நூல் மதிப்புரை: சமயவேல்

சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை”

எனது மனதைத் தொடுகிற, எனது அகவுலகுக்கு நெருக்கமான கதைகளையே நான் விரும்பி வாசிக்கிறேன். ஒரு இதழாசிரியர் அல்லது விமர்சகர் அல்லது மதிப்புரையாளர் என்ற தோரணையில் நான் கதைகளை வாசிப்பதில்லை. அதே போல ஒரு “கற்றல்” ஆகவும் கதைகளை வாசிக்க முடியாது. சில கதைகளில் அது தானாக நிகழும். அது ஒருவகை மன வேதியியல். தற்செயலாக சுனில் கிருஷ்ணனின் “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” என்னும் சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. கதைத் தலைப்பைப் பற்றிய கவனமின்றியே வாசிக்க ஆரம்பித்தேன். கதை எனது மனதைத் தொட்டது.

நாவன்னா லேனா என்னும் வாழ்வின் இறுதிப் பகுதியில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனிடம் கருணையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதை இது. சின்னஞ்சிறிய திறப்புகளைக் கொண்ட ஒரு பூட்டுதலுக்குள் இருப்பது தான், மனிதர்களுக்கு பாதுகாப்புணர்வைத் தருகிறது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதற்குள் நம்மையும் நமது மனிதர்களையும் பொருள்களையும் போட்டு பூட்டிக் கொள்வதைப் போலவே பல காரியங்களை நாம் செய்கிறோம். வாழ்வுச் சூழல் நாவன்னா லேனாவையும் இவ்வாறு பூட்டி வைக்கிறது. மனைவி இல்லை. வேலையும் இல்லை. மேற்கு மாம்பலத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அவர் மகன் மருமகள் பேத்தியோடு ‘ஒண்டிக் கொள்வதில் பெரிய வருத்தமோ கஷ்டமோ இல்லை’. குழந்தையை இவரிடம் ஒப்படைத்துவிட்டு மகனும் மருமகளும் வேலைக்குப் போய்விடுவார்கள். தாத்தா தூளியை ஆட்டிக் கொண்டே “ஆயர்பாடும் மாளிகையில்...” பாட்டின் கடைசிக் கண்ணியான “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்..போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ” பாடினால்தான் பேத்திக்குத் தூக்கம் வரும். தாத்தாவையும் பேத்தியையும் இணைக்கும் இந்தப் பாட்டும் அதன் கடைசி வரியுமே, பூட்டிய வாழ்விற்குள் மனிதர்கள் பெறுகின்ற ஆசுவாசம். மனதின் ஈரத்தைத் தக்க வைத்து வாழ்வைத் தொடரச் செய்யும் தருணங்களும் இவைகளே. இந்தியாவில், முதியவர்களைப் பொறுத்தவரை, வாழ்வில் மேற்கொண்டு திறப்புகள் என்பது சாத்தியமில்லை என்பதால், இத்தகைய ஆசுவாசங்களையேனும் அவர்களுக்கு அளியுங்கள். இந்த ஆசுவாசத்தை, ஈரத்தை வாசகனுக்கும் கடத்துவதில் இந்தக் கதை வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, இந்த ‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்பின் இதர கதைகளையும் வாசித்தேன்.

அடுத்ததாக நான் வாசித்த கதை வாசுதேவன். மனசாட்சியுள்ள மருத்துவரும் எழுத்தாளரும் ஒரே இனம் தான். ஆனால் எழுத்தாளரை விட பொறுப்புடனும் உடனடியாகவும் இயங்க வேண்டியவர்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஓர் ஆயுர்வேத, பயிற்சி மருத்துவரின் பார்வையில் பதைபதைப்புடன் சொல்லப்பட்டிருக்கும் இக்கதை, வாசிப்பவர்களுக்கு பெருந்துயரை உண்டாக்குவது. "ஒகட்டிலேதுப்பா ஒகட்டிலேது..." (ஒன்னும் இல்லப்பா ஒன்னும் இல்லை) என்னும் அப்பாவின் ஆறுதற்சொற்களைக் கேட்டவாறே இறந்து கொண்டிருக்கும் இளைஞன் வாசுதேவன். பயிற்சி மருத்துவர்கள் அவனைப் பிணம் என்றே அழைக்கிறார்கள். பிரபல பெரிய மருத்துவரின் பேராசை காரணமாக பயிற்சி மருத்துவர்கள் வாசுதேவனுக்கு அபியங்கம்,கிழி போன்ற சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள். உயிர் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் எலும்புக்கூடும் வாசுதேவன் என்னும் மனிதனாக, பயிற்சி மருத்துவர்கள் மனதில் ஒரு சிறிய இடம் பிடிக்கிறான். ரொம்ப நாள் பழகிய மாதிரியான ஒரு உணர்வு கூட அவர்களுக்கு வருகிறது. ஒரு குழந்தையென நியமப்படி. வாசுவைக் கவனித்துக் கொள்ளும் அவனது அப்பா, இவர்களிடம் வாய் திறந்து கேட்டு விடுகிறார். இவர்கள் உண்மையைக் கூற முடியாமல் ஆகிறது. ஆனால் அவனது அம்மா ஒருநாள் வாசுவைப் பற்றி நெஞ்சுருகப் பேசுகிறார். "...... உங்களையும் எங்க பிள்ளையா நெனச்சு கேக்குறோம்" என்று அந்த அம்மா தழுதழுத்த போது கதைசொல்லியான மருத்தவர், "...சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக் கூட மூச்சு நின்னுடும். அதான் அவர் நிலைமை" என்று உடைத்துவிடுகிறார். இந்த இடத்தில் ஒரு திகைப்பின் புள்ளியில் கதை சுழன்று நிற்கிறது. அடுத்து என்ன நடக்கும்? கதை எப்படி முடியும்? என வாசகனை யோசிக்க விடுகிறார் கதைசொல்லி.

