Sunday, June 6, 2010

கட்டுரை

மதிப்புரை: சமயவேல்

அய்யப்பமாதவனின் ானாய் நிரம்பும் கதைவெளிகள்

நண்பர் எஸ்.செந்தில்குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது அண்மையில் தமிழ்க் கவிஞர்கள் பலர், கதைக்காரர்களாக மாறிவிட்டிருப்பதைக் கவனப்படுத்தினார். கதைக்காரர்கள் கவிதை எழுதுவதுதான் கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம். எனது பெருமதிப்பிற்குரிய சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் கவிதை எழுதுகிறார் என்பது, எழுபதுகளில், கொஞ்சம் வியப்புக்குரிய விஷயமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பலரும் கவிதை, சிறுகதை, புதினம் என்று வடிவ ஒவ்வாமைகள் அற்ற பெரும் படைப்பாளிகளாக இருந்தார்கள். அற்புதமான கவிஞன் யூமா வாசுகி, "இரத்த உறவு" என்னும் தமிழின் மிகச் சிறந்த ஒரு புதினத்தைத் தர

முடிந்ததல்லவா? சமீபத்தில், பெரும் கதைக்காரரான எனது இனிய நண்பர் நாஞ்சில்நாடன் முழுமூச்சாக கவிதைகளை எழுதிக் குவிப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. பண்டைத் தமிழ்க்கவிதை, ஒரு பேராறாக, அவருக்குள் ஓடிக் கொண்டிருப்பதை அவரது புனைவுப் பிரதிகளிலேயே காணலாம். கவிதை எந்த மனிதனை விட்டும் நீங்குவதே இல்லை என்பதாகத்தான் இதை நான் புரிந்து கொண்டேன். எல்லா சேதன அசேதனப் பொருட்களுக்கும், கவிதை, உயிரென ஒளியென நிழலென ஏதேனும் ஒரு ரூபத்தில் ஒளிந்து கொண்டிருக்கத்தான் செய்யும். பல பெரும் புதினங்களுக்குள் கவிதை ஆறுகள் போல பரந்து ஓடிக்கிடப்பதையும், பல சிறுகதைகளுக்குள் கவிதை ஆத்ம ஒளியாகப் புகுந்து கதையை பிறிதொரு தளத்துக்கு நகர்த்துவதையும் பார்க்கிறோம். கவிஞர்கள் கதை எழுதுவதும், கவிதைக்குள் கதை வைப்பதும் பல காலமாக நடந்து வருகிற காரியம்தான்.

மகாகவி பாரதியின் மொழிபெயர்ப்பில் தாகூரின் எட்டு சிறுகதைகளை அண்மையில் மீண்டும் படித்தபொழுது அதிர்ந்து போனேன். எட்டுக் கதைகளும் மதிப்பிடவே முடியாத அற்புதமான கதைகள். அந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஸ்ரீ சுசீந்திரம் யக்ஞ நாராயணா, "கவிதா சத்யங்கள்" என்றொரு சொற்பிரயோகத்தைக் கையாளுகிறார். "கவிதா

சத்யம்" என்பதெல்லாம், இன்றைய தினம், ஒரு மரித்துப் போன சொற்கட்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலகட்டத்திற்குத் தேவையானதொரு சாராம்சமான விழுமியத்தை, கவிதை தன் ஆத்மாவில் ஏந்திக் கொள்கிறது. விரிந்த பெரும் சமூகமாக, படைவலிமையின் அடிப்படையில், மோதும் தேசங்களின் குடிகளாக, மனிதன் வாழத் தொடங்கிய பிறகு சத்யம் போன்ற விழுமியங்கள் மூலம் தனிமனிதனின் ஆத்மாவைக் காப்பாற்றிவிடலாம் என்று கருதினார்கள். ஆனால் அவர்களே ஆள்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் வெவ்வேறு வகையான சத்யங்களைத் தரமுடியாத தருணங்களில் குழம்பி நின்றார்கள். இன்று நவீன தமிழ்க்கவிதை, ஒரு நொய்மையான, திசைகளற்ற குழப்பங்களுடன், மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரைக்குமான பெரும் வரலாற்றுடன் மோதியபடி, குற்றவியல் இழைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. அது பெண்மை பூசியதொரு குரலில் தனக்கொரு வழி கேட்டு, மொழியிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய தருணங்களில்தான் இளங்கவிகள் புனைவின் பக்கம் மெல்ல நழுவிவிடுகிறார்கள். கவிதைகள், அவற்றை எழுதிய கவியை பிறாண்டவும் குதறவும் செய்கிற அபாயம் இருக்கிறது. வரிகள் அதை எழுதியவருக்கே பாதகமாக இயங்கவும் கூடும். மாறாக, கதையை எழுதி முடித்தவுடன் அப்பாடா என்று ஒரு பாரத்தை இறக்கிவைத்த நிம்மதி ஏற்படுகிறது. எழுதியவனுக்கு அகரீதியான விடுதலையை கொடுக்க புனைவுகள் சித்தமுடன் காத்திருக்கின்றன.

மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கும் எனது நெருங்கிய நண்பர் சுரேஷ்குமார இந்திரஜித்திடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, " நாவல் எழுதாவிட்டால் அவ்வளவுதான். நம்மை யாரும் கவனிக்கமாட்டார்கள்" என்று குறிப்பிட்டார். கவிஞர்கள் சிறுகதை எழுதுவதும், சிறுகதைக்காரர்கள் நாவல் எழுதுவதும், சாதா நாவல் எழுதியவர்கள் சரித்திர நாவல் எழுதுவதும், பிறகு அவர்கள் சினிமாவுக்கு வசனம் எழுதப் போவதும் என, நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ப் படைப்புலகின் வடிவ நெருக்கடியைப் பார்த்து சிரிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுப்பைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. என்னுடைய அனுபவத்தில் ஒரு கச்சிதமான சிறுகதைத் தொகுப்பு என்பது ஆல்பர்ட் காம்யூவின் Exile and Kingdom என்ற தொகுப்புதான். அந்தத் தொகுப்பின் எல்லாக் கதைகளும், காலகாலத்திற்கும் நிற்கக்கூடிய அருமையான கதைகள். அதைப் போன்று தமிழிலும் கச்சிதமான

தொகுப்புகள் என்று நான் கருதுபவை வண்ணநிலவனின் "எஸ்தர்" சா.கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" கோணங்கியின் "மதினிமார் கதைகள்" . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவை எல்லாமே அந்தப் படைப்பாளிகளின் முதல் சிறுகதைத் தொகுப்புகள் என்பதுதான். அய்யப்பமாதவனின் இந்தத் தொகுப்பும் முதல் தொகுப்பு என்பதால், இந்தக் கதைகளை ஆவலாகப் படிக்கத் தொடங்கினேன்.

" தானாய் நிரம்பும் கிணற்றடி" கதையில் அகால மரணத்தில் தங்கையை இழந்த ஒரு அக்காவின் சிதைவுண்ட மனவுலகம், ஒரு கனவுபூர்வமான உளவியல் தடத்தில் நகர்கிறது. அய்யப்பமாதவன் கதையை எழுதாமல், கதையின் நிழலை எழுதுகிறார். ஒரு நிசியோடும், தூங்குகிற வீட்டின் இரவோடும், இரவின் நிலவியலோடும் அப்பெண்ணின் உளவியற் தவிப்பைத் தைத்துவிடுகிறார். ஒரு மெல்லிய நூல் அளவே இருக்கிற மனிதமனம், நிகழ்ந்துவிட்ட மரணத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் கலகத்தை நாம் மனநோய் என்கிறோம். கவித்துவ துக்கம் கதை முழுதும் கசிகிறது. அப் பெண்ணைப் புரிந்து கொண்டு அவளைத் தூங்கச் செய்கிற ஆண் பாத்திரம் ஒரு ஆறுதலாக இருக்கிறது. கதையின் நிழலுக்குள் அதன் ஆத்மாவை இழுத்துவரும் வேலையை

இவரது கவிதாமொழி எளிதாகச் செய்துவிடுகிறது.

