Friday, July 31, 2009

தனிமையின் பள்ளத்தாக்கில்
சி மோகனின் தண்ணீர் சிற்பம்ஒவ்வொரு மனிதனும் தனிமனிதனே என்பது ஓர் அரை வாக்கியம் என்றால் எல்லா மனிதர்களும் ஏதேனும் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் தான் என்பதும் ஓர் அரை வாக்கியம் தான். இந்த இரு வாக்கியங்களையும் இணைத்துப் படித்தாலும் சரியாக இருப்பது தான் வேடிக்கை. நகுலன் தனது இளம்நண்பர்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்கிற ஆலோசனைக்கு காரணமாகச் சொல்வது மனிதன் தனியானவன் என்பதைத்தான். அதற்காக திருமணம் ஆனவர்களை தனிமையின் துயரம் தீண்டுவதில்லையா? திருமணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என எல்லா மனிதர்களையும் புறக்கணிப்பின் தனிமை கொடும் துயரப் பள்ளத்தாக்கில் எறிந்து விடுகிறது. மனிதன் குழுவாக இருக்கும் பொழுது புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால் தனிமனித உறவுகளில் வீசப்படுகிற புறக்கணிப்பின் கொடுவாள் நம் அனைவரது மார்பிலும் பாய்ந்து துடிக்கத் தொடங்குகிறோம்,

சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று சந்திக்கும் எத்தனிப்பில் தனிமையை தனிமையின் பள்ளத்தாக்கிலேயே சந்தித்து அதனோடு சமநிலை குலையாமல் உவகையோடு உரையாடும் சி மோகனை தண்ணீர் சிற்பம் தொகுப்பில் சந்திக்கிறோம், காலத்தின் தனிமையில் இருத்தலின் வேதனைகளையும் காலமற்ற தனிமையில் காலாதீதம் உதிர்க்கிற புங்கைப் பூக்களையும் பெறுவதை முதல் கவிதையிலேயே பார்க்கிறோம். இத் தொகுப்பின் முன்னுரையில் சி.மோகன் தன் கவிதைகளின் தொடுகோடுகளையும் வீச்சுகளையும் சரியாகக் கணிக்கிற பக்குவம் இருக்கிறது. இளம் கவிஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

வாழ்வின் பொதுப்பரப்பில் விரிகிற எண்ணற்ற பாதைகளில் எந்தப் பாதையையும் தேர்ந்து கொள்ளும் சுதந்திரம் நமது வாழ்வின் ஒழுங்கற்ற பின்னலான அமைப்பாலும் தனிப்பட்ட புதிர்த் தருணங்களினாலும் சூழலின் மாயச் சவுக்காலும் பறிக்கப்பட்டு விடுகின்றன. அவள் அப்படி ஆனதால் அவள் யோகக்காரி என்றும், இவன் இப்படி ஆனதால் இவன் புத்திசாலி என்றும், அவன் தொடர்ந்து துன்பப்படுவதற்கு அவனது மடத்தனமே காரணம் என்றும் நாம் பலவாறாக தேற்றம் கண்டாலும் எவர் எவர் எப்படி எப்படி ஆவார்கள் என்பதற்கான சரியான காரணங்களை முழு முற்றாக யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி உயிர்ப்பின் பரப்பில் எழும் மாயத் தருணங்களின் குமிழ்கள் மறைத்து விடுகின்றன. படைப்புகளின் மர்மப் பாதைகளில் அலைகிற கலைஞர்களுக்கும் இதே கதிதான் போலும்.