ஒரு கதையின் முடிவை பெரும்பாலும் கதாசிரியர்கள் எழுதுவதில்லை. இது வரையிலும் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கதை தான் அதன் முடிவையும் தீர்மானிக்கிறது. ஆனால் கதையோ கதாசிரியர் எழுதியது தானே. பிறகு ஏன் முடிவைக் கதாசிரியர்கள் எழுதுவதில்லை என்று கூற வேண்டும்? இங்கே ஒரு கதாசிரியன் அவன் இதுகாறும் எழுதிய கதைக்கு வெளியே நின்று, வலிய “சிந்தித்து” ஒரு முடிவை எழுத முடியாது. அந்தக் கதை எழுதப்பட்ட அதன் போக்கிலேயே அதன் முடிவும் இருக்கும். கதை நெடுக, நிகழ்வின் பல்வேறு மடிப்புகளையும் அவசியமான அனைத்துக் குரல்களையும் காணல்களையும் நுட்பமாகக் கையாளும் படைப்பு மனம், சரியான முடிவை எட்டுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை நிறுத்தப்படுகிறது. ஏதோ ஒரு ஊரில் வங்கியில் பணிபுரியும் வாசுதேவனின் அக்கா வசுமதி (கணவனை இழந்தவள்) மாறுதலில் தனது குழந்தையுடன் அந்த வீட்டை  அடைகிறாள். வாசுதேவன் இறந்து போகிறான். மரண வீட்டில் சோஃபாவுக்கருகில்  அந்தக் குட்டிப் பெண் குழந்தை “தனக்குள் சிரித்துத் திளைத்தபடி தன்போக்கில்” விளையாடுகிறது. ஆனால் கதையின் கடைசிப் பக்கத்திற்கு முந்தைய பக்கத்தில் “ பிரபஞ்ச நியதிகள் எல்லாம் இதுதான் என்று  தெளிவாகத் துலக்கமடைந்துவிட்டது போல் தோன்றியது” எனவும் “நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதியாகத் உறங்கினேன்” என்றும் சுனில் கிருஷ்ணன் எழுதும்போதே கதை முடிந்துவிடுகிறது. கதையை வாசித்த நாமும் நிம்மதியாக உறங்கலாமா? இந்தக் கதையின் நெருக்கடியைப் போன்ற ஒரு சூழலில், வண்ணநிலவன், அவரது எஸ்தர் கதையின் இறுதியில் எழுதுகிறார்: “எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. வெகு காலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.” அந்தக் கதையையும், பாட்டி இறப்பு நிகழும் இரவில், மாடுகள் விட்ட பெருமூச்சையும் வேகமாக வீசிய காற்றையும் பல காலம் மறக்க முடியாமல் இருந்தேன். ‘கருணைக் கொலை’ என்பதின் பொருள், கொலையின் கருணையில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த இரண்டு கதைகளும் நிரூபிக்கின்றன. இருவருமே உண்மையில் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை வாசகனின் யூகத்திற்கே விடுகிறார்கள்.

இறந்து கொண்டிருப்பவரைப் பற்றிய இன்னொரு கதையும் இத்தொகுப்பில் உள்ளது. அதற்கு அவர் நேரடியாக ‘அம்புப் படுக்கை’ என்றே பெயர் வைத்துவிட்டார். ஒவ்வொரு மரணப் படுக்கையுமே அம்புப் படுக்கை என்பதை ஒரு மருத்துவராக இருக்கும் சுனில் கிருஷ்ணன் மிக நன்றாகவே அறிந்திருக்கிறார். ஆனால் அவரது தாத்தா இன்னும் ஒரு படி மேலேறிச் சொல்கிறார்: “....குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்...அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம்...ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கதைதான்...” 
இந்தக் கதை நாயகர் ஆனாரூனா என்னும் வெள்ளந்தியான மனுஷர் இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து தப்பி ஓடிவந்தவர். அவருக்கு மரணம் தன்னைத் தொடர்ந்து வேட்டையாடுவதாக ஒரு பயம். ஒவ்வொரு முறையும் தான் தப்பித்துவிடும் சாகசத்தை கதாரூபங்களில் உலவ விடுகிறார். பாவனை மனிதர்களுக்கு கதைகளின் கதகதப்பு எப்போதுமே தேவையிருக்கிறது. இறப்பு வீடுகள் போன்ற பாவனை செய்ய வேண்டிய தருணங்களிலும் இடங்களிலும், மனிதர்கள் தங்களது ஞாபகங்களின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் எல்லாக் கதைகளையும் அடுக்கடுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். இதைத் தடுப்பதற்காகவே சில சமூகங்களில் இறப்பின் இரவுகளில் கதைகளை வாசிப்பதற்கென்றே ஒருவர் இருப்பார். அவரோ இறப்பின் இரவை கதைகளின் மூலமான ஆற்றுப்படுத்தலாக, பிறிதொரு தளத்துக்கு மாற்றிவிடுவார்.