"பீடியை மனித உருவில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதுமாதிரி இருக்கிறான். அவன் பீடியைக் குடிக்கும்போது பீடியே பீடி குடிப்பது மாதிரி இருக்கும்" என்று ஒரு கதை தொடங்குகிறது. ஒரு சிறந்த கதை, மிகச் சிறந்த வரிகளோடு தொடங்குவது தற்செயலாக அமைவதுதான் சரி. இந்தக் கதை அதன் தொடக்க வரிகளையே கதை முழுதும் சுமந்து வருகிறது. வழ்வோடு பொருந்திப்போக முடியாத கலைஞனின் பாடுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நீல வண்ணத்தில் மட்டுமே தன் குழந்தையையும் மனைவியையும் ஆறுதலையும் காணமுடிகிற கலைஞன், நண்பனின் அரவணைப்பில் ஓரினப் புணர்ச்சியாளனாக மாறுகிறான். நீலம் தான் காரணம். இப்படித்தான் இருக்கிறது எங்கள் வாழ்க்கை என நம் முகத்தில் அறையும் இம்மாதிரியான கதைகள் வந்து கொண்டுதான் இருக்கும்:நமது மொத்த வாழ்க்கையும் மாறுகிற பூகம்பம் ஏதேனும் நிகழ்கிறவரை. உறிஞ்சிக் உறிஞ்சிக் குடித்து, வீசி எறியப்பட்ட துண்டு பீடிகளைப் போலவே மனிதர்களும் வீசி எறியப்படுகிறார்கள். சரியான பீடிக்கதை.

இதே ரீதியில், எவ்வளவோ இடிபாடுகளுக்கு நடுவில், என்ன செய்வது என்று தெரியாமல் உயிர்த்திருக்கும் ஒரு கலைஞனைப் பற்றிய கதைதான் "தங்கக் கயிற்றில் தூக்கிலிடப்படும் முன்...." கதையும். ஆனால் நடப்பு வாழ்வின் நெருக்கடியைத் தாங்க முடியாமல், மூன்றாம் பக்கத்திலேயே கதை ஒரு கனவுலகுக்குள் நுழைந்து விடுகிறது. அங்கே அவனுக்கு வேண்டிய எல்லாம், வேண்டும் மட்டும் தரப்படுகிறது. அவனது எல்லா விருப்பங்களும், படம் எடுப்பது மற்றும் அது பாராட்டப்படுவது உட்பட அவனது எல்லாக் கனவுகளும் நிறைவேறுகிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் விலையாக அவன் தங்கக் கயிற்றில் தூக்கிலிடப்படுகிறான். தமிழ்க் கலைஞர்களின் கதை இப்படித்தான் இருக்கிறது. கதை திடீரென கனவுலகத்துக்குள் நுழைந்து, சினிமாவுடன் அய்யப்பமாதவனுக்கு இருக்கும் நெருக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. நல்ல வேளையாக மாய யதார்த்தம் என்ற மார்க்யூஸ் வகை பதார்த்தம், நடப்பு தமிழ் இலக்கியத்தில் சிறந்த பதார்த்தமாகக் கருதப்படுகிறது.

மாறுகண் கொண்ட பெண்கள் எப்படியாவது மிகச் சிறந்த கதைகளுக்குள் நுழைந்து விடுகிறார்கள். வினோதம், மாறுகண் என்னும் உறுப்பாக, அப்பெண்ணின் உடலை சதா அழித்து அழித்து எழுதத் தொடங்குகிறது. கதையின் முதல் பத்தியில் பேரழகியாகத் தோன்றும் அப்பெண்ணின் திருமணம் தடைபட்டுக்கொண்டே போவதற்கு அவளது மாறுகண்தான் காரணமா? மாறுகண் பெண்ணுக்கும் ஒரு கனவு வருகிறது. முள்ளங்கி போன்ற வெண்மை நிறத்தோடு ஆறடி உயரத்தில் ஒருவன் அவள் நித்திரைக்குள் நுழைகிறான். அவளது அழகு குறித்த சொற்களால் அவளை மயக்கி, அவளது உடலில் நீந்துகிறான். காமக்குளத்தில் இருவருமே வீழ்கிறார்கள். ஆனால், பெண்பார்க்கும் படலத்திற்குப் பிறகு வரும் இதே காமக்கனவு, புனைவுக்கும் நிஜத்திற்கும் நடுவிலுள்ள கோட்டை அழித்துவிடுகிறது. அந்த உயர்ந்த வெண்ணிற ஆண்மனிதன் அசல் ஆண் என்றும், தான் கருக்கொண்டுவிட்டது போலவும் மயங்குகிறாள். இந்தக் கதைக்கான திறவுகோல் இந்தக் கதையின் மொழிக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. கதைகூறலின் தொனி ஒருவகை FOLKன் தொனியை கொண்டிருக்கின்றது. ( FOLK என்ற சொல்லுக்கு தமிழில் நாட்டார் வழக்காறு என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் எனக்கு சம்மதமில்லை. ஒரு சரியான

