சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து: இளங்கோ கிருஷ்ணன்    


                                                               



மனிதன், தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்
                                                                                 – ழான் பால் சார்த்தர்
எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன
போதிசத்துவர்களே காண்பவையும் காண்பவனும்
எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன
                                                                                -  தம்மபதம்
i)

Existentialism எனப்படும் இருத்தலியம் சார்ந்த உரையாடல்களின் போதெல்லாம் தமிழில் தவறாது குறிப்பிடப்படும் படைப்பாளிகளில் சமயவேலும் ஒருவர். பத்தொன்பதாம்  நூற்றாண்டில் துவங்கி உலகப் போர்கள் வரை ஒரு பேரலையென மேற்கின் அறிவுலகை ஆதிக்கம் செலுத்திய இந்தக் கருத்தியலானது தமிழில் 1970களில்தான் ஒரு தத்துவ சொல்லாடலாக பிரபலமடைந்தது. ஆனால் எந்தவொரு நவீன சிந்தனையாயினும் அதன் எதாவது ஒரு சாரம்சமோ அல்லது முழுதுமோ எல்லாப் பண்பாடுகளிலும் வரலாற்றின் ஏதாவது ஒரு தருணதில் இருந்தே வந்திருக்கிறது என்பதற்கேற்ப தமிழிலும் இருத்தலியத்தின் சிந்தனைக் கூறுகளை நாம் சங்க இலக்கியங்களில் கூட காண முடியும்.

இருத்தலியம் என்ற நவீன கோட்பாட்டிற்கான இலக்கணத்தை மேற்கின் வரையறைகளில் வைத்து பேசுவோம் எனில் தமிழில் தனிப்பாடல் திரட்டுகளில் இருந்தே இருத்தலிய சிக்கல்களால் ஆன கவிதைகள் எழுதப்படத் துவங்கின எனலாம்.    வரலாற்றுரீதியாக தமிழில் தனிப்பாடல்களின் காலம் என்பது நவீனத்துவம் அறிமுகமாகத் துவங்கிய காலம். அதாவது ஆங்கிலேய அரசின் வழியாக இந்தியச் சமூகம் மேற்கின் நவீன சிந்தனைகளுக்குள் ஆற்றுப்படத்துவங்கிய காலம். இதை தமிழ் இருத்தலியத்தின் துவக்ககாலம் என்றே சொல்ல முடியும். இந்திய குடிமைச் சமூகம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு மாற்றாக முதலாளித்துவ விழுமியகளுக்குள் பயணப்படத் துவங்கிய இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ஆற்றாமையையும், வறுமையையும், சமூக ஒறுப்பையும் தங்கள் காலகட்டத்திற்குள் இருந்தே பேசின எனவே இதில் மேற்கின் இருத்தலியதின் அடிப்படைகூறுகளான  நவீன விஞ்ஞானவாதம் உருவாக்கிய இருப்பு குறித்த அபத்தம், அந்நியமாதல் போன்ற சொல்லாடல்கள் இடம் பெற சாத்தியமில்லை. தனிப்பாடல் திரட்டுகள் முதல் பாரதிக்கு சற்று பிந்தைய காலக்கட்டம் வரை தமிழ் இருத்தலியமானது இவ்வாறே இருந்து வந்தது. 

விடுதலைக்கு பிறகான புதிய குடிமைச் சமூகதில் பிறந்த படைப்பாளிகள் எழுத வந்த போது இங்கு முதலாளித்துவம் நன்கு வேரூன்றியிருந்தது. ஒரு தலைமுறைக்கும் மேலாக இங்கு நடைபெற்ற முதலாளித்துவ-ஜனநாயகம் அறிவுச் சூழலில் ஆழமான அவநம்பிக்கைகளையும், மாற்றுச் சமூகத்திற்கான தேடலையும் உருவாக்கியது.  தமிழில் மட்டுமல்ல இந்தியாவெங்குமே 70 மற்றும் 80 களின் தசமம் என்பது இலட்சியவாதங்களாலும், புதிய சமூக உருவாக்திற்கான கனவுகளாலும் நிறைந்திருந்தது. மறுபுறம் நவீன விஞ்ஞானம் உருவாக்கிய காலம் வெளி குறித்த கருத்துகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் போன்றவை நவீன தமிழ் மனதை தனது இருப்பு குறித்த விசாரனைகளுக்குள் தள்ளியது. இதனால் நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற உணர்வுகளில் சிக்கித் தவித்த இளம்படைப்பாளிகள் மேற்கின் இருத்தலிய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். உண்மையில் இந்தக் காலக்கட்டத்தையே தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலம் என நாம் குறிப்பிட இயலும்.

