Saturday, April 8, 2017


யதார்த்தம் என்பது சகிக்க முடியாத பொதுமனச் சிதைவு

கவிஞர் சமயவேலுடன் ஒரு உரையாடல்
உரையாடுபவர்: எஸ்.செந்தில்குமார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 1

70, 80களில் சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக் கடக் ஆகியோரின் படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவான சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது எழுதுகிறவர்களில் பெரும்பாலும் தென் கொரியப் படத்தின் இயக்குநர் கிம்கிடுக்கின் படங்களைப் பார்ப்பதும் அதன் பாதிப்பில் தங்களது படைப்புகளை உருவாக்குவதிலும் முனைந்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து மாற்று மொழி சினிமாவின் பார்வையாளராக இருக்கிறீர்கள். சமகாலப் படைப்பாளிகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள இது தலைமுறை இடைவெளி என்ற போதிலும் கிம்கிடுக்கின் பாதிப்பின் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

பதில்:

70, 80களின் படைப்பாளிகளில் சிலர்மட்டுமே சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக்கடக், மற்றும் இன்னும் பல உலக இயக்குனர்களின் படங்களைப் பார்த்தார்கள். சென்னை, திருச்சி, மதுரை என பல நகரங்களிலும் திரைபடக் கழகங்கள் அமைத்து உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். தங்களது வாசிப்பு அனுபவங்களோடு அதையும் இணைத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். படங்களின் தாக்கத்தில் யாரும் எழுதவில்லை.  இப்பொழுது உலகப்படங்கள், குறுவட்டுக்களாகவும் எண்வட்டுக்களாகவும் டோர்ரன்ட், யூ ட்யூப் என எளிதாகக் கிடைத்தாலும் யாரும் அவைகளின் தாக்கத்தில் கதையோ கவிதையோ எழுதுவதாக சட்டென்று கூறிவிட முடியாது. தென்கொரிய இயக்குனர் கிம்கிடுக் எனக்கும் மிகப்பிடித்த இயக்குனர்.  சமகால இளையவர்களின்  சமூக-உளவியல் மற்றும் பாலியல் சிக்கல்கள், வித்தியாசமான இசைவுடன் கூடிய அழகியல் காட்சிக் கோர்வைகளாக பார்வையாளர்களை அலைக்கழிக்கின்றன. சம்மர்,வின்டர்படம் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலைப் போல ஆன்மீகத் தேடலை, பாலியல் ரீதியாக அணுகும் அற்புதமான படம்.          3-ஐர்ன், டைம், தி போ, ப்ரீத், ட்ரீம் என பல படங்கள் எனக்குப் பிடித்தவைஉலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டாலும் கொரியாவில் சர்ச்சைக்குரியவராகவும், பெண்ணிய இயக்கங்களின் கண்டனத்துக்கு உரியவராகவும் கிம்கிடுக் இருந்திருக்கிறார். கிம்மின் 2013 படமான 'மொய்பியஸ்' படத்தில் ஆணுறுப்பைக் கடித்துத் துப்புகிற காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எனது  ண்பர் லஷ்மிசரவணக்குமார் ஒரு முழு நாவலையும் அந்தப்படம் மாதிரியே எழுத முயன்றிருக்கிறார். அந்த நாவல் களமான சென்னை மாநகரின் அடியுலகம், கிம்கிடுக் படத்தின் அடிஉலகத்தோடு ஒத்துப்போகிறது. மற்றபடி வேறுயாரும், இப்படி எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கேள்வி 2

தொடர்ந்து இன்றைய நவீன கவிஞர்களுடன் நேரடியான உரையாடலும் அவர்களது தொகுப்புக்களை உடனுக்குடன் வாசிக்கவுமாக இருக்கிறீர்கள். தற்போதைய நவீன தமிழ் கவிதையின் இருப்பிடம் என்னவாக உள்ளது?

