நூல் மதிப்புரை: சமயவேல்
ஃப்ராய்டின் குடலை பசியால் குடையும்
தோழர் வெய்யில் என்னும் தற்காலப் பாணனின் வண்டுகள்

தமிழில்புதுக்கவிதைஎன்னும் இயக்கம் தொடங்கி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பிறகே, 90களில், ஐந்திணைகளிலும் அகம் புறம் என செழித்த தமிழ்க் கவிதையியலின் தொடர்ச்சியை முற்றிலும் புதிய இளம் கவிகளிடமும் பெண் கவிகளிடமும் காண முடிந்தது. ஊர் பேர் இன்றி காடோ மலையோ கடலோ என அலைந்து பண்களோடுபாடல்களை இசைத்த பாணர்களின் மரபு வெய்யிலின் இந்தப் புதிய தொகுப்பில் சமகாலக் கவிச்சியுடன் வழிந்தோடுவது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். கவித்துவக் கிளர்வை ஒவ்வொரு வரியிலும் எழுப்ப முடிகிற இத்தொகுப்பின் எனது வாசிப்பின் அனுபவத்தை பகிர்வதே இந்த கட்டுரை. விமர்சனம் தமிழில் இல்லை என்னும் கோட்பாட்டாளர்களின் சமீபத்திய குற்றச்சாட்டோடு நானும் உடன்படுகிறேன்.
கவிஞர் வெய்யில் இந்தத் தொகுப்புக்கு சூட்டியிருக்கும் பெயரைக் கேட்டதும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. உளவியல் மாணவனான எனக்கு பழங்கிழவர் ஃப்ராய்டைப் போய் எதற்காக இவர் வம்பிழுக்கிறார் என யோசனையாக இருந்தது. தொகுப்பை வாசித்த பிறகு, ஃப்ராய்டின் ஆழ்மனக் கனவுலக இழைகளில்  சிக்காமல், பசிக்குடல்களின் சமகாலத்துயர், இப்பாணனின் பாடல்களுக்குள் துடிப்பதைக் கண்டேன். நமது கிராமங்களில் இளந்தாரிகளை  காமவம்பிக்கிழுக்கும் கிழடுகளின் பட்டியலில் ஃப்ராய்டையும் சேர்க்கின்றன இந்தக் கவிதைகள்.
தோழர் வெய்யில்
தொகுப்பின் இரண்டாம் கவிதையே, பசிக்குடல்களின் மிக அற்புதமான கவிதையாக இருக்கிறது. ‘நிலக்கரி படிந்த ஒரு நுரையீரலின்/பாடலை நீங்கள் கேட்கத்தான் வேண்டுமா?....../அதோ மேகத்திற்கு அருகே பறந்து திரியும் காக்கைகள்/ சுதந்திரமான நம் நுரையீரல்கள்தானா? நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் பாடல் இது. ‘அதன் மையத்திலிருக்கிறது என் கூலிஎன்பது சமகாலக் கவித் தெறிப்பு. ‘பாட்டாளிகளின் சூதாட்டம்என்னும் கவிதை ஆலையின் கன்வேயர் பெல்ட்டில் நிகழ்கிறது. பெரும் இயந்திரங்களில், தலைக்கவசம் அணிந்து வேலை செய்யும் ஒரு தொழிலாளி தான் இக்கவிதையின் கதாநாயகன். மார்க்சின் 1844 கையெழுத்துப்பிரதியில் விவரிக்கப்படும் அன்னியமாதல் இதுதான். ‘துள்ளலான ட்ரம்ஸ் இசை எங்கிருந்தோ அதிர்ந்து எழுகிறதுஎன்று நம்பிக்கையோடு முடியும் இந்தக் கவிதைக்காரர் காம்ரேட் முனியாண்டியை/வெயிலை ஒரு முறை தோழரே என்று அழைக்க ஆசையாக இருக்கிறது
தோழர்  vs  ஃப்ராய்ட்
ஃப்ராய்டுடன் உரையாடும் மூன்று கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்கவிதையில்
                          என்னிடம் இருப்பதிலேயே
                      பெரும் பிரச்னைக்குரிய உறுப்பபென்றால் அது
                      எனது இரைப்பைதான்
                      அரசு எங்களுக்கு பிரம்மாண்டக் கனவுகளைத் தந்திருக்கிறதுதான்
                      அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டுத் தின்ன இயலாது