இவ்விடத்தில் தமிழ் இருத்தலியம் எனும் போது அது தமிழ் சூழலில் குறிப்பாக இலக்கியத்தில் எப்படி உள்வாங்கப்பட்டது என நாம் பார்க்க வேண்டும். மேற்கை போலவே இங்கும் இருத்தலியம் என்பது  நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற விஷயங்களை பேசினாலும் தமிழில் அது அரசியல் நீக்கம் உடையதாகவே இருந்தது. மேற்கில் சாத்தர் போன்றவர்கள் மனிதன் தன் இருப்புக்கும் செயலுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி நேரடி அரசியலோடு தங்களை இணைத்துக் கொண்ட போது தமிழில் நேரடி அரசியலோடு தொடர்பற்ற இருத்தலியமே இயங்கியது. விதிவிலக்காக ஆத்மாநாமின் சில கவிதைகளையும் சமயவேலின் சில கவிதைகளையும் சொல்லலாம்.

தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலக்கட்டத்தை சேர்ந்த படைப்பாளியான சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று நான் சொல்வேன். அதாவது இப்படிச் சொல்லலாம் தமிழ் இருத்தலியமானது சமயவேலால் தனது உலகளாவிய செவ்வியல் பண்பை கவிதைகளில் எட்டியது.

காலம் மற்றும் வெளி பற்றிய பிரக்ஞையே துவக்க கால சமயவேல் கவிதைகளின் அடிப்படையாக இருக்கின்றன. அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கே “அகாலம்” என்றுதான் பெயர். மனிதனின் அறிவின் முன் முடிவற்ற நேற்றும் முடிவற்ற நாளையுமாய் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சம், விரிந்து கொண்டே போகும் அதன் வெளி, அவ்வளவு பெரிய பிரமாண்டத்தின் முன் இவ்வளவு சிறிதாய் இருக்கும் தனது இருப்பு, ஒரு எலுமிச்சை பழ அளவே இவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு காலத்தில் இருந்தது.. ஒரு அரைகண நேர பெருவெடிப்பில் அது உருவானது என்ற உண்மை, இன்னொரு அரைக்கண நேரத்தில் அது இல்லாமல் போகவும் சாத்தியமுள்ளது என்ற தர்க்கம் ஏற்படுத்தும் பிரமிப்பு, அச்சம், அபத்தம்,  இது எதையும் உணராது இங்கு நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியனவே சமயவேலுக்கு எழுதுவதற்கான மன உந்தத்தை கொடுக்கின்றன.

இவரது துவக்ககால கவிதைகளில் இருக்கும் இன்னொரு பண்பு நிலமின்மை. அதாவது சமயவேல் கவிதைகள் எந்தவொரு குறிப்பிட்ட பண்பாட்டு வெளிக்குள்ளும் கால வெளிக்குள்ளும் நின்று பேசுவன அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கவிதையாக காலமற்ற காலத்தில் நின்று நிலமற்ற நிலத்தில் எல்லாக் காலத்துக்குமான எல்லா மனிதர்களுக்குமான ஒட்டுமொத்த இருத்தல் குறித்த உணர்வை நேரடியான மொழியில் பேசுபவை. உதாரணமாக ஒரு கவிதை   
  
                                 
                                                  இளங்கோ கிருஷ்ணன் 
என் பெயர் 

பூமியின் கோடிக் கணக்கான
ஜீவன்களில் நானும் ஒன்று என்
துக்கம் தாகம் சந்தோஷமென
நானொரு பெரும் சமுத்திரம்

என் அலைகளுக்குள்
நானே மூழ்கும் சந்தோஷம்
என் சிகரங்களை நானே
படைக்கும் பரிதாபம்

என்னில் நானும் நானில் என்னும்
எரிந்து கலந்து கிளம்புகையில்
வேரில் சுண்டும் பூமி
உயிரில் குறி வைத்து அடிக்கும்
பேருயிர்

நானொரு
இறந்து/வாழ்ந்து கொண்டிருப்பவன்
என் பெயர் மியாக்கண்ணு

இந்தக் கவிதையில் எந்தவொரு நிலமோ பண்பாடோ காலச்சூழலோ இல்லை. இது காலமற்ற காலத்தில் எல்லா மனிதனுக்குமான இன்னும் சொல்லப்போனால் எல்லா
உயிருள்ள உயிரற்ற ஜடப் பொருட்களுக்குமான கவிதையாக எல்லாக் காலத்திலும் பொருளாகிறது.