பதில்: 70, 80களின் இளம்படைப்பாளிகள் பலரும் தங்களது மூத்த படைப்பாளிகளோடு நேரடியான உரையாடலில் இருந்தார்கள். கவிதை, நாவல், சிறுகதைகள், அரசியல் சித்தாந்தங்கள், தத்துவம், வரலாறு, உளவியல் என்று எல்லாவற்றையும் வாசித்தார்கள். உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். பல நாடகக் குழுக்களும், உலக அளவிலான நாடகவியல் பற்றிய உரையாடலும் இருந்தன. சென்னைக் கலைக்கல்லூரி ஓவியர்களோடு சேர்ந்து, ஓவியக் கண்காட்சிகளை எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கவிதை எழுதுபவர்கள் நாவல் வாசிப்பதில்லை. கதைக்காரர்கள் கவிஞர்களை இளக்காரமாகப் பேசுகிறார்கள். உலக அரசியல் மற்றும் தத்துவம்பற்றிய ஆழமான புரிதல்கள் இல்லை. தீவிரமான தளங்களுக்கு நகர முடியவில்லை.
புத்தாயிரத்தில் சுகிர்தராணி, இசை, இளங்கோ கிருஷ்ணன், கண்டராதித்தன், ராணிதிலக்ஸ்ரீநேசன்லீனா மணிமேகலை என ஒரு பெரிய பட்டாளமே தமிழ் கவிதையுலகைக் கலக்கியது. ஆனால் அவர்களது தொடக்கத் தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு நகர முடியாத ஒரு தேக்கம் வந்துவிட்டது. இவர்களுக்குப் பிறகு வந்த இளம் கவிகளின் பட்டியல் இன்னும் பெரியது. பெரிதும் சமூக வலைத்தளங்கள் சார்ந்து இயங்கும் இந்தக் கவிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லைசிறந்த கவிதைகளை அடையாளம் காண்பது, கவிதைகளை வகைமைப் படுத்துவது, கோட்பாடுகளின் வழியாக கவிதைகளை அணுகுவது போன்ற விமர்சனப் பாங்குகள் தமிழில் மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம் எனலாம். பின் நவீனத்துவம், அமைப்பியல், பின்-அமைப்பியல் சார்ந்த கோட்பாட்டாளர்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது ஏன்கார்களையும் கணினிகளையும் இறக்குமதி செய்வது போல, ஏன் கோட்பாடுகளை எளிதாக இறக்குமதி செய்து பயன்படுத்த முடிவதில்லை?. மொழி சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே அந்த மொழிபேசும் இனக்குழுவின் தொன்மத்திலிருந்து இன்று வரையிலான ஆழ்ந்த வாழ்வியல் சார்ந்தவைவாழ்வியல் உறிஞ்சிக் கொள்ள முடிவதை மட்டுமே நாம் அதற்கு வழங்க இயலும். விமர்சகர்கள் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் பயின்று நமது வாழ்வியலின் அடிப்படை அலகுகளுடன் பொருந்தக்கூடியவைகளை எழுத வேண்டும்அமைப்பியல் என்ற கோட்பாட்டை  ஐரோப்பியர்கள் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். தமிழில், இலக்கிய உலகில் மட்டுமே இயங்கும் கோட்பாடுகள், ஒரு சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முடியாததின் காரணம் பிறதுறைகள் ஏதொன்றிலும் இல்லாத சிந்தனா வறட்சியும், முற்றான ஒருங்கிணைவு இன்மையுமே. மொழி மற்றும் இலக்கிய உலகக் கோட்பாட்டு அறிவுஜீவிகள் தமிழ் வாழ்வின் அடிப்படைகளுக்குள் ஊடுருவ முடியாத ஒரு துயர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

கேள்வி 3
தமிழ் கவிதையைத் தவிர நீங்கள் பிற மொழி கவிதைகள் அதிகமாக வாசிக்கிறீர்கள். அதனதன் உலகம் என்னவாகவுள்ளது?. குறிப்பாக இந்தியாவில் நாம் அதிகமும் அறியாத அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு பகுதிகளின் கவிஞரின் உலகம்?