அந்த ஆனாரூனா இரும்புக் கட்டிலில் தனது இறுதிப் பயணத்தில் இருக்கிறார். மரணக் குறிகளில் தேர்ந்த வைத்தியர் தாத்தா தண்டுவட டி.பி.யில்  இறந்து விட்டதால் அவரது பேரன் சுதர்சன், வைத்தியக் கல்லூரியில் அண்மையில் தான் அடியெடுத்து வைத்திருப்பவன், நாடி பார்க்க அழைத்து வரப்படுகிறான். தாத்தாவின் கட்டாயத்தின் பேரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் சுதர்சன் “நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்?” என எரிச்சலடைகிறான். மிகக் கொடூரமான வலியைக் கொடுக்கும் தண்டுவட டி.பி. நோயோடு தாத்தா தனது மரணத்தை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்கிறான். “இன்னும் சக்கரவட்டம் வரல” என்று அவர் மரணக்குறிகளை மட்டும் நினைவு கொள்ளும் அவரது கடைசி நாட்கள் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. “மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான்....நாடி ஒரு அலை போல எழுந்தது...மீண்டும் பேரலை விரல்களைத் தொட்டுச் சென்றது” (பக்கம் 73) என்னும் பத்தியை ஒரு மருத்துவரும் கலைஞனும் சேர்ந்து எழுதுகிறார்கள். இறப்பவர்களை மரணத்திற்கு தயார்ப்படுத்தும் கடைசிப் பொழுதுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமையும். அந்த சமயத்தில், மனிதர்கள் குடும்பமாகவும் தெருவாகவும் கிராமமாகவும் சேர்ந்து வாழ்தலின் அருமை புரியும். நான் மருத்துவமனையில் சாக மாட்டேன், வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என எதற்காக அடம் பிடிக்கிறார்கள் என்பதுவும் புரியும். குடும்பத்திலும் நட்பிலும் ஆட்கள் மாறி மாறி அவருக்குத் தேறுதலான சொற்களைக் கூறுதல், தலையைப் பிடித்துக் கொள்ளுதல், நெஞ்சை நீவிவீடுதல், முதுகோடு தன்மேல் சாய்த்துக் கொள்தல் என அவரை நிம்மதியாக வழியனுப்ப முயலும் இறுதிக் காட்சிகள் மிகக் கனத்தவை. உலகின் பல சமயங்களிலும் இதற்கான விரிவான சடங்குகள் இருக்கின்றன. மரணக் குறிகள் பற்றியும் மரணத்திற்குப் பின்னும் 49 நாட்கள், தான் வாழ்ந்த இடத்தையே சுற்றியலையும் ஆன்மாக்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும் விவரிக்கும் “திபெத்திய மரண நூல்” மிக முக்கியமானது.
மொத்தம் பத்துக் கதைகள் இருக்கும் இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் வாசித்துவிட்டேன். ஆனால் அவைகள் பற்றி எழுதும் அளவுக்கு, எதுவும் எனது மனதைத் தொடவில்லை. ஒரு எழுத்தாளனுக்கு முதலில் எதையெல்லாம் எழுத வேண்டும் எதையெல்லாம் எழுதக்கூடாது எனத் தெரிய வேண்டும். இரண்டாவதாக எழுத வேண்டிய கதைகள் எவ்வாறான வடிவத்தில், சொல்முறையில் அதிகபட்சம் துலக்கம் பெறும் என்பதை தனது வித்வம்,கற்பனாயூகம் வழியாக செயல்படுத்துவதற்கான திறம் வேண்டும். எடுத்துக்காட்டாக  சொர்க்கம்-நரகம் என்னும் கருத்தாக்கத்தின் மேல் அக்கறை இல்லாத ஒருவர் ‘ஆரோகணம்’ என்ற கதையை வாசிக்கவே முடியாது. அந்தக் கருத்தாக்கத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவர், காந்தியின் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவராகக் கூட இருக்கலாம்.  


மரணத்தின் அருகில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கனத்த சவாலான கதைகளை எழுதியிருக்கும் சுனில் கிருஷ்ணன் மேலும் சிறந்த கதைகளை எழுத முடியும் என்று நான் நம்புகிறேன்.


மதுரை 19.௦2.2018     

 




            

Comments

  1. நல்லதொரு சிறுகதை தொகுப்பை வாசிக்க விமர்சனம் தந்தமைக்கு வாழ்த்துகள். தொடர்ந்து பிளாக்கில் எழுதவும்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts