Saturday, January 22, 2011

கட்டுரை

உலகின் அழகிய முதல் பெண்:லீனா மணிமேகலையின் கவிதை முகம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஒரு பள்ளத்தாக்கின் சரிவில் பார்த்த ஆதி மனிதர்களின் குடியிருப்பில் அந்தப் பாறைகளைப் போன்றே, அந்த மரங்களைப் போன்றே வெகு இயற்கையான அந்த மனிதர்களின் அ-கலாச்சார வாழ்முறையைக் கண்டு, அது ஓர் அதிசயம் என நினைத்தேன். இயற்கையிலிருந்து ஒரு சிறிதும் பிரியாத அவர்களை, தொல்குடியினர் என்றும் பழங்குடியினர் என்றும் நாம் எழுப்பும் சொல்லாடல்களில் ஒரு அர்த்தமும் இல்லை. நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை பழங்குடியினர் என்று ஏன் அழைக்க வேண்டும்? ஆதி மனிதர்களின் மனசாட்சியாக வாழ்ந்தும் எழுதியும் வந்த லெவி ஸ்ட்ராஸ் கலாச்சாரத்தை இயற்கைக்கு எதிரிடையாக வைத்தார். ஒரு நொடியில் ஒரு நாட்டையே அழித்துவிட எத்தனித்திருக்கும் அணுக்கால மனிதர்களாகிய நாம், குகை வாழ்வைத் தாண்டி பல நூற்றாண்டுகளாக பூமி முழுதும் திரண்டிருக்கிற பல்வகை பண்பாட்டுச் சமூகங்களும் குறுக்கு மறுக்காக கட்டி எழுப்பியிருக்கும்
கலாச்சாரச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு, ஆதிவாழ்வின் அ-கலாச்சார மெய்மைகளை எப்படி மீட்கப் போகிறோம்?

லீனா மணிமேகலை, குகை ஓவியத்தையும் கவிதையையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்த்திருப்பது அவரது அ-கலாச்சாரத்தை அடைவதற்கான பெருவிருப்பத்தின் அடையாளமாகவே இருக்கிறது. இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடனும் பதிவு செய்யப்படிருப்பதை முதலில் நாம் அவதானிக்கிறோம். எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவிமனத்தின் கட்டற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாச்சாரத்தின், பாலியல் முகத்தின் கரும் புள்ளிகளை, வெடிவைத்துத் தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச் சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாகக்
கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம். சமீபத்தில் ந.முத்துசாமியின் 'பாஞ்சாலி' என்ற சிறுகதையைப் படித்த பொழுது
இன்று வரையிலும் பாரத கண்டமே பாஞ்சாலியின் தூமையில் நனைந்து கொண்டிருப்பதையும், அவள் துகிலுரியப்பட்ட நிகழ்வு இந்தியர்களின் கூட்டு நனவிலியில் ஆறாத புண்ணாகப் புரையோடியிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. லீனாவின் கவிதையிலோ தூமை, ஒரு எதிர்-அழகியல், தகர்ப்பு-மொழிப்பாடாக இயங்குவதை எவரும் வெகு எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

கட்டற்ற காமத்தின் களிப்பைக் கொண்டாடும் லீனாவின் கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் புதுமொழியில், விதம் விதமான பாலியல் பித்தத்தையும், கொதிப்புகளையும் பெரும் உக்கிரத்துடன் வீசி எறிகின்றன. சங்ககால அகப் பாடல்களில் உள்ளுறையாகவும், திருக்குறளின் காமத்துப்பாலில் மெல்லிய கீற்றுகளாகவும், ஆண்டாளில் உடலை ஆன்மீக வெளிக்குக் கடத்தும் ஏக்கங்களாகவும் தொடரும் தமிழ்ப்பாலியல் கவிதைகளின் தொடர்ச்சியாக லீனா மணிமேகலையின் கவிதைகளும் அமைகின்றன. என் கள்வனின் நாக்கில்/ ஊறுகிறது/ விநோதத்தின் சாவிகள் என்ற வரிகளில் பெண் உச்சமடைகிற ரகசியத்தை, மிக அழகாக, சற்று சாய்ந்திருக்கும் மச்சத்தையும் சேர்த்து என்று கோர்க்கிறார். இந்தக் கடைசி மூன்று வரிகள் என்றைக்குமான அழகியலோடு இருக்க, முந்தைய வரிகள் இன்றைய அழகியலோடு இன்றைய மொழிப்புதுமையோடு ஒரு பின்னலான பாலியல் கவிதை ஆகிவிடுகிறது. இதே போல சாம்பன் கவிதையிலும் கலவியின் பிறிதொரு சித்திரம். "தொய்கிற வேளையெல்லம்/ காம்புகளில் ஏவுகிறது" என பாலியலின் நுண்ணிய அலகுகள் வழியாக, உச்சத்தில் பெண் அடையும் "கலவிகூர்புனல்" என வெளிப்படையான உரத்ததொரு பாலியல் மொழித்தொடரை உருவாக்குகிறார். கடைசி ஆறு வரிகளில் கவிதை திரள்கிறது. உடல்களை புராணிகத்துக்குக் கடத்தும் ரகசியத்தை இக் கவிதை மெல்ல அம்பலப்படுத்திவிடுகிறது. நா மீறிய கடல் கவிதையிலும் "ஈரத்தால் தீ மூட்டியவன்/ தன்/ நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்/..". என்று விளையாட்டு தொடர்கிறது. வேட்டை மறந்தவன் கவிதையில் யோனிக்காட்டில் புதுக்குகையைக் கட்டிக் கொண்டிருக்கும் ஆதிப் பெண்ணின் தங்கக் கிளிஞ்சல்கள் புதிய ரொமாண்டிசிச சொல்லடுக்குகளை உருவாக்குகிறது. ஒரு நீலப் பரவசக் கவிதையில் "கருவுறுகிறேன் தீவை" என்று இரண்டு சொற்களில் கவிதையை நட்டு வைக்கிறார். நிலவின் துரு, உனக்கு என்ன வேண்டும், மிதக்கும் பாடல், நீ பரப்பு நான் துண்டு ஆகிய கவிதைகள், காதலும் காமமும் மயங்கிய அழகியல் சொல்லாடல்களால் புதிய அகப்பாடல்களாகி விடுகின்றன. "நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது" என கொடூரமான பிரிவையும் ஒரு கவிதை பதிவு செய்கிறது. "அன்பொழிந்தவுடன்/ தலைகளைக் கொய்துவிடும் திடம்/ வாய்க்கப் பெறுவதில்லை/" என உறவுகள் அறுந்த கவிதையில் வெண்ணிப்பறந்தலை ஆக முயல்கிறார்

"ஒரு குவளைக் கள்" கவிதையில் "இடுப்பின் கீழ் இறுக்கிக் கட்டப்பட்ட/ என்/ கன்னிமையின் வெற்றிடம்/ யாரும் அறிய முடியாதது/" என்று எழுதுகிறார். கன்னிமை என்பது உடலின் வரலாற்றில் ஒரு கால் புள்ளி. அவ்வளவு தான். ஒவ்வொரு கலவிக்கு முன்பும் பின்பும் எல்லாப் பெண்களுமே கன்னிகள் தான். பெண்களின் இடுப்புகளில் பூட்டு மாட்டும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் பொய்ப் புனிதங்களில் ஒன்றுதான் கன்னிமை. எனவே தான் "என் கற்பின் கட்டியங்காரி/ நான்/" என திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார். "கசியும் சொல்" கவிதையில் துர்வாடையைப் பரப்பும் துரோகத்தின் ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட இவரது பறவைகளின் அலகுகளில் ஒரு புதிய சொல் தொற்றிக் கொள்கிறது. புதிய சொல் உள்ளவரை லீனா மணிமேகலை புதிய பெண்தான். "நாடோடி" கவிதையில் யாதொருவரும் தங்கள் தடையங்களைக் களைந்துவிட்டு புத்துயிர் பெறும் வழியை சொல்லித் தருகிறார். நாம் நமது கலாச்சாரத்தின் எல்லாத் தடையங்களையும் அழித்துவிட்டு நிர்வாணிகளாக மட்டுமே காம வெளிக்குள் நுழைய முடியும். கலவியின் ஒற்றைக் கணத்தில் ஆணும் பெண்ணும் அடைகிற மெய்மையை, ஆன்மீகத்தை, பிரக்ஞைக்குள் செலுத்தி, சமூகவெளி முழுமைக்கும் நாம் வழங்க முடியுமா? உலகின் பாலியல் இலக்கியங்கள் எல்லாம் இந்தப் புள்ளியில்தான், வியப்பின் வினாக்களோடு நிற்கின்றன.