இது கவிஞரது தெளிவான வாதம். நிஜத்தில் நடப்பதைப் பற்றி பேசவே முடியாமல் இருக்குபோது கனவுகளின் வழியாக ஒரு மனிதனை ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? கவி, அதே கனவுகளைக் கொண்டே ஃப்ராய்டை வீழ்த்திவிடுகிறார். ஃப்ராய்ட்-2 கவிதையில் மார்க்சுக்கு ஆதரவாக  பாலுக்குப் போராடும் அவரது சிசுவையும் மனைவி ஜென்னியையும் ஃப்ராய்ட் முன் நிறுத்துகிறார். கவிதை சரியாக இருந்தாலும், இப்படி ஒரு கவிதை தேவைதானா?. மேலும் ஃப்ராய்டைத் தாண்டி உளவியல் வெகுதூரம் வந்துவிட்டது வெய்யிலுக்கு தெரியும்தானே.
ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்னும் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஃப்ராய்ட் எட்டிக்கூடப் பார்க்க முடியாத ஒரு அம்மா கவிதையும் இத்தொகுப்பில் இருக்கிறது. 68ம் பக்கத்தில் இருக்கிறமின்மினி விளையாட்டுஎன்னும் கவிதை. ‘பயத்தில் ஈரமாகிவிட்ட கால்சட்டையோடு அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதுவெய்யில், நீங்கள் மட்டுமல்ல. தமிழகத்தில், ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. தத்துவத்திற்கும் கவிதைக்குமான போருக்குப் பதிலாக, உளவியலுக்கும் கவிதைக்குமான போரை வெய்யில் நிகழ்த்திப் பார்க்கிறார். கவிஞர்கள் உளவியல் நோயாளிகளாக இருக்கும் ஒரு சமூகத்தில் கவிதை எழுதுவதே அவர்களைக் குணப்படுத்தும் என்று எனது உளவியல் மருத்துவர் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதை இளம் கவிகளுடன் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

காமாதீதம்
வேட்டையாடித் திரிந்த இனக்குழுக்கள், காமாதீதம் தனது குழுவையே அழித்துவிடும் என்பதை உணர்ந்து ஆண்பெண் உறவில் சில ஏற்பாடுகளையும் விதிகளையும் ஏற்படுத்தின. நதிப்படுகை சமவெளிகளில் குடியேறி வேளாண்மை, நெசவு மற்றும் இன்னபிற தொழில்களையும் கலைகளையும் கண்டுபிடித்த பிறகு நாகரிகங்களும் பண்பாடுகளும் தோன்றின. இறுகிய சமூகங்களின் இனக்குழுக்களின் காமவிதிகள் கடுமையடைந்தன. பெருநகரில் இருந்தாலும் கவிஞன் எல்லாக் காலங்களிலும் காமாதீதத்தின் காடுகளிலேயே தொடர்ந்து வசிப்பதால், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்பெண் விளையாட்டின் விதிகளை மறுபரிசீலனை  செய்பவனாகவும், கடுமையான விதிகளை அசைத்துப் பிடுங்கி எறிபவனாகவும் கவிஞனே இருக்கிறான். இது பெண்கவிகளுக்கும் பொருந்தும். கவிஞர் வெய்யிலும் காமாதீதத்தின் பிடியில் சிக்கி உழல்பவராகவும், இந்தக் காலகட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்பவராகவும் இருக்கிறார்.  இவரது கைக்கிளை காமாதீதத்தின் அமுது மசானத்தீயில் கொதித்துக் கொண்டிருப்பதை வலியுடன் பதிவு செய்கிறது இவரதுகள்ளக் காதலின் அமுதுஎன்னும் கவிதை. கைக்கிளைக் காமாதீதங்கள் தற்கொலைகளிலும் சிதைவுகளிலும், கொலைகளிலும் முடிவதை  இக்கவிதை மூலம் உணர்பவர்களால், இக் கொதிப்புகளின் மனிதாய எல்லைகளை அறிய முடியும்.  ‘இறைஞ்சி மலர்என்னும் கவிதை,, மிக அழகிய திணைச் சொற்களால் எழுதப்பட்ட ஒரு சிறிய பாடல். ‘ராச்சடங்குஎன்னும் கவிதையும் காமம் அழகியலாகும் சிறிய அகப்பாடல். ‘புத்தனின் கர்ப்பக் குடத்துள் சில கருஞ்சிவப்பு மீன்கள் உறங்குகின்றனஎன்னும் கிம்-கி-துக்கிறகு எழுதப்பட்ட கவிதை, காமத்தின் தூய அழகியற் சொற்களால் ஞானபோதம் வரை நம்மை அழைத்துப் போகிறது.
காலத்தின் கருணையால் காமாதீதப் புயலிலிருந்து மீண்ட ஒருவரை மீ எனும் பனந் தீம்பிழிகவிதையில் சந்திக்கிறோம்.’குற்றத்தின் கூர்மையைச் செறித்து மயக்குஞ் சுவையாய் திரளும்காலத்திடம் இந்தக் கவிதையைக் கூறுகிறார்.
              ‘ஓர் இசைத்தட்டாக
               சுழல்கிறாள் நினைவில்
               இசைச் சுழி ரேகைகளில்
               ஊறும் முள் நீ
               ஒலிக்கையில்
               நானவளின் கருக்குடுவையுள்
               நீ என் விந்து திரளாத காலத்துள்.’

இந்தப் பத்தியின் கடைசி இரண்டு வரிகளின் பிறழ்வுக்குள் எங்கோ நின்றபடி அந்த ஈடிபஸ் கிழவர் ஃப்ராய்ட் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. ஆனால் வெய்யில், மேலும் ஒரு பத்தி எழுதி அதை ஒரு ஓவியமாக்கி வெறித்து நிற்கிறார். இந்தக் குற்றத்தின் நறுமணத்திலிருந்து வெய்யில் விடுபடுவதற்கான ஒரு சிறிய நம்பிக்கையை இந்தக் கவிதை அளிக்கிறது. ‘உங்க பேர் என்ன சார்கவிதையில் வரும்சிறிதும் பெரிதுமாய் இரு பெயர்களை இணைத்து வைத்திருப்பவர்ஓரளவு சமன் அடைந்திருப்பதைப் பார்க்கிறோம். 70-71ம் பக்கங்களில் இருக்கும்பற்றி எரியும் இரவுகவிதையில் கைக்கிளையின் சுவடே இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் தங்களது உடல்களைக் கொண்டு சூதாட எத்தனிக்கும்  விளையாட்டு, இன்றைய இளைய தலைமுறையின் வன்முறை மிக்க காதலாய் இருக்கிறது. ‘சிறிய பிளேடுத் துண்டால் உள்ளங்கையில் மருதாணியிட்டுக் கொள்வது குறித்துஎன்று எழுதுகிறார்.
        ‘தயக்கமின்றி நாணயத்தைச் சுண்டுங்கள்
        ஒருபுறம் காமம் மறுபுறம் சாவு
        அவ்வளவுதானே
என்னும் அற்புதமான வரிகள் இந்தக் கவிதையில் வீணாகியதோ என்றும் தோன்றுகிறது. (கிம்-கி-துக் மன்னிப்பாராக).