சொல்லை விரைவில் கண்டுபிடிப்பேன்). மொழியின் இந்தத் தொனி இக் கதைக்குள் பொதிந்திருக்கும், கந்தர்வ மணம் மற்றும் உறவு கொள்ளாமலே கருக்கொள்தல் எனும் புராணிகத்தின் சாயலைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. புராணிகத்தை, நவீன வாழ்வின் பரப்பில், ஒரு உத்தியாக மட்டும் அய்யப்பமாதவன் கையாள்வதால், கதையின் இறுதியில், பித்துப்பிடித்தவள் போல், இருள் அப்பிய முகட்டைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் மாறுகண் பெண்ணின் துயரம் நம்மையும் அப்பிக்கொள்கிறது, அந்த 'அவன்' யார் என்று கதைக்குள் சென்று தேடும் அவசியம் அற்று.

ஏழேழு ஜென்மத்திற்கும் பாலும் மீனும் வாங்கிக்கொண்டிருக்கும் பூகைக்காரியின் கதையும் தொகுப்பில் நல்ல கதைதான். கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்த, தலைமுடிகளில் பல வெள்ளிக் கம்பிகளாக மாறிவிட்ட, மணமாகாமல், தனிமையில் வாழும் பெண் ஒருத்தி பூனைகளை வளர்ப்பதில், அவைகளுக்கு உணவூட்டுவதில், அவைகளைக் கொஞ்சுவதில், தன் வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்கிறாள். சமூகத்தின் பொதுவாழ்வோடு இணங்கிப்போகாத எதையும் ஈவு இரக்கமற்று, சமூகம் அழித்தொழித்துவிடுகிறது. பொதுவாழ்விலிருந்து விலகி இருப்பவர்களை உளவியல் பூர்வமாக அணுகும் பக்குவம் நம்மில் எவருக்கும் இல்லை. ஒரு கைப்பிடிச் சோறு போன்றே, ஒரு விரல் பற்றும் அன்பைத் தேடாத ஆணோ பெண்ணோ இங்கில்லை. ஆனால் அந்த அன்பைத் தருகிற பூனைகள் விஷம் வைத்துக் கொல்லப்படுகின்றன. முதிர்கன்னிகள் பற்றிய இந்தமாதிரியான கதைகள் இந்தியாவில் மட்டும்தான் வரமுடியும். திருமணத்திற்கு முன்பான உறவு பற்றிய திருமதி.குஷ்பு அவர்களது வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துக்களையே புரிந்து கொள்ளமுமுடியாத போலியான சமூகம் நம்முடையது. அந்தப் பெண் ஏழேழு ஜெனமத்திற்கும் மீனும் பாலும் வாங்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

தொகுப்பின் கடைசியிலிருக்கும் "காதலின் ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது" கதை வெகுசிறப்பான சொற்களால் எழுதப்பட்ட கவிதைக் கதையாக இருக்கிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்றைத்

தியேட்டரில் பர்த்துவிட்டுத் தூங்கியபிறகு வரும் பயங்கரமான கனவு போல கதை ஓடுகிறது. விரட்டி விரட்டிக் காதலிக்கும் தமிழ்த் திரைப்பட வன்முறைக் காதல்கள், இளைய தலைமுறையை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருப்பதை நான் நேரிடையாகப் பார்த்துக் கொண்டிருகிறேன். இந்தக்

கதை, தன் கவிதையின் பெரும்பலத்தில் நின்று, கதையாளர் அய்யப்பமாதவனை ஏமாற்றிவிட்டதாகக் கொள்ளலாம்.

"தொந்திக் கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு" கதை, அற்ப அன்றாட வாழ்வை நகர்த்துவதில் சூழலுக்கும் மனிதனுக்கும் நடக்கும் நுண்ணிய போராட்டத்தை, ஒரு செவ்வியற் புள்ளியில் குவிக்க முயல்கிறது. இரு சிறிய அறைகளுள்ள வாடகை வீட்டில் வாழும் தம்பதிக்கு தொல்லை தரும் ஒரு மூஞ்சுறு எலியைக் கொல்லும் சிரமமான கடமையை, நமது மரபுப்படி, கணவன் ஏற்றுக்கொள்கிறான். கதை தன் போக்கில் நகரும் போதே

ஒரு இணைக் கதையை நமக்குள் எழுதிக் கொண்டே வருகிறது. தாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பது மூஞ்சுறு மட்டுமா? ஒரு அப்பாவிக் கணவனை ஏவிக் கொண்டே இருக்கிற அந்தப் பெண், ஒரு கொத்தனாரைக் கொண்டு எலிப்பாதையை அடைத்துத் தரமுடியாத வீட்டுச் சொந்தக்காரன், இவனது அவஸ்தையை வேடிக்கை பார்க்கிற சக குடித்தனக்காரர்கள், எலிகளைக் கொல்ல நவீன செஸ்போர்டுக் கருவிகளை உற்பத்தி செய்யும் சந்தை, ஒரு உயிரைக் கொல்வதில் ஒரு நியாயமான மனிதனுக்கிருக்கும் தடுமாற்றம் என கதை, தன்னளவில், நவீன செவ்வியற் சிக்கலின் நுட்பமான இழைகளைப் பின்னுகிறது. இத் தொகுப்பின் அனேகக் கதைகள் மையப்படுத்தும், ஆண் பெண் சேர்ந்து வாழ்வதில் இருக்கும் நுட்பமான கீறல்களையே, கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையும் எழுதிச் செல்கிறது.

இதே தம்பதியரை, "குறுக்கு வெட்டுப் பாதைகளில் உலவும் பொய் பேசி" கதையிலும் சந்திக்கிறோம். தனது மறதி காரணமாக, வீட்டின் பூட்டைத் திறக்க முடியாமல் போகும், ஒரு இக்கட்டான தருணத்தை அந்தக் கணவன் கடக்கிற பொழுது அவனுள் ஏற்படும் மனவோட்டங்களாகக் கதை விரிகிறது. புற ஊதாக்கதிர்கள் போன்ற

பார்வைகளை அவன் மீது வீசி பொசுக்கிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசிக்கிறோம். அவளிடம் கேட்டால் அவள் என்ன சொல்வாள்? பீடிக் கதையில் அவனோடு வர மறுக்கிற அதே பெண்தான் இவளும். ஓர் அப்பாவிக் கணவன் எல்லாக் கதைகளிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். இதை, ஒரு அராஜகம் மிக்க ஆணியப் பிரதி

என்று ஏதேனும் ஒரு பெண் கூறினால், நண்பர் அய்யப்பமாதவன் என்ன பதில் கூறுவார்? நான் வேண்டுமென்றா செய்கிறேன் என்று ஒரு அப்பாவியாக நிற்பார். அல்லது சமூகம், சூழல், நுகர்வுக் கலாச்சாரம், உலகமயமாக்கம், காலனியம் என்று பலவாறாக முழுச்சமூக விளக்கம் அளிக்கும் விரிவுரைகளைத் தொடங்கக் கூடும். இது இப்போதைக்கு இப்படித்தான் இருக்கிறது.

அய்யப்பமாதவன், காலம் தாலாட்டும் உண்மையான கலைஞன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கவிதையில் அவர் சாதித்திருப்பது போன்றே, கதைகளிலும் அவர் சாதிக்கமுடியும் என்று நம்புகிறேன். அதற்கு வலையை வாழ்வின் பெரும்பரப்பில் வீசுவதைத் தவிர வேறு வழியில்லை.

**********

தானய் நிரம்பும் கிணற்றடி

சிறுகதைகள்

அய்யப்பமாதவன்

தமிழ்வனம், சென்னை 600076.

விலை ரூ.50/-

--------------------------------------------------------------------------

.சமயவேல்

12, சேக்கிழார் தெரு (மாடி), ஜோஸப் மருத்துவமனை அருகில், பீ பீ குளம், மதுரை 625002.

--------------------------------------------------------------------------

1 comment:

  1. புத்தகத்தைப் படிக்கத் தூண்டும்
    நல்லதொரு மதிப்புரை.

    ReplyDelete