நடுத்தர வயது கடந்து கொண்டிருக்க. ஒரு தனித்து வாழும் ஜீவனாக சி.மோகன் இக் கவிதைகளில் காணக் கிடைக்கிறார். இவரது இருப்பிடத்தில் சின்னஞ்சிறு பூச்சிகளும் பல்லிகளும் வண்டுகளும் எறும்புகளும் தவளைகளும் சகஜமாய் அலைகின்றன. இதற்கு வசித்த வீடுகளில் இருந்த கரப்பான்களோ பதுங்கிக் கொட்டமடித்த எலிகளையோ இந்த வீட்டில் கானோம் என்கிறார். இதற்கு முந்தைய வீடுகளில் இவரோடு வசித்த மனிதர்களையோ குழந்தைகளையோ பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.
மேலும் ஒரு கறுப்புப் பூனையொன்று தனது ஒளிரும் மஞ்சள் கண்களால் கண்கானிக்கிறது. இந்தப் பூனையை ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தும் வரிகளை கவிதையின் பின்பகுதியில் வாசிக்கிறோம். பெண்களுடன் மட்டுமல்ல பூனைகளுடனும் ஒரு நிச்சயமற்ற உறவை சி.மோகன் ஏற்றுக் கொள்கிறார். நிச்சயமின்மையின் புதிர் நிறைந்த கொடிகளை மேலும் சில கவிதைகளில் படர விடுகிறார். என் வீட்டில் தவளைகள்/தத்தித் திரிகின்றன/வெகு ஆனந்தமாய்/ என்று முடிகிற ஏழாம் எண் கவிதையில் அரிஸ்டாட்டிலை வம்புக்கிழுக்கிற அளவுக்கு இவரது தனிமை இடமும் காலமும் அளிக்கிறது. இந்தத் தனிமை இவரை பகல் நேர, மாலை நேர டாஸ்மாக் பார்களுக்கு அழைத்துப் போகிறது. இத் தொகுப்பின் அருமையான கவிதைகளில் ஒன்றாக டாஸ்மாக் பார் கவிதை அமைந்து விட்டது. நமது நிகழ் கலாச்சாரத்தின் கொண்டாட்ட மையங்களாகிவிட்ட பின் நவீனத்துவ ஸ்தலங்களான டாஸ்மாக் பார்களை இந்த அரசு அப்படியே வைத்துப் பேண வேண்டும் என்று எல்லாத் தமிழ் கவிஞர்கள் சார்பிலும் நான் கேட்டுக் கொள்கிறேன். டாஸ்மாக் கடைகள் நம்பர்களால் அழைக்கப்படுவது போலவே இத் தொகுப்பின் கவிதைகளையும் எண்களாலேயே நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இத் தொகுப்பு முழுவதும் இவரது சுய சித்திரத்தை வரைகிற சொற்களே நிறைந்திருப்பதை இவரே ஏற்றுக் கொள்கிறார். அதுவும் இவரது அக உலக ரகஸ்யங்களைக் கைப்பற்ற உதவியிருப்பதாகவும் கூறுகிறார். இந்தக் கவிதைகளில் வெளிப்படும் பிரதான அக உலகச் சிக்கலும் ரகஸ்யமும் ஆனந்தமும் அவஸ்தையும் எல்லாமும் ஆண்-பெண் உறவையே மையமிடுகிறது. ஆதியிலிருந்து தொடர்ந்து வருகிற இந்த ஆண்பெண் உறவின் மையம் உயிருள்ள குருதியின் அதே ஈரத்தோடு, எலும்பும் சதையும் வணைகிற அதே உயிர்வடிவத்தோடு, வேட்கையின் அதே தாகங்க்களோடு, காம நதிகளின் அதே குமுறல்களோடு, பாலுறவென்னும் அதே இணக்கமான வன்முறையோடு எல்லாக் காலங்களிலும் மனிதர்களைத் துரத்திக் கொண்டே அலைகிறது.

இந்தத் தண்ணீர் சிற்பம் தொகுப்பில் வரிசை குலைத்து அடுக்கப்பட்டிருக்கும் அகக் கவிதைகளில் ஆண்-பெண் உறவின் மகத்துவத்தைக் கொண்டாடும் ஆனந்த முகம் இரு கவிதைகளில் மட்டும் பதிவாகி உள்ளது. 23ம் எண் கவிதை ஒரு களிப்பு மிக்க இரவு நாடகத்தைப் பதிவு செய்கிறது. ஒரு மழை இரவில் அருகருகான அறைகளில் இருந்தபடி அலைபேசியில் சொற்களை வைத்து சூதாடுகிற ஆணும் பெண்ணும் அதிகாலையில் முத்தமெனும் மதுர வானில் பறக்கத் தொடங்குகிறார்கள். இதற்கு அடுத்த கவிதையும் காதலின் இனிய தருணங்களைப் பதிவு செய்கிறது, தனிமையின் சாம்பல் நிறம் புலர்ந்து ஒளிர் மஞ்சளாகிறது. கூடலின் முடிவில் எதை எதையோ பரிசளித்துக் கொள்கிறார்கள் ஒரு ஆணும் பெண்ணும். அந்த ஆண் அவனது நெடுநாள் உறவான மொழியை அவளுக்கு சிநேகிதமாக்குவது குறித்து நம் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
உன் கவிதையை நீ எழுது என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பதை இந்த இடத்தில் அவசியம் ஞாபகம் கொள்ள வேண்டுமா? அவள் கவிதையை அவன் எழுதுவதில் என்ன தவறிருக்க முடியும்? அது கவிதையாய் இருந்தால் போதும்.