இவரது இன்னொரு முக்கிய முகம் தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது. பெண்ணிய உடல் மொழியின் முக்கியத்துவத்தை முற்றிலும் புதிய கோணத்தில் பேசும் இந்தக் கவிதைகளை ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றிய கவிதைகளாக எடுத்துக் கொள்ளலாம். ஆண் கவிகள் கூட இந்த அளவுக்கு பெண்ணுடலைக் கொண்டாடியதில்லை. "உடல்=பிரதி=உடல்" கவிதையில் ஒரு வசீகரமான மொழியில் உடலைப் பிரதியாக்கி விடுகிறார். "கனவு நினைவு கனவு" என்ற கவிதையில் ஒரு வெகு விநோதமான கொஞ்சுதலைக் காண்கிறோம். "குலவையிட்ட" என்ற ஒரே சொல் மூலம் இந்தக் கவிதை தன் நடனத்தை நிறைவேற்றி விடுகிறது. இந்தக் கொண்டாட்டம் தவளையின் பாடல் கவிதையில் வேறு வேறு வகையான அழிப்புகளோடு உள்-இணைப் பிரதியாக பெரும் அதிர்ச்சியூட்டும் கவிதையாகிவிடுகிறது.

இந்தத் தொகுப்பில் சாம்பல் மரம் என்ற கவிதை ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. கூடு திரும்ப முடியாத பறவையின் இந்தப் பாடலை வாசிக்கிற எல்லாத் தந்தையரின் கணுக்களிலும் பதித்து விடுகிறார். தந்தையரைக் கொல்ல வேண்டும் என்ற குரல்களின் மத்தியில் இந்தக் கவிதை தனித்து நிற்கிறது. என் மகளே எழுதிய கவிதை போல உணர்ந்தேன்.

ஆனால் லீனா மணிமேகலையின் பிரதான கவிதைமுகம் விலக்கப்பட்ட குருதியில் நனைந்த ஆதிமுகமாக இருக்கிறது. புத்தகம் முழுதும் குருதி கொட்டி சிவப்பேறிக் கிடக்கிறது. இந்தக் கவிதைகள் ஒரு பழைய நிகழ்வை ஞாபகமூட்டியது. எனது கல்லூரி நாட்களில் ஒரு விடுமுறை சமயத்தில் வீட்டில் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். ஏதோ வாசலில் நிழலாடியது. இரண்டு பள்ளிச் சிறுமிகள் தயங்கியபடி நின்றிருந்தார்கள். ஒருத்தி ஜோதி. உறவுக்காரப் பெண். இன்னொருவள் அவளது தோழி. "அண்ணே ஜோதியைக் கொண்டு போய் அவங்க வீட்ல விட்ருங்கண்ணே, மேத்ஸ் மிஸ் சொல்லிவிட்டாங்க." என்றாள். ஜோதி அழுதபடி கன்னமெல்லாம் உப்பிப் போய் இருந்தது. ஜோதியின் வீடு எங்களூர் கண்மாயின் அக்கரையில் உள்ள முள்காடுகளைத் தாண்டி பனைமரக் கூட்டங்களுக்குள் இருந்தது. அந்தப் பெண் எனக்குப் பக்கத்தில் வந்து மெதுவாக "ஜோதி சடங்காயிட்டாண்ணே அதான்". என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். எனக்கும் திகைப்பாகிவிட்டது. சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். கதவைப் பூட்டப் போனபோது "இருங்க" என்று என்னைத் தாண்டி கதவைத் தள்ளிக்கொண்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அடுப்பங்கரையில்தான் அங்கணம் இருக்கிறது. அங்கணத்தில் அவள் கழுவுக்கொள்கிற சப்தம் கேட்டது. அவளைக் கூட்டிக் கொண்டு வற்றிய கண்மாய் வழியாக நடந்தபொழுது அவளது உடையில் படிந்திருந்த இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கும் அழுகை வந்தது. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துயரம் வர வேண்டும் என்று பலவாறாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தேன். இயற்கையின் புரியாத புதிர், அன்றே என்னை ஒரு பெண்ணியப் பிரக்ஞை உள்ளவனாக மாற்றி இருந்தது. காலத்தின் சுழற்சியோடு உடல்ரீதியாக பெண் ஒவ்வொரு மாதமும் இயற்கையைத் தொட்டுக் கழுவுகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியான காலச்சுழற்சி இருப்பதால் அவள் ஒரு விண்கோளுக்கு ஒப்பாகிவிடுகிறாள். தான் ஒரு விண்மீன் என்றும் பெருஞ்சக்தியைக் கொண்டவள் என்றும் விலக்கப்பட்ட குருதிமூலம் அவள் உணர்ந்துவிடுகிறாள்.
லீனா மணிமேகலையும் விலக்கப்பட்ட குருதியால் ஒரு பிரளயத்தையே உண்டாக்கிவிடுகிறார். வாழ்த்துக்கள்.


Samayavel 13.12.2009.

No comments:

Post a Comment