பதில்:
தமிழும் ஆங்கிலமும் மட்டுமே எனக்கு வாசிக்கத் தெரிந்த மொழிகள். எனவே எனக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் படைப்புகளையே வாசிக்கிறேன். அஸ்ஸாமிய
இளம் கவிஞர் பிஜோய் சங்கர் பர்மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் சந்தித்தேன். தன்னுடையஅசோகாஷ்டமிதொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். குறுந்தொகையை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து  வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகளில் நமது சங்கப் பாடல்களின் கூறுகள் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. சாகித்ய அகடமியின்  ‘இந்தியன் லிடெரச்சர்வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய அளவில் இன்று தமிழ் கவிதைகள், முன்னனியில் இருப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 
பிஜோய் சங்கர் பர்மன் கவிதை:
பட்டம்
ஒரு நுண்ணிய இழையினால்
என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய் நீ
ஆலய மணியுடன்
தனித்த குன்றில்
மற்றும்  நீ
பறந்து  கொண்டிருக்கிறாய்  மேலே

மணி அசைகிறது
மேற்கிலிருந்து வீசும் காற்றில்
கோடையின் முதல் மழை போல
நான் விழுந்துவிட்டேன்
புல்லின் இதயத்தின் மேல்

எங்கிருக்கிறாய் நீ

நிர்வாண  மரங்களுக்குப்  பின்னால்
குன்றின்  உச்சியில்
சூரியன் கீழே போகிறது
அவனது இதயம் பெண்-ஓக்கு மரங்களின் மேல் மேய்கிறது
இரவு காத்துக் கொண்டிருக்கிறது

நீயும் உன்  வழியைத்  தொலைத்துவிட்டாய்
வெகுதூரம் பறந்தபடி
அல்லது  வீழ்ந்து
மூங்கில்  புதர்களின்  மேல்

கவனிக்கப்படாமல்.
அஸ்ஸாமியக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில்: சமயவேல். 


கேள்வி 4
தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்த நீங்கள் தீடீரென சிறுகதை எழுதத்தொடங்கி ஒரு தொகுப்பு கொண்டுவந்தீர்கள். பிறகு சிறுகதை எழுதவில்லை. தொடர்ச்சியாக நீங்கள் சிறுகதையில் கவனம் செலுத்தாதற்கு உங்களது சிறுகதைகளை சரியாக வாசகர்கள் வாசிக்கவில்லையென்ற ஆதங்கம்தானா?