காற்றின் பாடல், அகாலம் ஆகிய இரு தொகுப்பிலும் இவ்வகை நிலமற்ற கவிதைகளே அதிகமாக உள்ளன. ஒரு சில கவிதைகளில் நிலமும் பண்பாட்டுச்சூழலும் இருக்கிறது ஆனால் அவைகளும் கூட கவிதையின் மையப் படிமத்துக்கு துணை செய்யும் அசைக்க இயலா சொற்களாக இல்லை உதரணமாக சமயவேலின் இன்னொரு புகழ் பெற்ற கவிதையைப் பார்க்கலாம்:

அவன் பாடல் 

ஆறுமுகக் கிழவன் பாடிக் கொண்டிருக்கிறான்
ராத்திரி முழுதும் விடிய விடிய

பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்
சொத்தும் அற்றான் இரத்தம் உலர்ந்து
தசைகள் கரைந்து எண்ண முடியாக்
கோடுகளாகத் தோலும் சுருங்க
மீதி உயிரையும் பாடலாக்கி
இரவை நிரப்புகிறான்

கைத்தடிச் சப்தம் தெருக்களில் எழுப்பி
தட்டு நிரப்பி நாட்களைத் தொடர்கின்றான்

கூடை பின்னலில் விறகு கீறலில்
ஒயில் கும்மியில் சிலம்பக் கழிகளில்
வாடிக் கள்ளில் கறுப்புப் பெண்களில்
கடந்து முடிந்த வாழ்வு முழுதும்
பாடலாகி வெளியை நிரப்ப
காலியான நெஞ்சினோடு
காற்றில் தூங்குகிறான்
ஆறுமுகக் கிழவன் அனாதைதான்
உலகு போல வானம் போல.

இந்தக் கவிதையில் ஆறுமுகக் கிழவன் எனும் ஒரு பெயர் உள்ளது மேலும் ஒயில் கும்மியில், சிலம்பக் கழிகளில், வாடிக் கள்ளில் போன்ற சொற்கள் வழியாக ஒரு பண்பாட்டு காலச்சூழல் சுட்டப்படுகிறது. ஆனால் //ஆறுமுகக் கிழவன் அநாதைதான்/ உலகு போல வானம் போல// எனும் கவிதையின் இறுதி இரு வரிகள் வழியாக இந்தக் கவிதையின் மையம் கொடுக்கும் மன உணர்வு எந்த பண்பாட்டோடும், காலச்சூழலோடும்  தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த மானுடகுலத்தன்மை உடையது. இந்த வகைக் கவிதைகளே சமயவேலின் உச்சபட்ச சாதனை என்று நான் சொல்வேன். இந்த வகைக் கவிதைகள் வழியாகவே சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் முதன்மையான கவியாக ஆகிறார்.

ii)
தமிழில் இருத்தலியத்தின் செல்வாக்கு 90களின் பிற்பகுதியில் மெல்ல மங்கத் துவங்கியது. இந்தக் காலக்கட்டத்தை நாம் தமிழ் இருத்தலியத்தின் மூன்றாவது காலக்கட்டம் எனலாம்.    இன்றும் கூட எழுதப்படும் கவிதைகளில் இருத்தலியச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் 1970 அல்லது 80 களில் இருந்ததை போன்ற தத்துவார்த்தமான இருத்தலியல் மோகம் இப்போது இல்லை என்பதே உண்மை. மேற்கில் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள் இருத்தலியத்தை அப்புறப்படுத்திய சூழலில்தான் இங்கு இருத்தலியம் செல்வாக்கோடு இருந்தது.  தமிழிலும் அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் நிகழத்துவங்கிய காலத்தில் எழுத வந்த புதிய தலைமுறை ஒன்று தங்கள் இருத்தலிய அகமனச் சிக்கல்களை கடந்து அரசியல் பிரக்ஞையோடு எழுதத் துவங்கின. மேலும் பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற எழுச்சியோடு கிளம்பிய விளிம்பு நிலை உரையாடல்களும் இருத்தலிய உரையாடல்களை சற்றுப்  பின் நோக்கித் தள்ளின.

இந்த மூன்றாவது காலகட்டத்தில் தமிழ் இருத்தலியமானது இரண்டாவது காலக்கட்டத்தை விடவும் அதிகமாக சமகால அரசியலை பேசுவதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்தக் காலக்கட்டத்தை சேர்ந்த சமயவேலின் கவிதைகள் அவரின் முந்தைய கவிதைகளில் இருந்து சற்று மாறுபட்டவையாகவே இருக்கின்றன. காலம் மற்றும் வெளி உருவாக்கும் அபத்த உணர்விலிருந்து சற்று விடுபட்டதாக இருக்கின்றன. ”மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பில் ஒரு கவிதை


நானும் என் நிழலும் 

எந்த இடமென்று இல்லை
என்னிலிருந்து
என் நிழலை உருவி
வீழ்த்துகின்றன ஒளிக்கற்றைகள்
சாக்கடையிலும் குப்பைமேட்டிலும் கூட
விழுகின்றன
என் நிழல்கள்
..........................
.........................

