சிறுகதை: சமயவேல்

                                                                                               
                        360 பாகையில் சுழலும்               இளவரசி இனிப்பக சந்திப்பு

                    பஸ் வந்தபாடில்லை. ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே நிற்கிறேன். முதலில் வந்த பஸ்களைத் தவறவிட்டது சரியல்ல என்று தோன்றியது. கடந்த பதினேழு ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. இளவரசி இனிப்பக நிறுத்தத்திற்கு எப்பொழுது வந்தாலும் இப்படித்தான் நின்று கொண்டே இருக்கிறேன். பேருந்து நிறுத்தத்திற்கு துணைக்கு நிற்பது போல. உட்கார பெஞ்ச் எதுவும் இல்லாத மொட்டை நிறுத்தம்தான் எனினும் இந்த இடத்தில் ஏதோ ஒரு வசீகரம் அல்லது மாயம் இருக்கிறது.  நிறைய பஸ்கள் வரத்தான் செய்கின்றன. நான் தான் ஏறுவதில்லை. கூட்டம் அதிகம், நெளிந்த பழைய பஸ், தள்ளிப்போய் நின்ற பஸ், கர்ண கொடூர ஹார்ன் அடித்த பஸ் என்று தர்க்க ரீதியான காரணங்களுடன் நின்று கொண்டே இருக்கிறேன். ஒரு பத்து பஸ்களைத் தவறவிட்ட பிறகுதான், நான் அதர்க்க வெளியில் மிதப்பது புரிகிறது. அப்படி என்ன பேரழகு இந்த நிறுத்தத்தில் இருக்கிறது?

          நான்கு சிறிய சாலைகள் சந்திக்கிற இடத்தில் வடக்குப்புற சாலையில்தான் இந்த நிறுத்தம் இருக்கிறது. நிற்கிற இடத்திற்கு 60 பாகைக் கோணத்தில் இளவரசி இனிப்பகம் இருக்கிறது. புகழ்பெற்ற அந்த இனிப்பகத்தில் மனிதர்கள் எப்பொழுதும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ணிப் பார்த்தால் மொத்தம் எட்டுப் பேர் நிற்கிறார்கள். எட்டுப்பேர்களுமே குண்டுகுண்டாக இருக்கிறார்கள். கல்லாவோரம் நிற்கிற சுடிதார் அணிந்த பெண் ரொம்ப குண்டாக இருந்தாள். டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள் பரவாயில்லை. அல்வாவை வெட்டிக் கொண்டிருக்கும் கடைப்பையனும் நல்ல குண்டுதான். ரேக்குகளில் அடுக்கிய பிரட்களை நோக்கி கை நீட்டியபடி இருக்கும் பெரியவர் கூட குண்டாகத் தெரிந்தார். விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. தர்க்கம் அதர்க்கம் இரண்டும் ஒரு பெருங்கோணமாய் எங்கிருந்தோ கிளம்பி வந்து இந்தப் பேருந்து நிறுத்தப் புள்ளியில் குவிக்கும் அர்த்தமின்மையின் மேல் நான் நிற்கிறேன் போலும். 

                   இடதுபுற மூலையில் லட்சுமி மருத்துவமனை இருக்கிறது. டாக்டர் சந்தானலட்சுமி அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியை. ஆனால் ஒரு நாளின் பெரும்பகுதி நேரமும் இங்குதான் இருக்கிறார். அதுவும் அவரது அறுவைக்கூடத்தில். கால்வலி, கைவலி, வயிறுவலி, இடுப்புவலி என எந்தப் பெண்மணி வந்தாலும் உடனே இது முற்றிய கர்ப்பப்பைக் கோளாறு என்றும், ஸ்கேன், குருதிப் பரிசோதனை என்று தொடங்கி அறுவைச் சிகிச்சையில் போய் முடிப்பார். நகரின் வடபகுதியில் வசிக்கிற 40 வயசுக்கு மேற்பட்ட எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பைகளை அகற்றிவிட்டதாக பெருமைப்பட்டுக் கொள்வார். கர்ப்பப்பைகளோடு கருமுட்டைகளையும் இழந்த பெண்களும் ஏராளம். ஆனால் உள் ஊனம் அடைந்திருக்கும் இந்தப் பெண்கள் எல்லோரும் பலவகையான உடற்கோளாறுகளால் பீடிக்கப்பெற்று குறைந்த வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருப்பது எவருக்கும் தெரியாது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் சுமக்க விரும்பாத கர்ப்பப்பை இருந்தாலென்ன போனாலென்ன என்பது டாக்டர் சந்தானலட்சுமியின் வாதம். டாக்டர் தம்பதிகளில் கணவர் மயக்கமருந்து மருத்துவர். அவருக்கு மருத்துவ மனையில் எந்த வேலையும் கிடையாது. வலது ஓரம் உள்ள லட்சுமி மருந்தகத்தில் ஒரு ஸ்டூலில் சும்மா உட்கார்ந்திருப்பார். மருந்துக்கடைப் பெண்களிடம் அரட்டை அடிப்பது அல்லது செய்தித்தாள் படிப்பது என எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே சாலைகளின் சந்திப்பைப் பார்த்தபடியே உட்கார்ந்திருகிறார். மயக்கமற்ற மயக்க நிலை அல்லது மருந்தின்றியே மயக்கமூட்டும் ஆய்வுகளில் அவர் ஈடுபட்டிருக்கிறாரா என்று நிச்சயமாகக் கூறமுடியவில்லை. எனக்கென்னவோ அவரை ஒரு அசேதனப் பொருளாக ஆக்கியிருக்கும் சூட்சுமம் அந்த நான்கு சாலைகள் சந்திக்கிற நடுப்புள்ளியில்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லையென்றால் எதற்காக அந்தப் புள்ளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?

                   நான் நிற்கும் இடத்திற்கு நேர் எதிரே டாஸ்மாக்கின் எட்டாம் எண் கடை இருக்கிறது. வழுக்கைத் தலையர்கள் இருவர் அட்டைப் பெட்டியில் இருந்து பாட்டில்களை எடுத்து ஷெல்பில் அடுக்குகிறார்கள். சுமோவிலிருந்து ஐந்தாறு பேர் கூட்டமாக இறங்கி  ஓடுகிறார்கள். என் கண்களுக்கு 90 பாகை நேர்ச்சந்தின் முடிவில் ஒரு பார் இருப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். சந்தோஷத்தின் கூச்சலும் கலவையான பித்தமொழிச் சொற்களும் பாரை நிரப்பி வெளியேறி எல்லாச் சாலைகளிலும் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. டீ ஷர்ட் அணிந்த இளைஞர்களின் கூட்டம் ஒன்று ஆனந்தமாக உரையாடியபடி கடைமுன்பு நிற்கும் இருசக்கர வாகனங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி டீ ஷர்ட் அணிந்த இளைஞர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் வாசலில் இருசக்கர வாகனங்களில் சாய்ந்தபடி அமர்ந்தபடி மச்சி மச்சி என்று ஆனந்தமாக உரையாடும் அற்புதக்காட்சி ஒன்று எனது கண்முன் தோன்றி மறைந்தது.

                  என் முதுகுக்குப் பின்னாலிருந்து, நகர்ப்புறம் கிராமப்புறம் என்ற பேதமின்றி நவீன தமிழகம் முழுவதும் முன்னிரவிலிருந்து நள்ளிரவு வரை கேட்கும் அந்த ஆனந்தப் பேரோசை, கொத்துப்புரோட்டா போடும் டங் டங் என்ற இன்னிசை வந்துகொண்டிருந்தது. பல்லாரி வெங்காயத்தோடு முட்டைகள் பொரிபடும் வாசனையொடு புரோட்டாவின் வாசமும் கலப்பது பற்றி ஒரு கவிதையே எழுதலாம். சிங்கம் புரோட்டாக்கடை என்றால் சாதாரணமில்லை. உரித்து மசாலா முக்கிய கோழிகள் கடையைச் சுற்றிலும் தொங்க, நூறு பேருக்குமேல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இலவசம் போல பார்சல் வாங்குபவர்கள் கூட்டம் ஒருபுறம் முண்டியடித்து நிற்கிறது. இளவரசி இனிப்பகத்தில் நிற்பவர்களைவிட கனத்த ஆட்கள் பெரிய பெரிய பைக்குகளில் வந்து இறங்குகிறார்கள், ஏறுகிறார்கள். சிங்கம் புரோட்டாக்கடை ஓனர் சிங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோரிப்பாளையமே கண்டு நடுங்குகிற பெருவீரன். செல்லூருக்கும் வயல்காட்டுத் தெருவுக்கும் ஏழு நாட்கள் நடந்த கடும்போரின் இறுதியில் சிங்கத்தின் தலையற்ற உடல் இந்த நான்கு சாலைகளும் சந்திக்கிற நடுப்புள்ளியில் கிடந்தது. சிங்கத்தின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், மதுரை மாவட்ட ஏழாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கொலைவழக்கு நிலுவையில் இருக்கிறது. கடையின் கூரையில் மேல் கக்-கக்-கக் என்று கத்தியபடி சுற்றிக் கொண்டிருக்கும், இன்று மாலை தோலுரித்து மசாலா தடவி தொங்கவிடப்பட்ட கோழிகளின் ஆத்மாக்கள் சிங்கத்தின் ஆத்மாவைச் சந்தித்து அவரது தலை என்ன ஆனது என்று கேட்டுச் சொன்னால் ஒருவேளை நாம் இந்தச் சாலைச்சந்திப்பின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளமுடியலாம். இந்தக் கோழிகளின் தலைகள் செல்லூர்க் கால்வாயில் அப்பொழுதே கொட்டப்பட்டுவிட்டது வேறு விஷயம்.