பதில்:
நான் கவிதைகள் எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறுகதைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன். கு.அழகிரிசாமி, கு.ப.ரா., கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, வண்ணதாசன் கதைகளின் தீவிர வாசகனாய் இருந்தேன். வாழ்வின் அலைக்கழிப்புகளால்  எழுதிய கதைகள் பல தொலைந்து போயின. சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த பிறகு திருமணம் குடும்பம் என முற்றிலுமாக பிறிதொரு வாழ்வைத் தேர்ந்து கொண்டேன். முக்கியமாக எனது அரசியல் சார்புகளிலிருந்து மொத்தமாக என்னைத் துண்டித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் நண்பன் கோணங்கி, சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தார். நான் எழுதாமல் போன பல கதைகளையும் அவர் சிறப்பாக எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொண்டேன். எனது மகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது டைரியில் அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகளையே கவிதைகளாக்கி, உருவானதே எனது முதல் தொகுப்பு ‘காற்றின் பாடல்’. அந்த சமயத்தில் தேவதச்சனோடு ஒரு தீவிரமான உரையாடலில் இருந்தேன். கவிதையில் தத்துவத்தின் பங்கு குறித்த எங்கள் உரையாடலில் உறைந்த மௌனங்களே, எனது கவிதைகளை எழுதின. தத்துவம் vs கவிதை உரையாடல், பல கிளைகளாகப் பிரிந்து எங்கள் கவிதைகளை அவரவர் பாணியில் புதியதாக்கியது. எனது நண்பர்களிலேயே, ஏன் தமிழகத்திலேயே, மிக அற்புதமான உரையாடுபவராக தேவதச்சன் இன்றும் இருந்து வருகிறார். அவரது தோழமையின் பாதிப்பால் தான், நான் முழுக்க கவிதை சார்ந்து இயங்கத் தொடங்கினேன். தனிமனிதன் அல்லது சமூகத்தின் உள்ளார்ந்த தவிப்புகளின் ஆன்மீகத்தை பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கவிதைகள் சுமந்துகொண்டு அலைவதைப் புரிந்து கொண்டதால், கவிதை சார்ந்தே இயங்கிவருகிறேன். ஆனால் கதைகள் வழங்கியிருந்த மயக்கமும் கதகதப்பும் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எப்பொழுதும் போல கதைகளையும் தேடித் தேடி வாசிக்கிறேன். அவ்வப்பொழுது ஓரிரு கதைகளையும் பரிசோதனை முறையில் எழுதிப் பார்க்கிறேன். வாசிக்கிறார்களா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தினால் தமிழில் ஒரு படைப்பாளியும் இருக்க மாட்டார்கள். கவிதை தோழி என்றால், கதை காதலியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன். இப்பொழுது ஒரு மெகா நாவலையும், ஒரு சிறுவர் நாவலையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 
        
கேள்வி 5
சமகால நவீன இலக்கிய சூழலில் கவிதை எழுதத்தொடங்கி சிறுகதை நாவல் என பயணிக்கும் இலக்கியவாதிகளை நாம் பார்க்கிறோம். இச்சூழலில் உங்களது மாயஏதார்த்த பாணியிலான மற்றும் பின் நவீனத்துவ பாணியிலான கதை கதையற்ற கதைக்கான எதிர்வினைகளும் வரவேற்பும் சரியாக அமைந்ததா?
பதில்:
கவிதை அனைத்து வகையான படைப்பு வடிவங்களிலும் மையச் சரடாக இருக்கிறது. சிற்பம், இசை, ஓவியம், மட்பாண்டங்கள், ஓலை விசிறிகள், பரதம், கதகளி, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் கவிதையின் தடங்களைப் பார்க்க முடியும். எனவே ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கான பயணம் அவரவர் வாழ்வின் ஒழுங்கோடு மிக இயற்கையாகவே நடக்கிறது. என்னுடைய கதைகளுக்கான எதிர்வினைகள் அல்லது வரவேற்பு பற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. ஆகச் சிறந்த படைப்பாளிகள் எவரும் வாசகர்கள் விருப்பங்கள் பற்றி தனியாகக் கவலைப்படுவதில்லை. அவர்களைக் கலங்கடிக்கும் மொத்த சமூகத்தின் ஒரு பகுதியாகத்தானே வாசகர்களும் இருக்கிறார்கள். மொத்த வாழ்வும் குறித்த எழுத்தாளனின் கவனம் எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொள்கிறது.

அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் தமிழில் ஒரு மிகச் சிறிய குழுவாக இயங்குகிறார்கள். கோட்பாட்டாளர்களே படைப்பாளிகளாகவும் இருப்பதால், அவர்களது சொந்தப் படைப்புகளை முன்னிறுத்தும் பணிகளே இன்னும் நிறைவேறாத சூழலில் இருக்கிறோம். தலித்தியக் கோட்பாட்டாளர்கள் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமநிலையில் ஒரு சிறிய துண்டு கூட இன்னும் கிடைத்தபாடில்லை. அண்மையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் புத்துயிர்ப்பு பெற்று ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார்கள். கார்ப்பரேட்டியம் சகல சிந்தனைப் பிரிவுகளையும் சிதறடித்திருக்கிறது. கிரிமானலிட்டி, ஊடகங்களில், அரசியலில், சமூகங்களில், குடும்பங்களிலும் கூட புற்றாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்று என சகலமும் மாசடைந்து அழிந்து வருகின்றன. எனவே இலக்கிய விமர்சனம் நோஞ்சான் பிள்ளையாகத் தானே இருக்கும். ஒரு திசையற்ற சுழற்காற்றுக்குள் தமிழ் இலக்கிய மையம் சிக்கிக் கொண்டதால், இளம் படைப்பாளிகள் விளிம்புகளில் எழும்பி வருகிறார்கள். விளிம்புகளே புதிய மையங்களாக மாறும் மாயமும் நடக்கும்.

பரிசோதனைப் படைப்புகளைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கூடிவராத சூழலில்தான்   நாம் பலகாலமாக வாழ்கிறோம். பிரேம்-ரமேஷ் கவிதைகளும் கதைகளும் உச்சபட்ச பரிசோதனைப் படைப்புகள். ஜி.முருகனின் ‘மின்மினிகளின் கனவுக்காலம்’ நாவல் 1993ல் எழுதப்பட்டது. முற்றிலும் புதிய வகைமையினால் ஆன இந்த நாவலை கோட்பாட்டாளர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் ஜி.முருகன் எந்தக் குழுவிலும் இல்லாமல் இருந்தார். அதே போல் கௌதம சித்தார்த்தனின் மாய யதார்த்த சிறுகதைகள் குறித்து எவரும் பேசவில்லை. ஆர்.சிவகுமார், கால சுப்ரமண்யம் போன்றவர்களது மொழிபெயர்ப்புகள் பரவலாக வாசிக்கப்படவில்லை. கோணங்கி ஒருவர்தான் தனது கல்குதிரை மூலம் எல்லாவகையான தீவிரப் படைப்பாளிகளையும் ஒருக்கூட்டுகிற பெரும் சக்தியாக இயங்கிவருகிறார்.   

கேள்வி 6
உங்களது கவிதை அழகியலும் நுட்பமான அரசியலும் கொண்டது. காண் உலகின் காட்சிகளையும் எதார்த்தமான நிகழ்ச்சிகளையும் எளிமையான அதேநேரத்தில் பொயட்டிக்கான வரிகளில் சிக்கனமாக கவிதை எழுதுவதில் பெயர்பெற்றவர்கள் நீங்கள். இதற்கு நேர் மாறாக ஃபேண்டஸி உலகின் தோற்றத்தை உங்களது கதைக்குள் கொண்டுவர காரணமாக அமைந்தது என்ன? ஏற்கனவே தமிழில் நிறைய ஃபேண்டஸி மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்து கொள்ளும் முயற்சிதானா?

