்டி யை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் கட்டுரை. நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts