Friday, May 3, 2013

பால்கேயைக் கொண்டாடுவோம்


சமயவேல்: பால்கேயைக் கொண்டாடுவோம்

 

                                           

         
 
 தாதாசேகிப் பால்கேயின் நன்கொடை:

       நூறு வயது இந்தியத் திரைப்படம்

 

                              
 
 
 
 
 
 
20.04.2013 மாலை, மதுரை எட்வர்டு ஹால் திறந்த வெளி அரங்கில்  இந்தியத் திரைப்படத்தின் நூறாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக,  தாதாசாகேப் பால்கேயின்/இந்தியாவின் முதல்த் திரைப்படம் ‘ராஜா ஹரிச்சந்திரா(1913)’வின் சில பகுதிகளும், அவரது ‘காளியா மர்தன்(1919)’ முழுத் திரைப்படமும், பால்கேயின் முதல்த் திரைப்பட முயற்சியின் போராட்டம்  பற்றிய  “ஹரிச்சந்திராச்சி  ஃபேக்டரி” என்னும் திரைப்படமும் மதுரை யதார்த்தா திரைப்படக் குழுமம் சார்பில் நடைபெறுகிறது என்று நண்பர் ‘யதார்த்தா ராஜன்’ அழைத்திருந்தார். எட்வர்டு ஹால் திறந்தவெளி அரங்கில் நண்பர் ராஜன் படம் போடுகிறார் என்றாலே அன்று எப்படியும் மதுரையை நோக்கி மழை வந்துவிடும். அன்றைக்கும் நாலாபுறமும் மேகங்கள் சூழ்ந்து நின்றன.  6.15க்கு சில துளிகளும் தூரலும் கூட விழுந்தன. அப்போதும் ராஜன் மனம் தளராமல் படவீழ்த்தி/ஒலிப்பெட்டிகள் எல்லாவற்றையும் கொஞ்சம் நனையாமல் உள் நகர்த்திக் கொள்ளச் சொன்னார். பெரிய மழை வந்தாலும் பரவாயில்லை உள்ளே போய்க்கொள்ளலாம் என்றும் கூறிக் கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வைக் காண அப்பொழுது ஒன்பது பேர் மட்டும் (யதார்த்தா நண்பர்களையும் சேர்த்து) இருந்தோம். மேலும் ஓரிருவர் வந்து சேர்ந்ததும் ராஜன் மைக்கைப் பிடித்து நிகழ்வைத் தொடங்கினார்.

 

                       1870ல் நாசிக் அருகில் உள்ள  ‘த்ரியம்பகேஷ்வர்’ என்னும் ஊரில் பிறந்த பால்கே, 1885 முதல் 1890 வரை மும்பை ஜே.ஜே. கலைப்பள்ளியில் பயின்றவர். கோத்ரா நகரில் சிறிய புகைப்படக் கலைஞராக இருந்தார். அப்பொழுது பரவிய ப்ளேக் நோயில் அவரது மனைவியும் குழந்தையும் இறந்த பிறகு, லூமியர் சகோதரர்களிடம் பனியாற்றிய ஜெர்மன் மாயஜால வித்தைக்காரர் கார்ல் ஹெர்ட்ஸைச் சந்தித்தார். பிறகு இந்தியத் தொல்பொருள்த் துறையில் வரைவாளராகப் பனிபுரிந்தார். அந்த வேலையும் பிடிக்காமல் அச்சுத் தொழிலைத் தொடங்கினார். ‘செதுக்குக்கலையச்சு’ மற்றும் ‘தைலவண்ண அச்சியல்’ துறைகளில் சிறந்து விளங்கினார்.  தைல வர்ண அச்சுக்கலை நிபுணரான பால்கே, பிரபல இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை அச்சிடும் வேலையச் செய்தார். பின்னாளில் அவரது திரைப்படங்களில், ராஜா ரவிவர்மா ஓவியங்களின் பாதிப்பை நாம் நிறையவே காணலாம். குறிப்பாக அரச உடைகள், ராணி தோன்றும் காட்சிகளின் படமாக்கல் முறை, ஓவியங்கள் போலவே இருப்பதைக் காணலாம். அவரது சொந்த அச்சகத்தைத் தொடங்கினார். ஜெர்மனி சென்று அச்சுக்கலையின் புதிய தொழில் நுட்பங்களையும் எந்திரவியலையும் பயின்று வந்தார். புகைப்படக் கலைஞராகவும் அச்சுக்கலை வல்லுனராகவும் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  செவ்வியல் புகைப்படக் கலையின் அம்சங்களையும் திரைச் சட்டகங்களில் மிக அற்புதமாகப் படமாக்கியிருப்பதைக் காண முடிகிறது. குறைந்த தொழில் நுட்பங்களுடன் கூடிய அந்தக் காலத்திலேயே அவர் மாய யதார்த்தக்  காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம்  பெரும் வியப்புக்குரியது.