பதில்:
கவிதையே ஒரு ஃபேண்டஸி தான். யதார்த்தம் என்பது சகிக்க முடியாத வகையில் பொதுமனச் சிதைவை, சமூக சித்தப்பிரமைகளை உருவாக்கியதால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்சிகோவிலும் மாய யதார்த்த எழுத்துகள் தோன்றின. இங்கும் அப்படியான ஒரு சூழல் இன்று உருவாகிவிட்டது. ஜனத்திரளில் எத்தகைய சூழலிலும் புதிய தளங்களை அமைத்துக் கொள்ள முடிபவர்களாக கலைஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு இதயத் தாக்கிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்த ஒரு அதிகாலையில் கண்ட கனவை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எழுதினேன். அதுதான் என்னுடைய  “மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்” சிறுகதை. அந்த ஆண்டு நான் எழுதிய சில கதைகளுக்கு கனவுகளே தூண்டலாக இருந்தன. தினசரி வாழ்வின் சலிப்பிலிருந்தே ஃபேண்டஸி உருவாகிறது. ஃபேண்டஸி வகை வாசிப்பு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. கதையற்ற கதைகள் என்பதெல்லாம் எனது வாசிப்பிலிருந்து கிடைத்தவைதாம். ஒரு கதை எழுதுவதில் உள்ள பலவகையான திறப்புகள், சுதந்திரங்கள், மாய நகர்வுகள் எல்லாம் என்னைப் பெரிதும் கிளர்ச்சியூட்டுகின்றன. ஒரு பத்தியை நாம் எழுதுவதும், அடுத்த பத்தியை கதையே எழுதுவதும் செம த்ரில்லிங். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்குமல்லவா? கதைப்பிரிவில் மிகக் குறைவாக எழுதியிருக்கும் என்னை அந்த மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இணைத்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. சா.தேவதாஸ் ஒருவர் தான் எனது கதைகளைப் பற்றிய ஒரு மதிப்புரையை தமிழ் இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். கால்வினோ போன்ற எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கும் அவரது மதிப்புரையும், நான் பெரிதும் மதிக்கிற எழுத்தாளர் மா.அரங்கநாதன் தொகுப்பைப் படித்துவிட்டு தொலைபேசியில் பேசியதும் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. சில நண்பர்கள் என்னய்யா எழுதியிருக்க என ஏசியதையும் மதிக்கிறேன்.
               
கேள்வி 7
சமகால சிறுகதைகளையும் நாவல்களையும் உடனுக்குடன் வாசித்துவிடுவிதை நான் அறிவேன். தற்போது இவ்வடிவத்தில் இயங்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் அதன் உலகத்தையும் நீங்கள் என்னமாதிரியான அபிப்ராயத்தை வைத்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

பதில்:
இளம் எழுத்தாளர்கள் திசைகளற்ற விளிம்புகளில் இயங்குவது பற்றியும், புதிய மையங்களை அவர்கள் உருவாக்க இருப்பதையும் ஏற்கனவே கூறினேன். சந்திரா, எஸ்.செந்தில்குமார், திருச்செந்தாழை, கால பைரவன் ஆகிய சிறுகதையாளர்கள் இப்பொழுது ஒரு தேக்க நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். கார்ல் மார்க்ஸ் ஜி என்பவரது சில கதைகளை விரும்பிப் படித்தேன். ஆனால் அவரது ஆசானின் கதையுலகம் அவரைப் பாதிக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன்.  சமீபத்தில் கவிஞர் நரன் எழுதிவரும் சிறுகதைகள் கவனிக்க வைக்கின்றன. அண்மையில் நிறைய நாவல்கள் வந்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்வது மாதிரி ஒரு நாவலும் இல்லை. ஜோஸ் சரமாஹோ, மிலன் குந்த்ரே, ஓரன் பாமுக், கால்வினோ, ருல்ஃபோ(ஒரே நாவல்), மிஷிமா, கவாபட்டா, முரகாமி, மியா கூட்டோ, அடிச்சி போன்றவர்களது நாவல்களை வாசித்தபிறகு ஒரு வாசகர், தமிழில் இன்றைய நாவல்களை எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிதையில் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைப் போல கதைப் பரப்பிலும் நடக்கும்.   
      
கேள்வி 8
கோணங்கி. பா.வெங்கடேசன் இருவரின் நாவல்களுக்கான இடம் அதாவது பொதுநீரோடையில் இல்லை. அதற்கான வாசகர்கள் கவிஞர்கள் மட்டுமே என்பதும் சாமன்யாமான வாசகர்கள் அப்பிரதியை எளிதில் அணுகமுடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது. கோணங்கியும் பா.வெங்கடேசனும் உங்களது நெருங்கிய நண்பர்கள். அவர்களது எழுத்துக்களை விவாதித்து வருகிறிர்கள். அதுகுறித்து கட்டுரை எழுதியும் இருக்கிறிர்கள். அவர்களது மொழிகுறித்தும் அவர்களது உலகம் குறித்தும் சாமன்யவாசகனும் புரிந்து கொள்ளவேண்டுமெனில் என்ன செய்யவேண்டுமென நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