என் நிழல்தான்
ஆனால் என் விருப்பம்
என் சம்மதம் என்று
எதையும் அது கேட்பதில்லை

..........................
.........................
........................

பெளதிக உலகில்
ஒரு பெளதிகப் பண்டம் நீ
நிழல் சொல்கிறது
ஒளி சொல்கிறது
ஏன் சுவரே சொல்கிறது

பெளதிக உலகில்
ஒரு பெளதிகப் பண்டம் நீ

இல்லை இல்லை என
அலறுகிறது
எனக்குள் ஏதோ ஒன்று


இவ்வாறு முடியும் இக்கவிதை இருத்தலிய அபத்தத்தை நம்ப மறுக்கிறது. அதைக் கடந்து போக விழைகிறது. மேலும் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் இவரது முந்தைய கவிதைகளை விடவும் நிலம் சார்ந்து இயங்குகின்றன. மின்னிப்புற்கள், மிதுக்கம் பழங்கள், முசுமுசுக்கைச் செடி, நுணாமரப்புதர், மயில் கழுத்து நீலம், மந்தைக் கருப்புசாமியின் ஆங்காரம் என மண்வாசம் நிறைந்த கவிதைகளாக இந்தத் தொகுப்பில் உள்ளன. அகாலம் என்று ஒரு தொகுப்புக்கு பெயரிட்டு காலமற்ற நிலமற்ற வெளியில் இயங்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் ”மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்”  என்ற தொகுப்பின் வழியாக மண் சார்ந்த படிமங்களை பேசுபவராக மாறி இருக்கிறார்.
இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றான “இரவின் தீராப்பகை”  எனும் நெடுங்கவிதை நம் கைவிட்டு போய்க்கொண்டிருக்கும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் பற்றி கருப்பின் ஆங்காரமான குரலில் பேசுகிறது. சமயவேலின் கவிதைகள் அவரது முந்தைய கவிதைகளை விடவும் அரசியலாக்கம் பெற்றிருப்பதற்கு இந்த கவிதை ஒரு சான்று.

iii)

பிளைன் பொயட்டிரி எனப்படும் நேரடிக் கவிதைகள் அல்லது ஓருடல் கவிதைகளில் சமயவேல் ஒரு சாதனையாளர். தமிழில் இன்றும் சிறந்த முறையில் எழுதப்படும் நேரடி கவிதைகளுக்கான முன்னோடிகளில் சமயவேலும் ஆத்மாநாமும் சுகுமாரனும் முக்கியமானவர்கள். நேரடிக் கவிதைகள் எழுதும் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு பாணி உள்ளது. பாசாங்கற்ற எளிய மொழியில் உள்ளார்ந்த இசைமையோடு நெஞ்சு கொப்பளித்து பெருகி வரும் இவரின் சொற்கள் வாசகனை முதல் வாசிப்பிலேயே சொக்க வைத்து விடும் வலிமை கொண்டவை. இந்தத் தொகுப்பில் நேரடிக் கவிதைகளைக் தவிரவும் ”குற்ற நிலவறை” “முள்ளில்” போன்ற உரைநடைத் தன்மை மிக்க கவிதைகளும் பார்மலஸ் பொயட்டிரி எனப்படும் உருவுமைகடந்த கவிதைகளும் சோதனை முயற்சியாக எழுதப்பட்டிருக்கிறது.   

இறுதியாக சொல்வதெனின், இவ்வளவுக்கும் பிறகும் இப்பூமியில் நான் இருக்க விரும்புகிறேன் அதுதான் என் சாரம்சம் என்று  சொல்லும் சமயவேலின் கவிதைகள் மனித வாழ்வின் சாரம்சத்தை தத்துவங்களின் வியாக்கானங்கள் வாயிலாகவும் கவிதையின் உணர்வுபோதத்தின் வாயிலாகவும் புரிந்து கொள்ள முயல்பவை. புரிய இயலா சந்தர்பங்களில் சற்று அவநம்பிக்கை கொண்டாலும் புரிந்து கொள்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பவை.   

(28.08.2011 கோவையில் நடந்த “அகத்துறவு” இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
ooooooo

Comments

  1. சரியான பார்வை பயனுள்ளதும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts