அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - சமயவேல்


விக்ரமாதித்தன் நம்பி


அசலானதும் உண்மையானதுமான கவிதை - தானப்பர் தெரு

தேடிச் சென்ற நண்பரின்
மூடிய கடைப் படிகளில்ஓய்ந்து உட்கார்ந்தோம்மனைவி பற்றிய புகார்களைபுதைக்கத் தொடங்கினான் நண்பன்உறவுகளின் கசப்பு எங்கள்கண்களில் கசிந்து கொண்டிருக்ககுறுக்கிட்டது ஒரு குழந்தைக்குரல்ராணி பேக்கரி அய்யா வீடுஎங்க சார்?

பார்வையற்ற அப்பா, அப்பாவின் கையில்
பார்வையற்ற அம்மா, அம்மாவின் கையில்
ஒரு துறுதுறு சிறுமி


வாங்கப்பா அங்க கேட்கலாம்
நகர்ந்தது குடும்பம்
கைகளாலும் குரல்களாலும் இணைந்த
அந்த சிறு குடும்பம்
ஒரு பேரதிசயமாய் மிதந்து கொண்டிருந்தது
தானப்பர் தெருவில்


ஒரு சிறுவன், அவன் கையைப் பிடித்தபடி
சார் உங்களுக்குத் தெரியாதா

சமயவேல்
(மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பு பக் 36)

"சோற்றுக்கும் தண்ணிக்கும் புணர்ச்சிக்கும் தூக்கத்துக்கும் அல்லாடுகிற எளிய மனிதர்களின் வாழ்க்கைதான் என்னைப் பெரிதும் ஈர்த்து எழுதத் தூண்டுகிறது. தத்துவக் குழப்பங்களுக்கும், கண்டுபிடிக்கிற மாயப்பயணத்துக்கும் சத்தியமாய் நான் தயாரில்லை. நிலவு கேட்டு அழுகிற குழந்தை இல்லை நான். தெருவில் விற்கிற ஐந்து காசு முறுக்கு போதும்.
படைப்பு, படைப்பு மனம், அதைத்தாங்கி இருக்கும் ஆள் எல்லம் ஒரே ஒரு நேர்கோட்டின் விரிவே. அல்லது ஒரு ஒற்றைப் பாத்தியில் முளைத்த ஒரே ஒரே செடிதான்.

செடிகளைப் பற்றியோ, கவிதையைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ எந்தவிதமான கோட்பாடுகளையும், தீர்மானமான முடிவுகளையும் கொள்ள முடியாத ஒரு அருமையான சுதந்திரம் கிட்டியிருக்கிறது. இந்த சுதந்திரமான வெறுமையே எச்சார்பு கொண்டு பார்த்தாலும் தவறுகளற்ற காரியங்களை விடாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

மனிதனே போல் வாழ்வு, வாழ்வே போல் கவிதை.
இப்படியெல்லாம் இந்த வாழ்வு பெருங்கசப்பு அடிப்பதனால்தான் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிற மனோபாவத்துடன் நான் நடந்து கொள்ள முயற்சி செய்கிறேன். கவிதைகள் கூட அந்தத் திசையில்தான் எழுத ஆசைப்படுகிறேன்.

சமூகம் சூழல் அவன் இவன் உவன் அது இது உது எல்லாம் சரியில்லை என்று எத்தனை நாள்தான் நாம் புலம்பித் தவிப்பது. புனுகுப்பூனையைப் பிதுக்கிப் புனுகு எடுக்கும் வேலையா நாம் பார்ப்பது......"

(சமயவேலின் கடிதங்களிலிருந்து)

இப்பொழுது புரிந்திருக்கும். சமயவேல் என்கிற கவிஞனை.

சமயவேலின் கவிதைகள் நவீன கவிதையிலேயே தனியானவை. எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை. பருத்திப்பூக்கள் போல். அதேசமயம். வாழ்வின் சாரம் செறிந்தவையும் மனசின் நுட்பம் கூடியவையும் ஆகும். வெள்ளைக்கவிதைகளொப்ப. எதிர்கவிதைகள். மாதிரி இருப்பவை. எனில் அசலானவை. உண்மையானவை.

நவீன வாழ்வில் நேரிடும் நிலைகொள்ளாமை குறித்து சமயவேல் அளவுக்கு வேறு யாரும் எழுதவில்லை. இயல்பாக. மேலும் பிறத்தியார் (அதர்ஸ்) பற்றி அக்கறைகொண்ட கவிதைகளை அதிகமும் அவரிடம் காணமுடியும். இந்த அம்சம் நவீன கவிதைக்கு வலுவூட்டக்கூடியது.

தொடக்க காலத்திலிருந்தே தனிமனிதன் என்பதே பெரிதும் அமைந்துவிட்ட நம் கவிதை சமன் பெறுவதற்காகவாவது அடுத்தவர்கள் பற்றிய கவிதைகள் வேண்டியதாக இருக்கின்றன. பிறகும். கவிதை பொதுவெனில் கவிதைப்பொருளும் பொதுவாக இருக்க வேண்டாமா. தன்னுள்ளேயே குமைந்து கொண்டிருப்பது தகுமோ கவிஞனுக்கு. அவன் காற்றுப்போல ஆக வேண்டாமோ. எவ்வளவு காலம் இப்படியே (தனிமனித நிலையில்) இருப்பது.
நாடகம் எதார்த்தமாக தொடர்ச்சி ஒரு கேள்வியில் மையம். காட்சி அனுபவம். முடிவு. கவிக்கூற்று.

அபூர்வமான விஷயம். சுருங்கச்சொல்லல், எழுதிப் பழகிய மொழி, தேர்ந்த கூறல், அத்தனையும் சேர அசலான கவிதை.

கவிதையின் ஊற்றுக்கண் கவிஞனின் மனசில்தான் இருக்கிறது. வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

நல்மனத்தின் விகசிப்பில். அனைத்தின் மேலுமான காதலில், பூமியின் எல்லா வகை விசாரங்களும் கோபங்களும் வேதனைகளும் சிக்கல்களும் சிடுக்குகளும் தீர்க்கப்படுவதற்கான சாத்தயங்களை அடையாளம் காட்டுபவை இவரது கவிதைகள். என்று இந்தத் தொகுப்பின் பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பது, ஒப்புக்கல்ல, உண்மைதான். தானப்பர் தெரு கவிதை ஓர் எடுத்துக்காட்டு,

இடைநிலை இதழ்கள் எல்லாவற்றிலும் எண்ணற்ற கவிதைகள் இடம்பெறுகின்றன. எப்பொழுதாவதுதான் உருப்படியான கவிதைகள் காணக்கிடைக்கின்றன.

குறிஞ்சி, பன்னிரெண்டாண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும்.


நன்றி: கூடு மின்னிதழ்

Comments

Popular Posts