                           அச்சகத்தை நடத்துவதில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட சிறிய பிணக்கு காரணமாக சலனப் படங்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். ‘கிறிஸ்துவின் வாழ்க்கை’ என்ற மௌனப்படம் ஒரு பெரிய தூண்டுதலாக இருந்தது. இந்தியக் கடவுள்களையும் திரையில் பிடித்துவிட ஆசைப்பட்டார். லண்டன் நகரம் சென்று இந்தப் புதிய கலைபற்றிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு வந்தார்.

                         1912ல் உருவாக்கப்பட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ படம் 1913 மே மூன்றாம் நாள் மும்பை காரனேசன் சினிமாவில் திரையிடப்பட்டது. ஒரு அசல் கலைஞனான பால்கே, இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்காக அடைந்த துயரமும், இழப்பும், வலியும் (இன்றும் எனது கோடம்பாக்கம் இயக்குனர் நண்பர்கள் இதே சொற்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.) மிக அதிகம். காலத்தின் மேல் ஒரு அழியாத தடத்தை ஏற்படுத்தும் எல்லா முதல் முயற்சிகளிலும் இவ்வாறே நிகழ்கிறது. தனது குடும்பம் முழுவதையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தும் விதம் நம்மைத் திகைக்க வைக்கிறது. மனைவியின் நகைகளைப் பயன்படுத்துகிறார். பால்கேயின் மனைவி சரஸ்வதிபாய் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பல முக்கிய பனிகளை ஏற்றுக் கொள்கிறார். படத்தயாரிப்பு நிர்வாகியாகவும், திரைச்சுருளை பதப்படுத்தும் லேப் அஸிஸ்டன்டாகவும் இருந்ததோடல்லாமல் மொத்தக் குழுவிற்கும் சமைத்துப் போடவும் செய்திருக்கிறார். இந்தியத் திரைபட  நூற்றாண்டு விழாக்களில் திருமதி.சரஸ்வதிபாய் பால்கேயும் கௌரவிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக இந்தத் திரைப்படத்தை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கிறார். ஒரு கேமிராவை இறக்குமதி செய்வது தவிர மற்ற எல்லா வேலைகளையும் இவரது வீட்டிலேயே செய்கிறார். திரைப்படத்தின் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, கலை, உடைத்தயாரிப்பு, எடிட்டிங், டெவெலப்பிங், பிரிண்டிங் என்று எல்லா வேலைகளையும் செய்கிறார். வருங்காலத்தை உலுக்கி எடுக்கப் போகும் திரைப்படக்கலையை ஒரு விளையாட்டைப் போல மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து விடுகிறார். ஒரு திரைப்படத் தயாரிப்பின் எல்லாப் பிரிவுகளுக்குமான அடிக்கட்டுமானம் அன்றே பால்கேயினால் நிறுவப்பட்டுவிட்டது.

 

                        முதலில் எந்தக் கதையை எடுக்கலாம் என்னும் ‘ஸ்டோரி டிஸ்கசன்’ இவர் வீட்டிலேயே நடக்கிறது. உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்னும் ஹரிச்சந்திரனின் கதையைத் தேர்ந்தெடுத்ததின் மூலம்  பால்கே தன்னை ஒரு சமூகக் கலைஞனாக நிறுவிக் கொண்டார். 1919ல் எடுக்கப்பட்ட ‘காளிய மர்தன்’ படத்தில் தனது மகளையே கண்ணனாக நடிக்க வைத்தார். அதை ஒரு கொண்டாட்டம் மிக்க அற்புதமான குழந்தைகள் படமாகவே எடுத்திருப்பது அவரது கலாமேதைமைக்குச் சான்று. புராண, மத ரீதியான படம் என்று ஒரு இடத்தைக்கூட சொல்ல முடியாது. யதார்த்தா ராஜன் பேசும் பொழுது,  இந்தப்படத்தில் கண்ணனின் தோழர்கள் அணிந்திருக்கும் தொப்பிதான் பின்னால் காந்திக்குல்லாயாக மறியிருக்கக் கூடுமோ என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினார். ‘காளிய மர்தன்’ படம் மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு வியப்பாக இருந்தது. இந்தப் படத்தில்  ‘காளியா’ என்னும் பல்தலை அரக்கப் பாம்பு குழந்தைக் கண்ணனைச் சுருட்டிக் கொள்ளும் காட்சிகள் மிக அற்புதமான அண்மைக் (குலோஸப்) காட்சிகளாக, கலாபூர்வமான திரைச்சட்டகங்களாக இருக்கின்றன. பால்கேயை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்த குதூகலம் மிக்க  குழந்தை மனத்தை இந்தப் படத்தில் எளிதில் அடையாளம் காணலாம். 


                           பரேஸ் மொகாஷியின் இயக்கத்தில் 2009ல் வெளிவந்த ‘ஹரிச்சந்திராச்சி பேக்டரி’ என்னும் மராத்திப் படத்தைத் திரையிட்டதின் மூலம் ‘யதார்த்தா’ இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை  முழுமைப்படுத்திவிட்டது. பால்கேயை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் பெரும் ‘முதல் முயற்சி’ ஒன்றைத் தொடங்கவிருக்கும் எவரும் காண வேண்டிய படம்.

சமயவேல்  03.05.2013

 

No comments:

Post a Comment