மொழிபெயர்ப்பு


ஜேன் ஹிர்ஷ்பீல்டு கவிதைகள்
தமிழில்: சமயவேல்




1. கடிகாரம்


இரவுக் குளம்
அதன் சில இலைகள்
மிதக்கின்றன:
இல்லாத நட்சத்திரங்கள்
மேற்பரப்பில் துள்ளுகின்றன

ஆனாலும்கூட
விழும் பொருட்கள்
உடைக்கின்றன ஒவ்வொன்றும் அடுத்ததை
அழகு, ஆழ்துயர்கள் புரள்வது
இலைகளின் நகர்வு
முழு இரவும், மெதுவாக,
மீண்டும் அவை சிவப்பாகும் வரை.




2. பொய் கூறல்

அவன் தூரிகையால் கித்தானைத் தொடுகிறான்
ஒரு வேகமான இழுப்பில்
திறந்துவிடுகிறான் ஒரு பறவையை ஆகாயத்தில்
பின், நகர்ந்து யோசிக்கிறான்
இரக்கம் கொள்கிறான்
திறந்துவிடுகிறான் இன்னொன்றை.


3. தாடியுள்ள பெண்

ஒவ்வொரு முறையும் அவள் கவனித்தாள்
அவள் எண்ணியது
மூன்று கருப்பு முடிகளையும் பிடுங்கிவிட,
நாட்கள் குறைவாக இருந்தன;
அவளது விரல்கள் தாடையைத் தொட்டன
பிறகு மறந்துவிட்டது
இவ்வாறு சோர்வு வளர்ந்து சுருள்கிறது ஞானமாக.


4. இதயத்திற்கு ஒன்று வரை தான் எண்ணத் தெரியும்

சங் சீனத்தில்
இரு துறவி நண்பர்கள் அறுபது ஆண்டுகளாக
கவனித்தார்கள் வாத்துகள் கடப்பதை
அவை எங்கே செல்கின்றன?
ஒருவர் மற்றவரை சீண்ட, அவரால் கூற முடியவில்லை

அந்தக் கணத்தின் மௌனம் தொடர்கிறது

அவர்களது நட்பை கற்கப் போவதில்லை எவரும்
தரிசனங்களின் கோவன் நூற்களில்.
ஒருவருக்கும் அவர்களது பெயர்கள் ஞாபகத்தில் இருக்காது.

சில சமயங்களில் நான் அவர்களை நினைக்கிறேன்
துயரத்தால் கலக்கமுற்று நின்றுவிடுகிறேன்
அவர்களது இறகுகள் நிரம்பிய இலையுதிர்கால அங்கிகளுக்குள்
வாத்து மட்டத்த்திற்கு மடித்துத் தைக்கப்பட்டு

மலைகளின் பிரம்மாண்டத்தால் அகேகமாய் விழுங்கப்பட்டு
ஆனால் இல்லை இன்னும்.

சற்றுக் குறைவாகவே சப்தமிடும்
இன்னும் விழுங்கப்படாத வாத்துகள் போல;
நாம் கூட, என் காதல் கூட, முற்றிலுமாகத் தொலைக்க முடியாதது
போல.



5.எடைபோடுதல்

இதயத்தின் காரணங்கள்
தெளிவாகத் தெரிகிறது,
மிகக் கடினமானவைகள் கூட
பதிந்திருக்கும்
அதன் சவுக்குத் தடங்களும் துயரங்களும்
மற்றும் மன்னிக்கப்பட வேண்டும்.

வறட்சியில் பசித்திருக்கும் புள்ளிமான்
இறுதியில் தன்னை விழுங்கிவிட்ட
வறட்சியில் பசித்திருக்கும் சிங்கத்தை
மன்னித்துவிடுவது போல
பிறகு விருப்பத்துடன் நுழைகிறது
அவள் மறுக்க முடியாத வாழ்வுக்குள்,
சிங்கம், உண்ட பிறகு
அதை நினைக்கப் போவதில்லை

ஆனந்தத்தின் வெகு சில தானியங்கள்
எல்லா இருளுக்கும் எதிராக அளக்கப்படுகிறது
இன்னும் தராசு சமநிலையில் இருக்கிறது

உலகம் நம்மிடம் கேட்கிறது
நாம் கொண்டிருக்கும் பலத்தை மட்டும் நாமும் கொடுக்கிறோம்
பிறகு அது மேலும் கேட்கிறது, நாம் அதைக் கொடுக்கிறோம்.


000


6. இரண்டு முடிவுகள் கொண்ட கவிதை


சொல்லுங்கள் மரணம் என்றதும் முழு அறையும் உறைகிறது
படுக்கைகள் நகர்ந்துகொண்டிருப்பது நின்றுவிட்டது
விளக்குகள்கூட எரியவில்லை
தான் கவனிக்கப்படுகிறோம் என எச்சரிக்கை அடைந்த ஓர் அணில் திடீரென
உணர்வதுபோல

அந்தச் சொல்லை தொடர்ந்து கூறும்போது
பொருள்கள் முன் செல்லத் தொடங்குகின்றன
சட்டென அறுபடும் நூலென துண்டாடிய ஒரு திரைப்படச் சுருள்மேல்
எழும்புகிறது உங்கள் வாழ்க்கை.

இதைத் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருங்கள்
இதை கணத்துக்குக் கணம் உங்கள் வாயில் பிடித்து வைத்திருங்கள்
அது வேறொரு அசைகொண்ட சொல்லாகிறது.
குவிந்திருக்கும் பிணங்களைச் சுற்றுகிறது ஒரு பெருவணிகக் கூடம்.

மரணம் பெரும்பசியோடு இருக்கிறது அது விழுங்குகிறது வாழ்பவை
எல்லாவற்றையும்
வாழ்க்கை பெரும்பசியோடு இருக்கிறது அது விழுங்குகிறது இறந்தவை
எல்லாவற்றையும்
இரண்டுமே ஒருபோதும் திருப்தி அடைவதுமில்லை ஒருபோதும் நிறைவு
கொள்வதுமில்லை
ஒவ்வொன்றும் விழுங்குகிறது விழுங்குகிறது இந்த உலகை.

வாழ்வின் பிடியைப் போலவே சாவின் பிடியும் வலிமையோடு இருக்கிறது.

(ஆனால் மறைந்தவர்கள், பிரியமுள்ள மறைந்தவர்கள், ஓ... எங்கே?)

000


7. விடிவதற்குள் சீனக் கவிதையை வாசித்தல்


தூக்கமின்மை மீண்டும்,
நான் விழித்துக் கொள்கிறேன்.
ஒரு குளிர்ந்த மழை
ஜன்னலில் துடிக்கிறது
எனது காஃபியைப் பிடித்தபடி
நான் ஆழ்ந்து சிந்திக்கிறேன் டூ பூவின்
கவிழ்க்கப்பட்ட ஒயின் கோப்பையை
அவரது ஜன்னலில், பனி,
பன்னிரண்டு நூற்றாண்டுகள் விழுந்திருக்கிறது,
அவரது கைக்கடியில்,
கறுப்பு மை இன்னும் உலரவில்லை
"அட்ச்சரங்கள் பயனற்றவை"
வயதான கவிஞன், தனித்திருக்கிறான்
அவனது கரியடுப்பு காலியாக இருக்கிறது
நூற்றாண்டுகளின் புகழ்
வெப்பம் உமிழவில்லை
அவரது கவிதைகளில், நான் அறிவேன்,
ஒரு துறை
மொழிபெயர்ப்பில் தொலைந்திருப்பதை,
இங்கே, மீந்திருப்பது உறைபனிப்புயல் மட்டுமே.


00000

Comments

  1. வறட்சியில் பசித்திருக்கும் புள்ளிமான்
    இறுதியில் தன்னை விழுங்கிவிட்ட
    வறட்சியில் பசித்திருக்கும் சிங்கத்தை
    மன்னித்துவிடுவது போல................

    ReplyDelete

Post a Comment

Popular Posts