- Get link
- X
- Other Apps
Search This Blog
எண்பதுகளில் 'காற்றின் பாடல்' தொகுப்பின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு அழுத்தமான தடம் பதித்த சமயவேல் தொடர்ந்து 'அகாலம்' தொகுப்பின் மூலம் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு தனித்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். PLAIN POETRYயை அதன் சரியான கவித்துவக் கட்டமைப்பில் தமிழில் சாதித்திருக்கும் முதல் கவிஞர் சமயவேல். அவரது வலைப்பூ இது.
- Get link
- X
- Other Apps
Labels
ஒரு பட்சியின் சரிதம்
ஒரு கவிதையை வெறும் உள்ளடக்க ரீதியாக அணுக எத்தனிப்பது அந்தக் கவிதைக்கு ஆபத்தை உண்டாக்குகிற காரியம் என்று எண்ணுகிறேன். வெறும் உள்ளடக்க ரீதியான அணுகல்களை அனுமதிக்கும் ஒரு கவிதையை தோல்வியுற்ற கவிதை என்று கூறினால் இந்த அரங்கில் இருப்பவர்களில் எத்தனை பேர் அதை சம்மதப்பீர்கள் என்று தெரியவில்லை. கவிதையைப் பற்றி பேசுவதே கூட ஒரு பெரிய அபத்தம் என்று ஒருமுறை எண்ணியிருக்கிறேன். எத்தனையோ பேர் எத்தனையோ காலம் பேசினாலும் ஒரு சிறந்த கவிதையில் இன்னும் கூறப்பட முடியாத, அணுகப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத ஒருபுதிர்த்துகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தக் துகள்தான் அந்தக் கவிதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாயலைக் கொடுத்து வருகிறது. இப்படியெல்லாம் நான் கூறுவது ஒரு முழு முற்றான முடிவு அல்ல. ஏனெனில் இன்று எதைப்பற்றியும் ஒரு முழுமுற்றான முடிவுக்கு வரமுடியவில்லை. முழுவதுமாக நம்மை ஒப்படைப்பதற்கான வெளியோ, இயக்கமோ, மனிதர்களோகூட நம்மிடம் இல்லை. எனவேதான் 2000க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களின் கவிதைகளில் உள்ளடக்கமே இல்லை என்னும் குற்றச்சாட்டுகளையும் மீறி இன்றைய இளம் கவிஞர்களின் கவிதைகளை விரும்பி வாசித்து வருகிறேன். இந்த விஷச் சூழலில் என்ன உள்ளடக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு இளம்கவி எதிர்த்துக் கேட்டால் கூறுவதற்கு என்னிடம் பதிலேதும் இல்லை. எனக்கான கருத்துருவங்களை உருவாக்கி அதைத் தலையில் தூக்கிக்கொண்டு அலையும் திராணியும் எனக்கில்லை.
“கொட்டும் மழையில்/எங்கொதுங்கி தப்பிக்க/எங்கொதுங்கி தப்பிக்க/ஓடும் ஒரு லாரியின்/ சக்கரத்தினடியில்” என்று ஒரு சிறிய கவிதை. கொட்டும் மழை ஒரு எதார்த்தம் எனில் கவிஞனுக்குக் கிடைக்கும் மாற்று எதார்த்தம் ஓடும் ஒரு லாரியின் சக்கரத்தினடியில் இருக்கிறது. நித்ய முரண்களின் கருப்பு இடைவெளிகளில் அலையும் சீரிய கவிகளின் வரிசையில் இளங்கோ கிருஷ்ணனும் இடம் பிடித்துவிட்டார்.
‘ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டு வர’ என்னும் கவிதையில் அதிகாரத்தின் கொடூரமான சொற்களால் அந்த மரத்தைக் கொலை செய்கிறார். பிறகு “கதவுகள்/ நாற்காலிகள்/ மேசைகள் அல்லது சவப்பெட்டிகள்/ என்ன வேண்டுமானாலும் செய்வோம்” அதிகாரம் பற்றிய உலக மொழிகளில் இருக்கிற பல கொடுமையான கவிதைகளோடு இந்தக் கவிதையும் சேர்ந்து கொள்கிறது. இன்னொரு கவிதையில் “சுகவீனமாய் இருந்த என் குழந்தை/ மரணித்த செய்தி கிடைத்துப் பல நாட்கள் ஆயிற்று/ நான் போக வேண்டும்/ என்னை விட்டுவிடுங்கள் நண்பர்களே” என்று கதறி “எனக்கு இப்பொழுது தேவை/ ஒரு நிம்மதியின் சிகரெட்” என்கிறார். நிம்மதியின் சிகரெட் எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
“ நகரத்தின் அடர்த்தியில் வழி தவறிய இசைத்துணுக்கொன்று ……………………… நம்பிக்கைகள் மெல்லச் சரிந்துகொண்டிருக்கும் நாளில் பலத்த குண்டு வெடிப்பின் ஓசையில் உடல் சிதறிப்” போகிறது.” இந்த நாள் என்னும் கவிதையில் “நம்பிக்கை/ ஒரு புளுகனின் சொற்கள்/ ஆசையோ/ கிழட்டுத் தேவடியாளின் சுருக்குப் பை சபித்திலின் சூறை/ நாறிக்கொண்டிருக்கும் சாக்கடையோர/ புதர் மேட்டில் அரும்புகிறது/ என் ஆசுவாசத்தின் புல்/” என்றெல்லாம் எழுதுகிறார்.