            இந்த நகருக்குக் குடியேறிய கடந்த பதினேழு ஆண்டுகளாக ஏராளமான முறைகள் இப்படித்தான் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டே இருக்கிறேன். ஒரு சில ஆண்டுகள் இந்த நிறுத்ததின் இடதுபுறம் இருக்கிற மகாத்மா பள்ளிக்கு எதிரில் இருக்கிற தெருவின் கடைசி வீட்டுக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். தொடர்ந்து வெறுமையில் மூழ்கி சஞ்சலத்தில் மிதக்கும்
மனநிலையை மாற்றி ஆனந்தத்தின் விளிம்புகளைத் தொட வைக்கிற வசீகரம் ஒரு தோழியின் ரூபத்தில் அந்த வீட்டில் இருந்தது. உரையாடலுடன் தோசை சாப்பிடுவது, மசாலாக் கடலை கொறிப்பது, காபி குடிப்பது என்பவையெல்லாம் முக்கியமான விஷயங்கள் அல்ல. உடலுறவும் பணமும் சம்பந்தப்படாத அற்புதமான புல்வெளிகளில் மட்டுமே நாங்கள் முத்தமிட்டுக் கொண்டோம். எதார்த்தத்திலிருந்து விலகிய அறைகளில் நாங்கள் தழுவிக் கொண்டோம். மனம் நிரம்பிவிடுகிற மணித்துளி ஒன்றில், 'சரி வரட்டுமா?' என்று கிளம்பி இந்தப் பேருந்து நிறுத்தத்தை அடைவதுதான் மிக முக்கியமான விஷயம். ஒரு சராசரி மனநிலையை அடைகிறவரை அந்த நிறுத்தத்திலேயே நின்றுவிடுகிறேன் போலும். ஆனால் ஏதோ ஒரு காரணமாக அந்தப்பெண் ஒரு பெருநகரத்துக்குச் சென்றுவிட்ட பிறகும் அப்படித்தான் நடந்தது. இந்த நான்கு சாலைகளும் சந்திக்கிற, சிங்கத்தின் உடல் கிடந்த நடுப்புள்ளிதான் ஒரு சூட்சுமத்தளத்தில் என்னை நிறுத்திவிடுவதாக சமாதானம் செய்துகொண்டேன்.

             பிறகு சில காலமாக இந்த நிறுத்தத்திற்கு வலதுபுறம் இருக்கிற சாலையில் சந்தையைத் தாண்டி இருக்கிற சந்தில் ஒரு நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். அந்த வீட்டில் எல்லா உயிர்களிலும் எனக்கான ஆனந்தம் ஒரு துளி இருந்தது. குறிப்பாக அங்கு இருந்த செம்மஞ்சள் நிற நாய்க்குட்டி உடனே ஓடிவந்து என் பாதங்களை ஒட்டிப் படுத்துக் கொள்ளும். நண்பரின் மூத்த பையன் நான் கிளம்புகிற என் கூடவே சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பான். நண்பருக்கும் அவரது மனைவிக்கும் நடக்கிற சச்சரவுகளைத் தீர்ப்பதாகவே என் பொழுதுகள் கழியும். அந்தத் தெருவிலிருக்கிற எல்லா வீட்டினருமே ஒருவகை ஆனந்ததோடு என்னை வரவேற்பதும் உள்ளே வாங்க என்று கூப்பிடுவதும், காபி குடிக்கச் சொல்வதும் ஏனென்றே புரியாத ஒரு பரவச மன நிலையை வெகு வேகமாக உருவாக்கிவிடுகிறது. எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளிடமும் சமதையாக பேசிச் சிரிப்பதும் விளையாடுவதும் எனது இயல்பென அந்தத் தெரு உணர்த்தியது. ஆனால் ஒரு தினம் நண்பரின் வீடு பூட்டிக் கிடக்கவே எதிர்வீட்டு சுனன்யா என்னை வீட்டுக்குள் வருமாறு அழைத்தாள். நானும் ஒன்றும் யோசியாமல் வீட்டுக்குள் நுழைந்து ஷோபாவில் உட்கார்ந்து கொண்டேன். காபி போடட்டுமா என்று கேட்டபடியே சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். நான் கூடத்தில் இருந்த டிவியில் ஓடிக்கொண்டிருந்த சன் மியூசிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென வீட்டுக்குள் நுழைந்த அவளது கணவன் என்னைக் கண்டதும் திகைத்தவனாக, ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் நுழைந்தான். உள்ளிருந்தபடியே கண்ட நாய்களையும் யார் வீட்டுக்குள் விட்டா என்று சுனன்யாவிடம் கத்தினான். இதை எதிர்பாராத சுனன்யா நடுங்கிப் போனாள். பரவாயில்லை சுனா வருகிறேன் என்று கிளம்பிவிட்டேன். அன்று மூன்று மணி நேரம் இந்த நிறுத்ததிலேயே நின்று கொண்டிருந்தேன். 360 பாகையும் சுழல முடிகிற மனநிலை ஒரு பைத்ய மனநிலை அல்லது பூரண மனநிலை என்பதை அன்று கண்டு கொண்டேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு இளவரசி இனிப்பக நிறுத்தத்திற்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன்.
     

ooo ooo ooo                   
                   

               


       
   

          

               


       
   

Comments

Popular Posts