ஆனால் இந்த இரு கவிதைகள் தவிர பிற அனேக கவிதைகள் காதலின் எதிர்மறையான தருணங்களை பெரும் துயரத்துடனும் உக்கிரத்துடனும் பதிவு செய்கின்றன. அவள் ஒரு ரகஸ்யத் தோட்டத்தை பராமரித்து வருகிறாளெனத் தொடங்கும் 17ம் கவிதையில் காதல் பரிமளிக்கும் அவளது தோட்டத்தில் ஆண் தலை கொய்யப்பட்டு பதியமிடப்படுகிறான்.
கொய்யப்பட்ட தலைகளைக் கொண்டு
பந்தாட்டம் ஆடுகிறாள்
வெகு விமரிசையாய்
அவள் வித்தைகளில்
குதூகலிக்கின்றன பந்துகள்.
என்று கவிதை முடிகிற்து. நமது சமகால ஆண்-பெண் உறவின் நிலவறைகளில் இவ் வகையான அதிர்வூட்டும் அகக் காட்சிகளைக் கொண்ட இக் கவிதை ஆழ்மனப் படிமப் பதிவுகளை வெளிக் கொணர்வதில் வெற்றி பெற்றிருக்கிறது. புறக்கணிப்பின் துயரம் பெரும் புலம்பல்களாகவும் ஏக்கங்களாகவும் ஜெபங்களாகவும் பல வரிகளில் ஓலமிடுகின்றன.
ஒரு கவிதையில் உடைந்த கண்ணாடிக்குள் சிக்குண்டு தவிக்கும் ஆண் பறவையை மீட்கும் வழியறியாது தத்தளிக்கிறார். குதிரை மீதமர்ந்து வந்து புணர்ந்து மறைந்தவளின் குதிரைக் குளம்பொலியை ஏக்கத்துடன் கேட்டபடியே அயர்ந்திருக்கிறார் ஒரு கவிதையில். வஞ்சனையின் செடிகள் அவனிலும் அவளிலும் வளர்ந்து அவர்களது கண்களில் பூத்துக் குலுங்குகின்றன 11ம் எண் கவிதையில்.
லூசலோமி என்ற பெண் நீட்சேயை புற்க்கணித்ததின் காரணமாகத்தான் `இவ்வாறு பேசினான் ஜாரதுஷ்டிரன்' நூல் எழுதப்பட்டதாம். லூசலோமி நீட்சேயை புறக்கணித்துவிட்டு கவிஞர் ரில்கேயை மணந்து கொண்டார். நீட்சேயும் அவரது நண்பர் பால் ரீயும் ஒரு மாட்டு வண்டியை இழுத்துக் கொண்டிருக்க லூசலோமி அவர்கள் மீது சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்கிற ஒரு விசித்திரமான நிழற்படம் இருக்கிறதாம். இங்கும் லூசலோமிகள் இருக்கிறார்கள். அவர்கள் ரில்கேக்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் பொதுப்பரப்பில் கலாச்சார கொடுவாள் கொண்டு பெண்களை அடக்கும் ஆண்கள் அக வாழ்வில் சாட்டையடி பெறுவது பெரும் நகைமுரண் தான். வினோதங்கள் நிரம்பியது தான் நம் வாழ்வும் காலமும்.

பேரினக் கலாச்சாரங்கள் தங்களது பல நூற்றாண்டுகள் வாழ்வனுபவத்தில் தகவமைக்கிற கூட்டு நனவிலி, ஆண்-பெண் உறவின் பல்வேறு நிலைகளான திருமணம், சிநேகிதம், ஒற்றை இணை, கூட்டு உறவு, சுதந்திரப் பாலுணர்வு, பணப்புணர்வு, வன்புணர்வு, தற்செயற் புணர்வு குறித்து தனித்த நனவிலிகளில் ஆழப் பதித்திருக்கும் குறிப்புகளை கட்டவிழ்த்து வாசித்துப் பதிவு செய்ய முடியாமல் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இந்த ரீதியில் சி.மோகனின் கவிதைகளை நாம் அணுக வேண்டும்.
சி.மோகனின் அகக் காயங்களை அவரது கவிதைகள் குணப்படுத்தியிருக்கின்றன என்று தான் கருதுகிறேன். எனவேதான் இந்தக் கவிதைகள் மூலம் இளமை வசப்பட்டிருப்பதாக சி.மோகன் கூற முடிந்திருக்கிறது. இந்த இளமை இவரை தனிமைப் பள்ளத்தாக்கிலிருந்து விடுவித்து மேலும் சிக்கலான உறவுகளையும் சிறந்த கவிதைகளையும் தரும் என்று நம்புகிறேன்.

SAMAYAVEL 20.06.2009

No comments:

Post a Comment