Monday, March 31, 2014

தி.க.சி. என்னும் இடதுசாரி இலக்கிய விமர்சகர்.

நெல்லையப்பர்- காந்திமதியம்மன் ஆலயத்தின் மேற்குரத வீதி தொடங்கியவுடனேயே வரும் சிறிய பீடக்கோவிலாகத்தான் சுடலைமாடன் கோவில் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் பெரிய கோவிலாகக் கட்டி இருக்கிறார்கள். சமீபங்களில் இறப்பு வீடுகளுக்குச் சென்றால் கதறலுடன் கூடிய அழுகை ஒன்று என்னைத் தொற்றிக் கொள்கிறது. முன்பெல்லாம் அழுவது என்ற பழக்கமே கிடையாது. அலுவலகம் செல்ல பஸ்-ஸ்டாப்பில் நின்ற எனது தோழி ஒருவர், பிரேக் பிடிக்காத பஸ் மோதி தலை நசுங்கி இறந்து போனார். அடக்கமெல்லாம் முடிந்த பிறகு, மறுதினம் தான் தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு நானும் என் மனைவியும் சென்றோம். தோழியின் பிள்ளைகளைப் பார்த்தவுடன் ஏனோ கதறிக் கதறி அழ ஆரம்பித்துவிட்டேன். அவர் இறந்த முதல்நாள் கூட, அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன். மரணத்தின் எதிர்பாராமை என்னைப் பலமாகத் தாக்கிவிட்டது. அன்று சுடலை மாடன் தெருவுக்குள் நுழைந்தவுடனேயே விசும்பல் வந்துவிட்டது. கண்ணாடிப் பெட்டிக்கருகில் கல்யாண்ஜியைப் பார்த்ததும், அப்பா, என்று கதறி அழத் தொடங்கிவிட்டேன். வேலை என்று எதுவும் பார்க்காமல் சென்னையில் அனாதையாய் அலைந்த நாட்கள் ஞாபகம் வந்துவிட்டன.

                       வல்லிக்கண்ணன் அவர்களது சகோதரர் வீட்டில்தான் தி.க.சி.யை சந்தித்தேன். அழைத்துச் சென்றது வண்ணநிலவன். பிறகு பல முறை சந்தித்திருக்கிறேன். தூத்துக்குடியில் கல்யாண்ஜி இருந்தபோது இருமுறை சந்தித்திருக்கிறேன். தொடர்ந்து அஞ்சல் அட்டை அனுப்பி வந்தார். எனது கவிதை/கட்டுரை/கதை எந்த இதழில் வந்தாலும் படித்துவிட்டு கடிதம் போடுவார். அனேகமாக தமிழில் எழுதுகிற பலருக்கும் முதல் ரெஸ்பான்ஸ், எழுத்தில், தி.க.சி.யிடமிருந்து மட்டுமே வந்து கொண்டிருந்தது. இனி யாரிடமிருந்து வரும் என்பது தெரியவில்லை.

                       பல நண்பர்களை அன்று சந்திக்க முடிந்தது. நான் அண்ணன் கலாப்ரியாவை ஒட்டிக்கொண்டேன். தாய்க் கோழியும் குஞ்சுகளும் போல, நாங்கள் ஒரு குழு அந்த சந்துகளைச் சுற்றி அங்கும்  இங்குமாக நின்று பேசிக் கொண்டே இருந்தோம். சாம்ராஜ் பல விஷயங்களை அண்ணனிடம் துருவித் துருவிக் கேட்டுக்கொண்டே வந்தார். சுந்தர்ஜியும் அதிகம் பேசிக் கொண்டிருந்தார். போகன் சங்கர் வந்ததும் ஒரு இலக்கிய உரையாடல் தொடங்கியது. தமிழ்செல்வன் ஒரு பட்டாளத்துடன் வந்தார். ராமகிருஷ்ணன் சார்வாள் அவரது சேக்காளிகளுடன் வந்திருந்தார். எனது ஆசிரியர் சிவசு ஒரு தனித்த குழுவுடன் இருந்தார். ஏனோ ஜோதிவிநாயகம் ஞாபகமும் வந்து போய்க்கொண்டிருந்தது.
                       நீர்மாலை எடுத்தபிறகு இறுதி ஊர்வலம் செங்கொடி வணக்கத்துடன் தொடங்கியது ஒரு நிறைவாக இருந்தது. ஒரு மனிதன் இந்தியாவில் கடைசிவரை இடதுசாரியாக வாழமுடிந்தது, அந்த இறுதி நேரத்தில், மரித்துப்போன ஆத்மாவைக் கொண்டாடுவதற்கான ஒரு வலுவான காரணமாக அமைந்தது. கட்சிவேலைகளில் ஈடுபட்டு அலைந்த எனது இளம்பருவம் ஞாபகம் வந்தது. மூத்த கலை இலக்கியப்பெருமன்றத் தோழர்களின் துயரம், தோழர் நல்லகண்ணுவுடன் வந்த தோழர்கள் அந்த ஊர்வலத்தை முன்னெடுத்தவிதம், அதில் பழ.நெடுமாறனின் இயக்கத் தோழர்களும் இணைந்து கொண்ட உணர்வு எல்லாம் பார்த்து எனக்குப் பெருமையாக இருந்தது. எனது அப்பாவைக் குறித்த பெருமையாக அந்தக் கணங்கள் நிரம்பித் ததும்பின.

                சோவியத் நாடு, தாமரை இதழ்களில் பணியாற்றிய நாட்களிலிருந்து கடைசிவரை இடதுசாரி இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள், பரந்துபட்ட ஊடகச் செயலர்கள் என எல்லோருடனும் ஒரு இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார் தி.க.சி. தனக்கு சரி எனத் தெரிவதை யார் செய்தாலும் பாராட்டுகிற பண்பு அவரிடம் இருந்தது. மனசுக்குள் பாராட்டிக் கொண்டிருக்காமல் சமபந்தப்பட்டவர்களுக்கும் ஏதேனும் ஒரு வழியில் அதைத் தெரிவித்துவிடவும் செய்வார்.

                தி.க.சி.யின் மூன்று பிள்ளைகளும் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். கணபதி அண்ணன் நினைவும் வந்துகொண்டே இருந்தது. சேதுத் தம்பி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். பெண்கள் எல்லோரையும் மறந்துவிட்டது. காலம் என்னவெல்லாமோ செய்துவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை நினைவுகள். ஞாபகங்கள், வருத்தங்கள். ஆறாத்துயரம் எனினும், குடும்பங்களில் மரணம் என்பது பல சிக்கல்களுக்கு முடிவு தந்து விடுகிறது.


வியாழக்கிழமை முழு நாளும் நெல்லையிலேயே இருந்துவிட்டு கருப்பந்துறை  மயானம் சென்றோம். கருப்பந்துறை பராமரிப்பின்றி அதன் இயல்பில் அதன் அழகுகளோடு இருந்தது. பின்புறம் படித்துறையிலிருந்து நேர்கீழே ஆற்றுக்குள் இறங்குகிற பாதை அடைபட்டுக் கிடந்தது வருத்தமாக இருந்தது. மயானத்திலேயே திரு.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் ஒரு திடீர் இரங்கல் கூட்டமும்  நடந்தது. கூச்சமாக இருந்தது. தள்ளித் தூரத்தில் நின்றபடி புகையத் தொடங்கிய சிதையையும்  நண்பர்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு நடந்து கொண்டிருப்பது  எல்லாவற்றிற்கும் நானும் சாட்சியாக இருந்தேன். தி.க,சி. இறந்துவிட்டார் என்பது மெல்லப் புரியத் தொடங்கியது.

இத்துடன் எனது கவிதை:
(மின்னிப் புற்கள் தொகுப்பு பக்கம் 13)

சாம்பல்
உயர்ந்த மருத மரங்கள் நடுவில்
அகன்ற சாலையில்
ஓட்டமும் நடையுமாக
பூ வண்டியின் பின்னால்
எங்கிருக்கிறது கருப்பந்துறை
ரொம்பத் தூரமா?
கருப்பந்துறை தெரியாதா
வெளியூரா, ஆமாம்
கொஞ்ச தூரம்தான் கருப்பந்துறை
அடர்ந்த மரங்கள் செடிகொடிகள் நடுவில்
சங்கின் ஊதலோடு
கிளம்பியது புகை
வாருங்கள் குளிக்கலாம் என
இறங்கினோம் நதிக்குள்
தாமிரபரணியின்
நீர் நடு மேடொன்றில்
ரம்மியம் அடர்ந்த மஞ்சள் வெயிலில்
பொருத்தமற்று நின்றிருந்தது
ஒரு
சாம்பல்
கொக்கு.
(நன்றி: தீராநதி)

3 comments:

  1. இரங்கல் பதிவு நெகிழச் செய்தது! அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்!

    ReplyDelete