உற்பத்தி பெருகி வினியோகம் விரிவடைந்த காலத்தில் பண்டமாற்றுத் தொழில் புரிந்தோர் வியாபாரத்தைக் கண்டுபிடித்த பிறகு, பின்காலனியம், உலகமயமாதல், முதலீட்டியம், என்று மெல்ல மெல்ல நாம் இன்று ஒரு சந்தைசமூகத்தை வந்தடைந்தோம். சந்தைசமூகத்தில்  இந்தக் காமாதீதத்தின் அல்லது காதலின் விதிகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டின. ‘உண்மையின் மீது பெப்பர் தூவுதல்என்னும் கவிதையில் இந்தப் புதிய பரிமாணம் வெளிப்படுகிறது. ஆதிச் சந்தையைத் தொடங்கி வைத்த அதே பெப்பர். ‘நம் தேச வரலாறு/சற்று தூக்கலான மிளகு வாசனை கொண்டதுதான்என சரியாக முடிகிறது இந்த துரோகத்தின் பாடல்.
உடைபடும் ஆதித் தொன்மம்
பலியானவளின் சரித்திரம்கவிதையில் தென்தமிழகக் கிராமங்களின் ஆதித் தொன்மம் உக்கிரமாக வெளிப்படுகிறது. முழுக்க வட்டார பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டிருப்பது உக்கிரத்திற்கு வலுக்கூட்டுகிறது. கரிசல் கிராமங்களில் விடிய விடிய வில்லுப்பாட்டுகள் கேட்ட பால்யம் என்னுடையது.
                  ‘ஏழேழு ஊழியிலயும் யாரும் காங்காத சிரிப்பு
               அறிஞ்சிக்கிட ஏலாத சிரிப்பு
               நாக்க கடிக்கா பெருமூச்சு விடுதா
               சிரிக்கா சிரிக்கா
               கடக்கண்ணுல தண்ணி ஆறா ஓடுது
மந்திரவாதி பெரும்புலையன் நிறைசூலியாய் இருக்கும் தன் செல்லமகள் இசக்கியின் நெஞ்சுக்கொலையைப் பிடுங்கி தலைவாழை இலையில் சுடலைக்குப் படைக்கும் கதையை பாடுகிறாள் வில்லுப் பாட்டுக்காரி. கேட்டுக் கொண்டிருந்த எசக்கி சன்னதமாகி சுடலைமாடனின் பீடத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பில்இடியாட்டம் மடார்னு விழுந்துச்சி கீறல்விழுகிறது பீடத்தில். வில்லுப்பாட்டுக்காரியைப் பார்த்து                         
                      “ஈரக்கொலைய எப்படி அறுத்தான்?
                  திரும்பப்பாடு”-ங்றா
                  அவளும் எசக்கில்லா
                  வீசுகோல சொழட்டிப்போட்டு
                  அடிச்சா பாரு வில்லு

தொன்ம நாடகம் புதிய இசக்கியால்  உடைபடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறது கவிதை. எசக்கிகளின் உலகில் சிக்கியிருக்கும் வெயிலுக்கு இப்படி ஒரு நிகழ்வைப் பதிவிடுதல் ஒரு பெரிய காரியமா என்ன? .முத்துசாமியின்தொறச்சிசிறுகதையை ஞாபகப்படுத்திய கவிதை இது. 

பாணர் பாடல்கள்

இத்தொகுப்பில் இருக்கும் மூன்று சமகால பாணர் வகைப் பாடல்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. ‘தன்னையறியாமல் பாடும் நாஒரு முழுமையான பாடலாகவே இருக்கிறது. ‘அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா?’ என கவிதை முடியும் போது, சென்ற  தலைமுறையின் வீழ்ச்சி இந்தத் தலைமுறையின் மேல் பெருந்துயருடன் கவிகிறது. ‘சூல் வயிற்றுச் சித்திரம்அந்தக் குழந்தை வளர்வதைப் போலவே வரிவரியாக வளர்ந்து ஒரு அற்புதமான கவிதையாகிவிடுகிறது. ‘நாட்டுப்புறப் பாடல்என்னும் கவிதை ஒரு கச்சிதமான கலித்தொகைப் பாடலாக இருக்கிறது. இளையராஜாவின் ரசிகரான இவர் ஒரு பிசுபிசுக்கும் மெட்டையும் இக்கவிதைக்குள் மறைத்து வைக்கிறார்.

அழிவில் பிறக்கும் சூழலியல்

கவி எப்பொழுதுமே, புழு பூச்சி புல் விருட்சம் சிங்கம் புலி போன்ற ஒரு பூமிவுயிரியே. பூமியையும் தாண்டி, விண்வெளிகளையும் தாண்டி அகண்ட பிரபஞ்சத்தின் வெடிப்புகளில்  பிறந்த புதிய கோளான கவி ஒரு பிரபஞ்சவுயிரியாகவும் இருக்கிறான். காற்று, மழை, நதி, கடல், காடு, மலை என்னும் பூமியின் உயிர் ஸ்தலங்கள் மாசுபடிவதையும் அழிக்கப்படுவதையும் கண்டு மிரண்டு குரல் எழுப்பும் சூழலியல்காரனாகவும் கவிஞன் இருந்து வருகிறான். வெய்யிலின் இந்தத் தொகுப்பிலும் பல சூழலியல் கவிதைகள் இருப்பதில் வியப்பில்லை. வெறும் பிரச்சாரமாக இல்லாமல் அவை கவிதையாகவும் இருக்கின்றன. ‘எங்களிடம் இருநூறு பனை மரங்கள் இருந்தனஎனத் தொடங்கும்பனைகளின் பிள்ளைகவிதையில் தனது பனங்காடு அழிந்து விளையாட்டுத் திடலாக மாறியிருக்கும் பெருந்துயரைப் பதிவு செய்கிறார். அழிந்த பனைகளில் தங்கள் வீடுகளை இழந்த முதிய கிளிகளை இவர் சந்திக்கிறார்.
                       ‘மூச்சிரைத்து திரும்பும் வழியில்
                        மூன்று முதிய கிளிகளைப் பார்த்தேன்
                        அவை என் தோள்களில் இறங்கின
                        நிமித்தமாய் கடலில் சூறை எழுந்து தணிந்தது
                        நான் பனைகளின் பிள்ளையானேன்
கவித்துவம் கள்ளாய்ப் பொங்கும் கவிதையாகவும் இது இருக்கிறது. பனைகளின் அழிவு தேசத்தின் அழிவு என்று சூழலியல் இன்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

 ‘அறத்தடி நீர்என்னும் கவிதை இன்று நீராதாரங்கள் அழியும் துயரை நீர்க்காகங்களோடும்பொருள்மிக்கதோர் தற்கொலையை நிகழ்த்தியஅப்பாவோடும் இணைத்து அற்புதமான கவிதையாக்கிவிடுகிறார். ‘தன்னையறியாமல் பாடும் நாகவிதையிலும் வேளாண்மை அழியும் சோகம் அப்பாவின்/பட்டுக்கோட்டையின் பாடலோடு இணைகிறது. ஊழி கடந்துவரும்பிரெட் பாக்கெட்” 2015ன் சென்னைப் பெருவெள்ளத் துயரைப் பதிவு செய்கிறது. ‘கடன்வாங்கிக் கழித்தல்கவிதையில் விவசாயிகளின் தற்கொலைகள் பேசப்படுகிறது. ‘பூச்சிகளின் உபரி வரலாறுஎன்னும் நீள் கவிதையில் கற்காலத்திலிருந்து தொடங்கும் மனிதனின் வரலாறு பல்கோணங்களில் பத்திபத்தியாகப் பதிவு செய்யப்படுகிறது. மரத்துப்போனஅறவுணர்ச்சியை நான் கல்லின் கூர்மையாலேயே கீறினேன்/ கல் மிகுந்த பயன்பாடுள்ளது நண்பர்களே என்று முடிக்கிறார். (நீள் கவிதைகள் தமிழில் ஏன் வெற்றியடைவதில்லை.? நெடுநல்வாடை எழுதிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரை வேண்டிக் கொள்வோம்).
அந்த வண்டு
               
                ‘சிரமமாயிருக்கிறது….
              புர்ர்ர்ரென்று உங்கள் கவிதைக்குள் சுற்றித் திரியும்
              அந்த வண்டைக் கொல்லுங்கள்

              நண்பரே
              அந்த வண்டு சுற்றித் திரியத்தான் கவிதையே.’
அந்த வண்டு வெய்யிலின் கவிதைக்குள் தொடர்ந்து சுற்றித் திரியட்டும். வாழ்த்துக்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
கவிதைத் தொகுப்பு 80 பக்கங்கள்.
ஆசிரியர்: வெய்யில்
மணல்வீடு பதிப்பகம்
விலை ரூ.80.
 -------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: புத்தகம் பேசுகிறது, டிசம்பர்,2016 

Comments

Popular Posts