பதில்:
கொஞ்சம் வாசிக்க வாசிக்கப் பழகிவிடும். கோணங்கியை வாசித்துக் கொண்டே இருக்கலாம். எல்லாம் புரிய வேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை. வாசிப்பதே பெரிய அனுபவம் அவ்வளவுதான் என நண்பர்கள் கூறுகிறார்கள். உலக இலக்கிய இதிகாசங்களை ஊடிழைப் பிரதிகளாக அவர் கொட்டுவதைப் பலரும் வியக்கிறார்கள். எனக்கு அவரது அண்மை எழுத்துக்களில் ‘வெள்ளரிப் பெண்’ தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை. அவரது ஊருக்கருகில் உள்ள நென்மேனி (இருக்கண்குடி அருகில்) என்ற ஊரில் உள்ள வெள்ளரித் தோட்டத்திலிருந்து அவரது தாத்தா ஊரான நாகலாபுரம் வரை உள்ள நிலப்பகுதியும், அதன் மரம் செடி கொடி என சகல உயிர்களும் மனிதர்களும் மூச்சுவிடும் அந்த மகத்தான கதையை பல முறை வாசித்தேன். அவரது ‘கல்குதிரை’ ஒரு அசாதரணமான முக்கிய பணி என்றும், அது எதிர்காலத் தமிழ் இலக்கியத்தை வெகுவாக மாற்றும் என்றும் நம்புகிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான அற்புதச் சிறுகதைகளை எழுதிவிட்டார். ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ என்னும் அவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பு, தமிழின் சிகரம் தொட்ட தொகுப்பு. பா.வெங்கடேசனையும் ‘ராஜா மகள்’ வெங்கடேசனாக மட்டுமே பார்க்கிறேன். அவரது இரு மெகா நாவல்களிலும் சில பகுதிகள் மட்டுமே எனக்குப் பிடித்திருந்தன. ‘தாண்டவராயன் கதை’ நாவலில் முதல் பகுதிகள் கவித்துவமாக வந்துள்ளது. ஆனால் வரலாற்றுக்குள் நாவல் புகுந்ததும் மூடி வைத்துவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் வரலாற்று நாவல்கள் என்னும் வகைமையின் மீதே ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. நேரடியாக வரலாற்றை வாசித்து விடுகிறேன். தொன்மங்களும் இதிகாசங்களும்  அதே போல புராண இதிகாசங்களை நாவல்களாக எழுதுவதிலும் எனக்கு உவப்பில்லை. ஜேம்ஸ் ஜாய்சின் “யுலிசஸ்" போன்ற இதிகாச ரேகைகளைக் கொண்ட சமகால நாவல்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இதன் மீதான விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை.

கேள்வி 9
ரஷ்ய இலக்கியம், வங்கமொழி இலக்கியம், லத்தீன்அமெரிக்க இலக்கியம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேசத்தின் எழுத்துக்கள் நம்தமிழகத்தை கவர்ந்துள்ளது. அதன் பாதிப்பில் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர் அதன் தொடர்ச்சியாக எழுதியும் இருக்கிறார்கள். நீங்கள் சமீபத்தில் நைஜீரியாவை சேர்ந்த சீமண்டாஅடிச்சியின் எழுத்து குறித்து கட்டுரை எழுதியிருந்தீர்கள். பிறகு ஐப்பானிய நாட்டு எழுத்தாளர் முராகாமியின் எழுத்தை குறிப்பிட்டீர்கள். இவர்களது எழுத்துலகத்தை ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறிர்கள். உங்களது அனுபவத்தை சொல்லுங்கள்.

பதில்:
வாசிப்பது என்பதே வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால் நிறைய வாசிக்கிறேன். சிமமந்தா அடிச்சி இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கும் தொடக்க நிலை எழுத்தாளர். அவரது ‘ஊதா நிற செம்பருத்தி’ நாவல் அதன் இறுதிப்பகுதியில் விபத்துக்குள்ளானது போல் மோதி நொறுங்கிவிடுகிறது. அதைவிட பன்மடங்கு சிறந்த நாவல்கள் தமிழில் இருக்கின்றன. பூமணியின் வெக்கை, பிறகு, பா.சிவகாமியின் ஆனந்தாயி, இமயத்தின் கோவேறு கழுதைகள் என நம்மிடம் பல சிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஆனால் பின்காலனியம் பற்றிய சரியான அரசியல் பார்வை கொண்ட நாவல்கள் நம்மிடம் இல்லை. எனவே தான் சிமமந்தா அடிச்சியை நாம் வாசிக்க வேண்டியதாக இருக்கிறது. அண்மையில் பிரேம் இந்த நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். நைஜீரியா உட்பட்ட ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலரும் காலனிய, பின்காலனிய வாழ்க்கை பற்றி நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக பூர்வீக கலாச்சார அழித்தொழிப்பு பற்றிய அக்கறை இவர்களது பொதுப்பண்பாக இருக்கிறது. மொசாம்பிக் எழுத்தாளர் மியா கூட்டோ (Mia Couto) என்பவரது ‘தூக்கத்தில் நடக்கும் நாடு’ ‘பெண் சிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம்’ ‘அரளிமரத்தடியில்’ ஆகிய நாவல்களை சென்ற ஆண்டு நான் விரும்பி வாசித்தேன். சரமாஹோ, மிலன் குந்த்ரே, பாமுக், முரகாமி வகை நாவல்கள் நம்மிடம் இல்லை. எஸ்.வி.ராஜதுரை ஜோஸ் சரமாஹோவின் நாவல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். முரகாமி, பாமுக் ஆகியோரது நாவல்கள் தமிழில் வந்துவிட்டன. எனவே ஒரு புதுவகையான நாவல் எழுத்துக்கு தமிழ் நிலம் தயாராகி வருகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
      
கேள்வி 10
நாவல் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என்ன ஆனது?

பதில்:
நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் நாவலின் வடிவம் புலப்படவில்லை. அண்மையில் எனக்கு மூளையில் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகத்திலிருந்து எழுதுவதைவிட மறதியிலிருந்து எழுதுவது எளிதாக இருக்கிறது. நாவல் கட்டுப்பாடில்லாமல் போகிறது. என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆட்டோ ரைட்டிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். மெட்டா வகை நாவலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் வரும் மதுரை புத்தகக் காட்சிக்குள் நாவலைக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு  சிறுவர் நாவலையும் ஓரத்தில் எழுதுவதால் ஒரு சமநிலை கிடைக்கிறது.

ooo  
இந்த நேர்காணல், "பேசும் புதிய சக்தி" ஏப்ரல் 2017 இதழில் வெளியாகியுள்ளது.
நண்பர் எஸ்.செந்தில்குமாருக்கும், பேசும் புதிய சக்தி இதழுக்கும் எனது நன்றிகள்.

2 comments:

  1. கவிஞர் சமயவேலை புரிந்து கொள்வது மிக்க கடினமான செயல். அவர் எழுதும் நாவலைப் பற்றி கருத்துக்கள் அவருக்கே குழப்பமாக இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு கவிதையோ , நாவலோ அல்லது சிறுகதையோ எதுவாக இருந்தாலும் அது வாசகனை முழுமையாக ஈர்க்காவிடில் , அதை எழுதி எந்தப்பயனுமில்லை.

    ReplyDelete
  2. VERY NICE
    https://www.youtube.com/watch?v=r0qsZBNxAg8

    ReplyDelete