இதே வரிசையில் தீக்குச்சி என்று ஒரு கவிதை இருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் கவிதை என்னும் பிரத்யேகமான அடையாளத்துடன் கூடிய கவிதை இது. தீக்குச்சிக் கவிஞர்கள் ஒரு குப்பைத்தொட்டிக்குள் விழுந்து கிடக்கிறார்கள். ஒரு தீக்குச்சி “தன்னை ஒருத்தி தொட்டு/ மெழுகுவர்த்தி கொழுத்தினாள் என/ பெருமை பீற்றிக் கொண்டது.” ஒரு மனிதனைக் கொழுத்த வல்ல தீக்குச்சிகள் இவையாம். ஆனால் தானே நகரத் தெரியாமல் இதவிடப் பெரிய நாற்றத்திற்கு இடம் பெயர்கின்றன தீக்குச்சிகள். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக இத் தொகுப்பிலுள்ள பகடிக் கவிதைகளைக் குறிப்பிடலாம். ஈழப்பெருங்கொலை நிகழ்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒரு சீரிய கவிஞனின் வெளி இப்படியானதாகத்தான் இருக்க முடியும் என்றும் கருதுகிறேன். அல்லது இன்றைய இந்திய வாழ்வே இப்படித்தான் இருக்கிறதென்றும் கொள்ளலாம்.
கவிஞனுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் அவன் எதையும் குரலுயர்த்திக் கேள்வி கேட்க முடியும். பூட்ஸ் அணிந்த சிறுமி என்னும் கவிதை பெருங்குரலெடுத்து ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறது. “எவ்வளவு போராட்டம்/ எவ்வளவு சிரமம்/ யாராலும் கழட்ட இயலாத/ ஒரு பூட்ஸை யார் அவளுக்கு மாட்டிவிட்டது/ முடிவற்ற இந்தச் சாலையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது அவள் வீடு.” யாராலும் கழற்ற முடியாத பல பூட்ஸ்களை தினம் தினம் நம் வீடுகளில் நமது குழந்தைகளுக்கும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நம்மை சாட்டையால் விளாசுகிறது இந்தக் கேள்வி.
தாண்டவம் என்று ஒரு எளிய சித்திரம்.
பின்னிக்கிடக்கிறார்கள்”
மட்டும்தான் பின்னிப் புரள முடியும் அல்லது இருளில் மறைய முடியும். நிஜமான சக்தியும் சிவனும் அல்ல. இப்படி ஒரு அற்பமான எளிய கவிதையில் இரண்டு மூன்று பரிமாணங்கள் எப்படி வந்தன? கவிதையின் புதிர்ப்பாதையை நாம் விளக்கத் தேவையில்லை.
“பாதானி” என்னும் கவிதை ஒரு அற்புதமான சின்னஞ்சிறு சித்திரம்.
பாதானி என்ற ஒரு சொல்லே போதும். ஆனால் அந்தச் சொல்லுடன் இலைகள் என்னும் சொல். பிறகு கலகலவெனச் சிரித்தன. கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள். இந்தக் கடைசி வரி முந்தைய எல்லா வரிகளையும் விழுங்கிவிடுகிறது. கவிதை இந்த ஒரு வரியைத் தொட்டுத் தொட்டு எல்லா வரிகளுக்கும் பரவுகிறது. அல்லது எல்லா வரிகளிலும் திரள்கிற கவிதையைக் கடைசிவரி தாங்கி நிற்கிறது. இது ஒரு உளடக்கமற்ற கவிதைதான். ஆனால் இது சிறந்த கவிதை ஆகிவிட்டது. 2005க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் என்று நிலாரசிகன் குறிப்பிடுகிற இளம் கவிஞர்களில் பலர் இது மாதிரியான உள்ளடக்கமற்ற கவிதைகளைத்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இது பற்றி இன்னும் விரிவாகப் பேச இடமிருக்கிறது என்று கருதுகிறேன்.
Popular Posts
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment